இந்தப் பதிவு நகைச்சுவைக்காக மட்டுமே, இதில் வரும் பெயர்கள், சம்பவங்கள் யாவும் கற்பனையே, யாரையும் குறிப்பிடுவன அல்ல.  இங்கு இடம்பெற்றிருக்கும் படங்களுக்கும் இந்தப் பதிவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.


கட்டிப்புளி படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு தனது அலுவலகத்தின் மோட்டுவளையைப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருக்கிறார் இயக்குனர் நடிகர் கசிக்குமார்.  அவரிடம் கதை சொல்வதற்காக மூன்று முக்கிய இயக்குனர்கள் காத்திருக்கிறார்கள்.






முதலாவதாக போட்டோகிராப் பட டைரக்டர் 'பேரன்'

"போட்டோகிராப் டைரக்டரா, அருமையா காதல் கதை சொல்லுவாரே, வரச்சொல்லு, பேசுவோம்" தன் உதவியாளரிடம் சொல்கிறார் தாடியை தடவிக்கொண்டே...


"வணக்கம் கசிக்குமார் சார்"

"வாங்க வாங்க பேரன், எப்படி இருக்கீங்க?"

"நல்லா இருக்கேன், நீங்க?"

"சூப்பரா இருக்கேன், என்ன ரொம்ப நாளா படமே எடுக்கலையா, ஆளையே காணோமே"

"இல்ல, கொஞ்சம் நடிப்புல இறங்க்கிட்டதுனால என்னால கதை எழுதுற மூடுக்கு வரமுடியல.  ஆனா ஒன்னு, உங்க கட்டிப்புளி பாத்ததிலிருந்து என்னால மனச கட்டுப்படுத்த முடியல.  சூப்பரா ஒரு கதை ரெடி பண்ணி கொண்டுவந்துட்டேன்,"

"அப்படியா, சொல்லுங்க கேப்போம்"






டைரக்டர் பேரன் தனது பாணியில் கதை சொல்ல ஆரம்பிக்கிறார்.  "அதாவது, உங்களுக்கு கல்யாணம். அதுக்கு பத்திரிக்கை கொடுக்க உங்க பழைய காதலியத் தேடி கேரளா போறிங்க"

"என்னது, என்னது, நான் கேரளாவுக்கா? ஏன்?"

"கதைப்படி கேரளாவுல நீங்க ஒரு அஞ்சு வருஷம் வேல பாக்குறிங்க.. அதனால தான்"

"கேரளா வேண்டாம், கதைய மாத்துங்க... ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் இந்தமாதிரி ஏதாவது டவுன்ல வச்சிக்கலாம்.  ம்... மேல சொல்லுங்க"

பேரன் கொஞ்சம் டென்ஷன் ஆகிறார்.  'இந்த ஆளு ராஜபாளையத்த விட்டு வரமாட்டார் போலருக்கே, ஓடோடிகள்-ல ஆரம்பிச்சு கட்டிப்புளி வரைக்கும் எடுத்தாச்சு.. இன்னுமா அங்க லொக்கேசன் இருக்கு!'

"இல்ல கசிக்குமார் சார், கதைப்படி நீங்க கேரளாவில வேலைக்கு போறிங்க, அங்க பாஷை தெரியாம முழிக்கும்போது ஹீரோயின் உங்களுக்கு ஹெல்ப் பண்றா. அப்படியே உங்களுக்குள்ள ப்ரெண்ட்ஷிப் ஆரம்பிக்குது.  அப்படியே அது லவ்வாகி அந்த எடத்துல ஒரு சூப்பர் பாட்டு வைக்கிறோம்.  நீங்க தமிழ்ல பாடுறிங்க, ஹீரோயின் மலையாளத்துல பாடுது. எப்படி?"

"ஆஹா சூப்பர் பேரன், இருந்தாலும் கேரளா வேண்டாம், ராஜபாளையமே வச்சிக்கலாம்.  ஹீரோயினா நம்ம குஷ்மி மேனனையே போட்டுரலாம்"

'ம்க்கும், இவருக்கு கேரளா வேண்டாமாம், கேரளா ஹீரோயின் மட்டும் வேணுமாம்'







"என்ன பேரன் ஒண்ணுமே பேச மாட்டங்கிறிங்களே"

"ஆங், சரி சார், இப்போ நீங்க கல்யாண பத்திரிக்கை கொடுக்கப் போறிங்க"

இடைமறித்து, "ஆ, அப்போ ஒரு பூனை குறுக்க போகுது, நான் என்ன செய்யிறேன் தெரியுமா? ஊர்ல இருக்கிற எல்லா பூனையையும் புடிச்சி கட்டிப்போட்டுடறேன். அங்க பூனைகிட்ட ஒரு பஞ்ச் டயலாக் பேசறேன். 'மனுஷங்க போகும்போது பூனை குறுக்க போச்சுன்னா அது அவங்களுக்கு மட்டும்தான் அபசகுனம், ஆனா நீ வரும்போது நான் குறுக்க வந்தா அது உன் இனத்துக்கே அபசகுனம், எப்படி?"

பேரன் நிலைகுலைந்து போகிறார்.  'அய்யய்யோ, தெரியாம இந்தாள் கிட்ட வந்து மாட்டிக்கிட்டோமே, நல்லதா ஒரு காதல் கதை சொல்லலாம்னு வந்தா பூனை கிட்ட பன்ச் டயலாக் பேசறேங்கிறாரே, இது சரிவராது, எஸ்கேப் ஆகிட வேண்டியதுதான்'

"சார், இப்போ நான் உங்களை சரியா புரிஞ்சிக்கிட்டேன், நீங்க சொல்ற கதை வேற, நான் கொண்டுவந்தது வேஸ்ட், உங்களுக்கு ஏத்த மாதிரி சூப்பரா ரெடி பண்ணிட்டு நாளைக்கே வர்றேன்" என்று சொல்லி விடைபெற்று ஓட்டம் பிடிக்கிறார்.

===============

அடுத்ததாக வருகிறார் இயக்குனர் பெங்கட் கிரபு




"மொதல்ல டைட்டிலை சொல்லுங்க" என்கிறார் கசிக்குமார்.

"கத்தி"

"என்னது, கத்தியா? எனக்கு ஏத்த டைட்டில்தான்"

"ஆமாண்ணே, டைட்டில் கத்தி, A BENKAT KIRABU மொக்கை அப்படின்னு கேப்ஷன் வைக்கிறோம்"

"ஆஹா, சூப்பர், எனக்கு ஏத்த மாதிரி டைட்டில் வச்சிருக்கீங்க, கதை சொல்லுங்க"

"அண்ணே, கதையெல்லாம் ஒண்ணுமே இல்ல, ஊர்ல நாலு தாடிக்கார ப்ரெண்ட்ஸ் சல்லித்தனம் செஞ்சிட்டு இருக்கீங்க,   உங்க நாலு பேரையும் பிரிக்கறதுக்கு ஊர்க்காரங்க சதி பண்றாங்க, இதத் தெரிஞ்சிக்கிட்ட நீங்க நாலு பேரும் சாமி நகைய திருடிட்டு கோவாவுக்கு ஓடிடறிங்க.  அதுக்கப்புறம் ஒரே தண்ணிதான், குஜால்தான்.  நீங்க பண்ற அட்டூழியத்தப் பாக்கற ஆடியன்ஸ் வயித்தெரிச்சல் படுறாங்க.  அப்புறம் அப்படி இப்படி பண்ணி கிளைமாக்சில் நீங்க நாலு பேரும் ஊருக்கு வந்து செட்டில் ஆயிடறிங்க. சரியா?"

"எல்லாம் சரி, நாலு பேரு யார் யாரு?"

"ஒண்ணு நீங்க, இன்னொருத்தர் என் தம்பி க்ரைம்ஜி, மத்த ரெண்டு பெரும் வேற யாரையாவது போட்டுக்கலாம்"

"என்னது, க்ரைம்ஜியா, அவர் கூடல்லாம் நம்மால நடிக்க முடியாதுப்பா"

"இல்லண்ணே, நான் எடுக்குற எல்லா படத்துலயும் அவனுக்கு ஒரு முக்கியமான ரோல் குடுக்குறது வழக்கம், அதனால தான்" என்று இழுக்கிறார்.

"இல்ல, இந்த காம்பினேஷன் நல்லாருக்காது, க்ரைம்ஜிக்கு பதிலா நம்ம சுமோ நாராயணனை போட்டுரலாம். அவர் கூட என் காமெடி ரொம்ப நல்லா இருக்கும்"

"அப்ப க்ரைம்ஜி?"

"நீங்க ரொம்ப சென்டிமென்ட் பாக்கிறீங்க, அவருக்கு வேனும்னா ஒரே ஒரு சீன்ல வர்ற மாதிரி காமெடி ஒண்ணு பண்ணிக்கலாம்"

"இல்லண்ணே, நான் மொண்ணை 600028 படத்துலருந்து எங்காத்தா வரைக்கும் லீட் ரோல் தான் கொடுத்திருக்கேன், இப்போ வரப்போற பெரிய ஆணி படத்துலயும் நல்லா பண்ணியிருக்கார்.  அவர என்னால இப்படி விட முடியாது"


"அப்ப வேண்டாம், நம்ம காம்பினேஷன்ல படம் வரவே வேண்டாம், நீங்க கிளம்புங்க"


விரட்டியடிக்கப்படாத குறையாய் பெங்கட் கிரபு கிளம்புகிறார்.

=====================

அடுத்ததாக வருகிறார், அருவா டைரக்டர் கரி.







"ஆஹா, நீங்க தான் எனக்கேத்த டைரக்டர். என்ன டயலாக், என்ன பஞ்ச், கலக்குறீங்க"


"ரொம்ப தேங்க்ஸ் அண்ணே, கதை சொல்லவா?"

"வேண்டாம், நானே சொல்றேன், படத்து பேரு அருவா, கதையெல்லாம் ராஜபாளையத்துல நடக்குது, தாடி வச்ச நாலு நண்பர்கள், காதல், ஏமாற்றம், சோகம், அழுகை, அம்மா செண்டிமெண்ட், நம்பிக்கை துரோகம் இப்படி எல்லாமே இருக்குது. படத்துல முதல் சீனே பக்கத்து ஊர்க்காரனை கொலை பண்றேன், காரணம் அவன் எங்க ஊர்ப் பொண்ண கிண்டல் பண்ணியிருக்கான்.  அவனை படுக்கவச்சு பட்டாக்கத்தியால கழுத்த கொரகொரன்னு அறுக்கிறேன்.  அப்போ, கேமராவுக்கு பக்கத்துல நின்னு ரெண்டு பேர் ஒரு லிட்டர் ரத்தத்தை என் மூஞ்சியில் ஊத்துறாங்க.  ஏன்னா, அது கழுத்துல இருந்து தெறிச்சு  வர்ற ரத்தம்.  நான்தான் கொலை பண்ணினேன்கிறதை தெரிஞ்சிக்கிட்ட வில்லன் எனக்குத் தெரியாம என்கிட்டே ஆயுதம் எதுவும் இல்லாத நேரத்துல கொலை செய்ய ஆள் அனுப்புறான்.  ஏழு பேர், ஒருத்தன் நடு மண்டையில வெட்டறான், ஒருத்தன் கழுத்துல, ஒருத்தன் கையில, ஒருத்தன் கால்ல, ஒருத்தன் முதுகுல குத்துறான், மொத்தம் முப்பத்தி ரெண்டு இடத்துல வெட்டு விழுகுது.  அப்ப இண்டர்வல்.  நான் செத்துப் போய்ட்டேன்னு ஆடியன்ஸ் நெனச்சிக்கிட்டு இருப்பாங்க.  ஆனா, அங்கதான் வைக்கிறேன் ட்விஸ்ட்.  ஹீரோயின் தன்னோட நகைய வித்து மதுரையில ஒரு பெரிய ஆஸ்பத்திரியில சேர்த்து என்னை காப்பாத்திடறா.  உயிர் பொழச்சு வந்த நான் வில்லன் கூட சண்ட போட்டு அவன் வேட்டியிலேயே அவனை ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் ஸ்டான்டில கட்டிப்போடுறேன்.  அதுக்கப்புறம் வர்ற மோதல்ல அடிதடியாகி கிளைமாக்சில படத்துல நடிச்ச அத்தனை பேரும் செத்துப் போயிடறோம்"


மூச்சு விடாமல் சொல்லி முடித்த கசிக்குமாரை வியப்பாகப் பார்க்கிறார் அருவா டைரக்டர் கரி.


"அண்ணே, தண்ணி குடிங்க" என்று தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொடுக்கிறார்.  கசிக்குமார் அண்ணாந்து தண்ணீர் குடித்துவிட்டு குனியும்போது கரி எஸ்கேப்.


கரியின் மனதில் - 'நான்தான் பெரிய அருவா டைரக்டர்னு நெனச்சேன், இந்தாள் பயங்கரமா இருக்காரே.  இவர் கதை சொல்றதப் பாத்தா என் மூஞ்சியிலேயே ரத்தம் வருதே, நல்லவேளை, தப்பிச்சேன்' என்று தலைதெறிக்க ஓடுகிறார்.


"எங்கயா இந்த ஆளு?" என்று தன் உதவியாளரிடம் கேட்கிறார் கசிக்குமார். அதற்கு அவர் "இல்லண்ணே, நீங்க ரொம்ப கொடூரமா படம் எடுக்குறதா வந்துபோன எல்லா டைரக்டரும் சொன்னாங்கன்னே, எனக்கு என்னமோ அவங்க இனிமே இங்க வரமாட்டாங்கன்னு தோனுதுன்னே" என்கிறார்.


"ஓ, அப்படியா சங்கதி, போங்கய்யா, போங்க, நீங்க இல்லேன்னா என்ன, என் ஆருயிர் நண்பன் கவுத்துறசனி இருக்கான், எனக்காக எத்தனை படம் வேணும்னாலும் எடுப்பான், எங்க கூட்டணி எப்படின்னு தெரியும்ல?"


எல்லாரையும் திட்டிய களைப்பில் மீண்டும் தண்ணீர் குடித்துவிட்டு கவுத்துறசனிக்கு போன் செய்கிறார் கசிக்குமார்.  "நீங்கள் டயல் செய்த எண் தற்போது தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளது, தயவுசெய்து சிறிது நேரத்துக்குப் பின் முயற்சிக்கவும்"  என்று வர என்னாச்சு என்பது போல் தன் உதவியாளரைப் பார்க்கிறார்.  உதவியாளரோ "அண்ணே, இதோ வந்துடறேன்" என்று எஸ்கேப் ஆகிறார்.