ஸ்பெஷல் 26 என்று ஒரு ஹிந்தி திரைப்படம் சமீபத்தில் வெளியாகி சக்கை போடு போட்டது என்பது அனைவரும் அறிந்ததே (அறிந்ததா?).  எண்பதுகளில் நடைபெற்ற போலி சி.பி.ஐ. ரெய்டுகளை மையமாகக் கொண்டு கதை அமைக்கப்பட்டிருக்கிறது.




 

கதை...




முதல் காட்சியிலேயே அக்‌ஷய் குமார் மற்றும் அனுபம் கெர் தலைமையிலான குழு மந்திரி ஒருவரின் வீட்டில் ரெய்டு நடத்துகிறார்கள்.  கிடைக்கும் பணம், நகை மற்றும் டாக்குமெண்டுகளை அள்ளிச் செல்கிறார்கள்.  அவர்கள் போலியான சி.பி.ஐ ஆபிசர்கள் என்பது பின்னர்தான் தெரியவருகிறது.  அவர்களைப் பிடிக்க வரும் நிஜ சி.பி.ஐ ஆபிசருக்கும் அவர்களுக்கும் இடையே நடக்கும் ஒரு விறுவிறுப்பான ஓட்டம்தான் ஸ்பெஷல் 26.


கொஞ்சம் கொஞ்சமாக கொள்ளையடிக்கும் இந்த கும்பல் கடைசியாய் நகரின் மிகப்பெரிய நகைக்கடையில் ஒரே ஒரு பெரிய‌ ரெய்டு நடத்தி  பெரிய அளவில் சுருட்டிவிடத் திட்டமிடுகின்றனர்.  அதற்காக நிஜ சி.பி.ஐ. ஆபிசர்களைத் தேர்ந்தெடுப்பது போன்று 26 பேரை வேலைக்குத் தேர்ந்தெடுக்கின்றனர்.  தேர்ந்தெடுக்கப்பட்ட 26 பேரும் தாங்கள் உண்மையான ஆபிசர்கள் என்றே நினைத்துவிடுகின்றனர்.  இதைத் தெரிந்துகொண்ட நிஜ சி.பி.ஐ, அவர்கள் கொள்ளை நிகழ்ச்சியை அரங்கேற்றும்போது பிடித்து விடவேண்டும் என்று திட்டமிட்டு நகைக்கடையில் உள்ள நகைகளை எல்லாம் மூட்டை கட்டி நகை செய்யும் பட்டறையில் கொண்டு போய் வைத்துவிட்டு கடையில் போலியான நகைகளை வைத்துவிடுகிறார்கள்.






கிளைமாக்ஸில் 26 பேர் கொண்ட போலி சி.பி.ஐ ஆபிசர்கள் குழு பேருந்தில் வந்து நகைக்கடை முன்பு காத்திருக்கிறார்கள்.  நிஜ சி.பி.ஐ ஆபிசர்களும் கடைக்கு வந்திருக்கும் வாடிக்கையாளர்கள், வியாபாரிகள் மற்றும் சேல்ஸ் கவுண்டரில் வேலை பார்ப்பவர்கள் போல மாறுவேடத்தில் இருந்து காத்திருக்கிறார்கள்.  ஆனால் நடப்பதோ வேறு, போலி சி.பி.ஐ.யின் முக்கிய புள்ளிகளான நான்கு பேர் நகைப்பட்டறைக்குச் சென்று ஒரு ரெய்டு நடத்தி கோடிக்கணக்கான நகைகளையும் கொள்ளையடித்துவிட்டு கம்பி நீட்டிவிடுகின்றனர்.  இங்கே நகைக்கடையில் காத்திருக்கும் நிஜ சி.பி.ஐ., பேருந்தில் காத்திருக்கும் போலி சி.பி.ஐ. என்று இரண்டு காத்திருக்கும் கும்பல்கள்.  ஒரு கட்டத்தில் பொறுமை இழக்கும் நிஜ சி.பி.ஐ. போலி சி.பி.ஐ.யைப் பிடித்து விசாரிக்க, முக்கிய புள்ளிகள் மட்டும் வராதது தெரிகிறது.  அதற்குள் நகைப்பட்டறையில் அத்தனை நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டதாக தகவல் வர நிஜ சி.பி.ஐ. அதிர்ச்சி அடைகிறார்கள்.



மாறுவேடத்தில் இருக்கும் சி.பி.ஐ. ஆபிசர்களை ஒவ்வொருவராக வெளியேற்றும் போது தான் தெரிகிறது, நிஜ சி.பி.ஐ. ஆபிசர்கள் மொத்தம் 26 பேர் என்று.  ஸ்பெஷல் 26 என்ற பெயரில் ரெய்டு நடத்த வந்திருக்கும் போலி கும்பலுக்கு காவல் நின்ற ஸ்பெஷல் 26 சி.பி.ஐ. ஆபிசர்கள் நிஜமான சி.பி.ஐ. என்ற அதிர்ச்சியுடன் படம் முடிவடைகிறது.



இந்தப்படத்தின் முக்கிய கதைத்திருப்பமான கிளைமாக்ஸ் காட்சியில் நிஜ சி.பி.ஐ. ஆபிசர்கள் பல்பு வாங்குவது மிகவும் ரசிக்கக்கூடியதாக இருக்கும்.







டிஸ்கி 1: இரண்டு வாரங்களுக்கு முன்பு தான் இந்தப் படத்தின் சிடியை திடங்கொண்டு போராடு சீனு என்னிடமிருந்து வாங்கியிருந்தார்.


டிஸ்கி 2: இந்தப் படத்தின் கதைக்கும் திடங்கொண்டு போராடு சீனு நடத்தும் காதல் கடிதம் பரிசுப்போட்டிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.



படங்கள் உதவி: கூகுள், சீனு