கடன் - சிறுகதை


"நாளைக்கு நான் வர்றப்ப வட்டிப்பணமாவது ரெடியாயிருக்கணும். இல்ல....!"

வழக்கம்போல் வாக்கியத்தை முடிக்காமலே கடன் கொடுத்தவன் சொல்லிவிட்டுப் போய்விட்டான்.

எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அந்த பாஸ்புக் கையில் கிடைக்கும் வரை.  யோசனையோடு பழைய குப்பைகளை கிளறிக் கொண்டிருந்தபோது தான் அது கண்ணில் பட்டது.

தாய்க்குத் தலைமகன் போல, கஞ்சன் கையில் கரன்சி போல... இப்படி எத்தனை உவமானம் சொன்னாலும் அத்தனையும் அர்த்தமற்றதாகிவிடுவதைப் போலத் தோன்றியது.. அந்தப் புதையல்..


Balance Rs.5742/‍- என்றிருந்தது.

போதும், இது போதும், கடன்காரனின் வாயை அடைக்க இது போதும்.

=============

என் இருசக்கர வாகனத்தை மெதுவாகச் செலுத்திக் கொண்டிருந்தேன்.  என் மனதில் ஏதோ இனம் புரியாத படபடப்பு,  ரொம்ப நாளுக்கப்புறம் படித்த கல்லூரியைக் காணப்போகிறேன்.  இப்போது உங்கள் மனதில் ஒரு கேள்வி வருமே?

கடன்காரனைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தான்.  திடீரென்று கல்லூரியைப் பார்க்கப் போகிறேன் என்று சொல்கிறானே. இரண்டுக்கும் என்ன சம்பந்தம்?

இது தானே உங்கள் கேள்வி?

பொறுமை, பொறுமை.

வண்டி முன்னேறிக்கொண்டிருந்தாலும் மனம் ரிவர்ஸ் கியரில் பின்னோக்கிப் போய்க்கொண்டிருந்தது.

இதோ, இந்தச் சாலையில்தான் நாங்கள் எல்லோரும் சேர்ந்து வருவோம்.  சைக்கிளில் போகும்போது சாகசங்கள்! இரண்டு கைகளையும் விட்டுவிட்டு ஓட்டுவது, தோளோடு தோள் சேர்த்துப் போவது, நடுவில் வரும் ஸ்பீடு பிரேக்கர்களில் முன் சக்கரத்தை குதிரையைப் போல தூக்குவது, இதைப்போல் பல சாகசங்கள். எல்லாம் உடன் படிக்கும் சைட்டுகளின் முன்னால் தான்.

எங்கள் காலேஜ் கோ‍எட் தான் என்றாலும் ஒரு கட்டுக்கோப்பு இருக்கும்.  இருபாலரும் தங்கள் எல்லைகளைப் புரிந்துகொண்டு உரிமைகளை வரையறுத்துக்கொண்டு அந்த வட்டத்திலேயே வளையவருவது ஒரு தனி அழகுதான்.  அதைவிட ஆச்சரியம் அந்த வட்டத்தை யாருமே தாண்டாமலிருந்தது.

சாலையின் இரண்டு பக்கங்களிலும் பெயர் தெரியாத மரங்களின் அணிவகுப்பு. பெயர்தான் தெரியாதே ஒழிய ஏப்ரல் மாதத்தில் பூக்கும் அந்த ரத்தச் சிவப்பு நிறப் பூக்கள் மிகவும் ஃபேவரிட்.  ஒவ்வொரு மரத்தினடியும் கல்லால் ஆன பெஞ்ச் போடப்பட்டிருக்கும்.  அதில்தான் நானும் மூர்த்தியும் எப்போதும் அமர்வோம்.  மூர்த்தி என் வகுப்புத் தோழனாய் அறிமுகமாகி பின் அவனுடைய நடவடிக்கைகளால் என்னை பெரிதும் கவர்ந்தவன்.  மற்றவர்களைக் காட்டிலும் ஒரு படி அதிகமாய் என் மனதில் உள்ளவன்.  நானும் அவனும் இன்னதென்றில்லாமல் எல்லா விஷயங்களும் பேசுவோம். அரசியல், சினிமா, நட்பு, காதல், கவிதை, வகுப்பு, இன்ன பிற என்று இல்லக்கின்றிப் பேசுவோம்.

இன்னும் மரமிக்கிறது, பெஞ்ச் உள்ளது, பூ உள்ளது.  ஆனால் பெஞ்சில் எங்களுக்குப் பதிலாக வேறு சில இளைய நண்பர்கள் இருக்கிறார்கள்.  அவர்கள் இக்காலத்துக்கு ஏற்றபடி அவர்களது இத்யாதி இத்யாதிகளைப் பேசிக்கொண்டிருந்தார்கள்.  நானோ அவர்களை ரசிக்கும் நிலையில் இல்லை. இப்போது நான் வந்திருக்கும் வேலைதான் முக்கியம்.

இருசக்கர வாகனத்தை நிறுத்தும் இடம் வந்தேன்.  அருகிலேயே சைக்கிள் ஸ்டாண்ட்.  நான் எப்போதும் ஏழாவது தூணுக்குப் பக்கத்தில்தான் என் சைக்கிளை விடுவேன். நான் படித்த மூன்றாண்டுகளும் அந்த இடத்தில் தான் சைக்கிளை நிறுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன்.  நான் நிறுத்தும் முன்னரே வேறு யாராவது அங்கு சைக்கிளை நிறுத்தியிருந்தால் அதை நகர்த்திவிட்டு அந்த இடத்தில் என் சைக்கிளை நிறுத்துவேன்.  அந்த இடம் இப்போது காலியாக இருந்தது.  அதை நான் கவனித்திருந்தாலும் முதலாவது தூணுக்குப் பக்கத்திலுள்ள காலி இடத்தில் என் வண்டியை நிறுத்தினேன்.





நீள் செவ்வக வடிவில் கல்லூரியின் முகப்புக் கட்டிடம்.  நடுவில் உள்ள படிகளை ஏறியவுடன் ஒரு ஹால். ஹாலின் நடுவே நிறுவனரின் வெண்கலச்சிலை. அதன் அருகே அன்றலர்ந்த பன்னீர் புஷ்பங்கள்.  இவை தினசரி மாறாமலிருக்கும்.

நான் ஒவ்வொரு படியாக ஏறத்தொடங்கினேன். நேற்றுதான் வந்தது போல் இருக்கிறது. அதற்குள் இத்தனை வருடங்கள் கடந்துவிட்டனவே! அனுபவம் மிக்க சம்பவங்கள் நிறைந்த நான்கு வருடங்கள்! என்னவெல்லாம் நடந்துவிட்டன அதற்குள்!

படித்து முடித்தவுடன் வேலை கிடைத்துவிட்டது.  ஆனால் வரும் சம்பளமோ வயிற்றுப்பாட்டிற்கே சரியாய் இருந்துவந்தது.  அதனால் அதுகூட ரொம்ப நாளைக்கு நீடிக்கவில்லை.

திடீரென்று கம்பெனியில் லேஆஃப்.  அனைத்து தொழிலாளர்களும் தெருவில் நின்றோம்.  உள்ளூர்க்காரர்கள் வேறு வேலைக்கு முயற்சி செய்ய என்னைப்போன்ற வெளியூர்க்காரர்கள் சொந்த ஊருக்குத் திரும்புவதைத் தவிர வேறு வழியில்லை.  சோகத்தோடு திரும்பினேன்.  ஊரிலிருந்தபடியே வேறு வேலைக்கு முயற்சி செய்தேன்.  ஆனால் இம்முறை அதிர்ஷ்டம் என்னை கைவிட்டுவிட்டது.

விரக்தியோடு சுற்றிக்கொண்டிருந்த நேரத்தில் தான் என் அக்கா மகளுக்கு காதணி விழா வந்தது.  என்னதான் சும்மா சுற்றிக்கொண்டிருந்தாலும் தாய்மாமனான நான் ஏதாவது செய்யவேண்டுமே! என்ன செய்வதென்று தெரியவில்லை.  அம்மா அப்பாவிடமும் கேட்கக்கூடாது. கூடாதென்ன முடியாது.  அவர்கள் என்னை இன்னும் "தண்டச்சோறு" என்று கூப்பிடாமல் இருப்பதே பெரிய விஷயம்.

அந்த நேரத்தில் தான் உணர்ச்சி வேகத்தில் என்ன செய்கிறோம் என்றே அறியாமல் செய்த ஒரு தவறுதான் இன்று இந்த நிலைக்கு ஆளாக்கிவிட்டது.

ஆம்! என் கல்விச் சான்றிதழை ஒருவரிடம் ஐயாயிரம் ரூபாய்க்கு அடமானம் வைத்துவிட்டேன்.  வாங்கிய பணத்தை விழாவில் என் பங்களிப்பாக அக்காவிடம் கொடுத்துவிட்டேன்.

தனியே வந்து யோசிக்கையில் தான் தவறு புரிகிறது.  ஆனால் எல்லாம் முடிந்த பிறகு என்ன செய்ய.  கடன் கொடுத்தவன் தொல்லை கொடுக்க ஆரம்பித்துவிட்டான்.  அவன் வீட்டுக்கு வந்து மானத்தை வாங்குவதற்குள் ஏதாவது ஏற்பாடு செய்தாக வேண்டும்.

எங்கள் கல்லூரியில் இந்தியன் வங்கியின் கிளை ஒன்று இருந்தது.  அதில் நானும் ஒரு கணக்கு தொடங்கியிருந்தேன்.  என் படிப்புக்கு வரும் பணத்தின் மீதி, செலவுக்கு வரும் பணம் போக பாக்கி என்று என்னால் முடிந்த போதெல்லாம் சிறுகச் சிறுக அந்தக் கணக்கில் சேர்த்துவைத்திருந்தேன்.

அப்போது கையில் தாராளமாக பணப்புழக்கம் இருந்ததால் இதை எடுக்க வேண்டிய அவசியம் இருந்ததில்லை.  நான்கு வருடங்களுக்குப் பிறகு இப்போதுதான் அதன் தேவை புரிந்து எடுக்கச் சென்று கொண்டிருந்தேன்.


நீள் வராண்டாவின் கடைசியில் இருக்கும் வங்கியை நோக்கி நடக்கத் தொடங்கினேன்.  ஒரு புறம் வகுப்பறைகள், மறு பறம் மைதானம்.  மைதானத்தில் ஆங்காங்கே மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.  அவர்களைப் பார்க்கும் போது தான் எனக்கு அந்த எண்ணம் தோன்றியது.  நான் ஏதாவது தவறு செய்யப்போகிறேனோ?  எனக்கும் என் கல்லூரிக்கும் இடையேயான கடைசித் தொடர்பு இந்தக் கணக்கு தான்.  இதையும் முறித்துவிட்டால்....?

அவ்வளவு தானா?  பணத்தை எடுத்துவிட்டால் அவ்வளவுதானா?  இனி எனக்கும் இந்தக் கல்லூரிக்கும் இடையே தொடர்பே கிடையாதா?  வாழ்நாள் முழுவதும் எத்தனையோ துன்பங்கள் வந்தாலும் அந்நேரங்களில் எல்லாம் நினைத்து என்னைத் தேற்றிக்கொள்ளும்படியாய் எத்தனையோ சம்பவங்களை பரிசளித்த இந்த நண்பனின் கடைசித் தொடர்பையா துண்டிக்கப் போகிறேன்! வேண்டாம்! வேண்டாம்!





வராண்டாவின் முடிவில் வங்கி அலுவலகம்.  அதற்கு முந்தின அறையில் ராமசாமி ஆசிரியர் முதலாமாண்டு மாணவர்களுக்கு தமிழ்ப்பாடம் நடத்திக்கொண்டிருந்தார்.  "அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவமாட்டார், இந்தப் பழமொழிக்கு அனைவரும் தவறான அர்த்தமே கற்பித்து வருகின்றனர்.  இங்கு அடி என்பது நண்பர்களைக் குறிக்கும் ஒரு சொல்லாகும்"

அவர் மேலும் சொல்லிக்கொண்டே போக நான் கண்ணோரம் பொங்கிய நீரை அடக்கியவாறே திரும்பிவிட்டேன்.

மறுநாள்....

"டேய், உன் ஸ்கூட்டரை எங்கடா காணோம்?"

அம்மா கேட்டபோது மெளமாகத் தலை குனிந்துகொண்டேன்.