நான் இப்போது மீனாட்சியைத் தேடித்தான் போய்க்கொண்டிருக்கிறேன். தேடி என்றால் காணவில்லை என்று பொருள் கொள்ளவேண்டாம். அவள் இங்கேயே தான் இருக்கிறாள். எனக்காகவே காத்திருக்கிறாள். கொஞ்சமல்ல, பதினேழு வருடங்களாய்.

அவள் மீது எனக்கு எப்படி காதல் வந்தது என்பதெல்லாம் நினைவிலில்லை. அப்போது எனக்கு பதினெட்டு வயது, அவளுக்கு பதினாறு. கண்டோம், காதல் கொண்டோம். நான் தான் தயக்கத்துடன் அவளிடம் கூறினேன். ஒரு வாரம் கழித்து ஏற்றுக்கொண்டாள். அதன் பிறகு ஊரிலிருக்கும் பூங்கா, ஆற்றங்கரை, வாழைத்தோட்டம் என பல இடங்களில் சந்தித்துக்கொள்வோம்.


அவள் அவ்வளவு அழகெல்லாம் இல்லை. துறுதுறுவென்று இருப்பாள். என்னிடம் பேசும்போது என் கண்களை அவளது கண்களால் விழுங்குவது போலப் பார்ப்பாள். அப்படிப் பாக்காதேடி என்று அடிக்கடி சொல்லவைப்பாள். என் மீது கொஞ்சம் அதிகமாகவே ஆதிக்கம் செலுத்துவாள். உண்மையிலேயே நம் வீட்டில் மீனாட்சி ஆட்சி தான் என்று அவளிடமே நிறைய முறை சொல்லியிருக்கிறேன்.

இந்தக்காதல் கொஞ்ச நாள் தான் நீடித்தது. நாங்கள் தனியாக சந்தித்ததைப் பார்த்த யாரோ ஒருவர் அவளுடைய அப்பாவிடம் போட்டுக்கொடுத்துவிட, எங்கள் சந்திப்பு நின்றுபோனது. காதலிப்பதில் என்ன தவறு, நான் முடிவு செய்துவிட்டேன். அவளது அப்பாவிடம் நானே நேரில் சென்று கேட்டேவிட்டேன். அந்த நாள் தான் நான் கடைசியாக மீனாட்சியைப் பார்த்தது.

"தம்பி நீங்க படிக்கலை, எந்த வேலைக்கும் போகலை, உங்களுக்குன்னு எந்த சொத்தும் இல்லை. அப்புறம் எந்த நம்பிக்கைல நான் என் பொண்ணைக் கொடுக்கிறது?" 

எளிதான கேள்விதான். என்னால் பதில் சொல்ல முடியவில்லை. "கொஞ்சமாவது காசு பணம் சேர்த்துட்டு வாங்க, பேசலாம்" என்றார். "நான் சம்பாதிச்சிட்டு வர சில வருஷங்கள் ஆகும், அதுக்குள்ளே உங்க பொண்ணை யாருக்காவது கட்டிக் கொடுத்திட்டீங்கன்னா?" என்னை ஏறெடுத்துப் பார்த்த அவர், "எத்தனை வருஷமானாலும் என் பொண்ணு உங்களுக்காக காத்திருக்கும் தம்பி" என்றார்.

இப்போது தான் இடைமறித்தாள் என் மீனாட்சி. "இந்தேரு, இவரு என்ன சொல்லுறது? நான் சொல்லுறேன், நீ போய் நாலு காசு சம்பாதிச்சிட்டு வா. நான் உனக்காகவே காத்திருப்பேன். என் கழுத்தில தாலி கட்டுறது நீ தான்" என்றாள். 

அவளை நோக்கித்தான் போய்க்கொண்டிருக்கிறேன். என்ன, பணம் சம்பாதிப்பதில் கொஞ்சம் தாமதமாகிவிட்டது. பல அடிகளையும் பட்டாயிற்று. எங்கெங்கோ அலைந்து திரிந்து கடந்த இரண்டு வருடங்களில்தான் நல்ல சம்பாத்தியம். துபாயில் இருக்கிறேன். வந்து மீனாட்சியைத் திருமணம் செய்துகொண்டு அவளையும் அழைத்துச் செல்லப்போகிறேன்.

ஊரில் இருக்கும் ஒவ்வொரு இடமும் எனக்கு எங்களது காதலின் ஒவ்வொரு நினைவுகளை மீட்டியது. அதோ, அந்தக்கோவில். அவளுக்காகவே கோவில் பிரகாரத்தைப் பலமுறை சுற்றிவந்திருக்கிறேன். ஊர் கொஞ்சம் மாறியிருந்தது. எத்தனை வருடங்கள் ஆகிவிட்டன? எனக்கே தலையில் ஓரிரு முடிகள் நரைத்துவிட்டன. அவள் எப்படி இருப்பாள்?

இதோ, அவளது வீட்டை அடைந்துவிட்டேன். எனக்கு கொஞ்சம் பயமும் பதட்டமும் பற்றிக்கொண்டது. என்ன செய்துகொண்டிருப்பாள்? தயக்கத்துடன் அழைப்பு மணியை அழுத்தினேன். கதவு திறந்தது. 

அவள் தான். அவளே தான். அன்று பார்த்த அதே முகம், அதே உடல்வாகு. அவளது இளமை கொஞ்சம் கூடக் குறையவில்லை. அப்படியே இருந்தாள். அவளைப் பார்த்ததில் எனக்கு பெரும் நிம்மதி.

சத்தமாகப் பேசமுடியவில்லை. "மீனாச்சி" என்றேன். குரல் தழுதழுத்தது. உள்ள வாங்க என்று கூறிவிட்டு உள்ளே நோக்கிக் கத்தினாள், "அம்மா, உன்னைத் தேடி யாரோ வந்திருக்காங்க!"