முந்தைய பகுதியைப் படித்திராதவர்கள் படித்துவிட்டு வரவும்.


அவர் அப்படிச் சொன்னதும் எங்களுக்கு அதிர்ச்சியாகத் தான் இருந்தது. இருந்தாலும் அவரே சொன்னார், "சார், உங்களுக்கு ரூம் ரெடி ஆகிறதுக்கு இன்னும் ஒரு மணி நேரம் ஆகும். அதுவரைக்கும் இதோ, இந்த ரூம்ல fresh up ஆகிக்கோங்க" என்று கூறி ரிசப்ஷன் அருகிலேயே இருந்த அறை ஒன்றைக் காட்டினார். அது ஒரு சிறிய அறை. ஒரே ஒரு கட்டில், ஒரு டேபிள் சேர், லாக்கர், டிவி மட்டுமே இருந்தது. நேரத்தை வீணாக்காமல் அனைவரும் குளித்து ரெடியானால் நிறைய இடங்களை சுற்றிப் பார்க்க முடியும் என்பதால், "ம், சீக்கிரம்... ரெவ்வெண்டு பேரா போய் சோலிய முடிச்சிட்டு வாங்க" என்றேன் வடிவேலு ஸ்டைலில். அதற்கு நண்பர் இளங்கோவன், "ஒரே பாத்ரூம்ல ரெண்டுபேரா? சங்கடமா இருக்காது?" என்று அதே வடிவேலு ஸ்டைலில் சொல்ல, அறை முழுதும் சிரிப்பலையில் அதிர்ந்தது.



ஹோட்டலின் முகப்பிலிருந்து


அனைவருடைய போன்களிலும் சார்ஜ் கிட்டத்தட்ட தீரும் நிலையில் இருந்ததால் எந்திரன் படத்தில் கார்களைத் தேடி அலையும் ரஜினிகளாய் ஆளாளுக்கு சார்ஜர்களை அந்த அறையில் இருந்த எல்லா பிளக் பாயின்ட்களிலும் சொருகினோம். கொஞ்ச நேரத்திலேயே ஒரு பணியாளர் வந்து எங்களுக்கு அறை ஒதுக்கப்பட்டதாகச் சொன்னார். ரிசப்ஷனில் விசாரித்ததில் நாங்கள் தங்க வேண்டிய அறை இன்னும் காலியாகாமல் இருப்பதாகவும் வேறு சிலர் காலி செய்த அறைகளை எங்களுக்கு ஒதுக்கியிருப்பதாகவும் சொன்னார்கள். அறை எண்கள் 407 மற்றும் 410. ஒரே ஒரு பிரச்சனை என்னவென்றால் அந்த ஹோட்டலில் லிப்ட் கிடையாது. படியேறித்தான் செல்லவேண்டும். எங்களுக்கு அறை மூன்றாவது தளத்தில். தரைத்தளத்திலிருந்த ரெஸ்ட்டாரென்டில் அப்போது தான் சாப்பிட்டுவிட்டு வந்த அந்த இளம் ஜோடி முன்னே படியேற நாங்கள் ஐந்துபேரும் பின்னால் செல்ல ஆரம்பித்தோம். மூன்று மாடிகள் ஏறி முடிப்பதற்குள் அந்தப் பனியையும் மீறி கொஞ்சம் வியர்த்திருந்தது. அறை எண் 407-க்கு முன்னே நாங்கள் நிற்க 406-இன் கதவைத்திறந்த அந்த ஜோடி "DO NOT DISTURB" என்ற வாசகம் தாங்கிய அந்த அட்டையை முன்னே தொங்கவிட்டுவிட்டு கதவைச் சாத்தினர்.


அனைவரும் குளித்து தயாரானோம். ரிசப்ஷனில் போய் சுற்றிப் பார்க்கும் இடங்கள் என்னென்ன இருக்கிறது என்று கேட்கலாம் என்று சென்றால் அங்கே புதிதாய் ஒரு கேரளத்துப் பைங்கிளி அமர்ந்திருந்தது. அவரிடம் சென்று விசாரித்ததில் ஆளுக்கு ஒரு காகிதம் கொடுத்தார். அதில் ஒருபுறம் மூணாறு மேப் மற்றொருபுறம் சுற்றிப் பார்க்கும் இடங்கள் வரிசைப்படுத்தப்பட்டு இருந்தது. அதனைக் காண்பித்த அந்தப் பைங்கிளி எந்தெந்த இடங்களுக்கு எப்படிச் செல்லலாம் எங்கெங்கு கூட்டம் அதிகமாக இருக்கும் எந்த இடங்களெல்லாம் பார்க்கத் தகுந்தவை எங்கிருந்து தொடங்கி எங்கே முடிக்கலாம் என்று விலாவாரியாக மலையாளமும் ஆங்கிலமும் கலந்து விவரித்தார். 

பத்து மணி ஆகியிருந்ததால் பசி வேறு. காரில் டிரைவரிடம் "இந்த ஊரிலேயே நல்ல வெஜிடேரியன் ஹோட்டலுக்குப் போப்பா" என்றோம். "இங்க சரவணபவன் இருக்கு, அங்க நல்லாருக்கும்" என்று சொல்லி அங்கு அழைத்துப் போனார். சரவண பவன் - நம்ம ஊர் சரவணபவன் போல இல்லையென்றாலும் சுவையில் குறைவில்லை. இருந்த பசியில் ஆளாளுக்கு இட்லி, தோசை, பூரி, பொங்கல், என அனைவரும் வெளுத்துக் கட்டினோம். அங்கிருந்த பணியாளர் - சுமார் அறுபது வயதிருக்கும். நல்ல சுறுசுறுப்பு. பறந்து பறந்து வேலை செய்கிறார். நாங்கள் ஆர்டர் செய்த வேகத்தைவிட அவர் கொண்டுவந்த வேகம் சூப்பரோ சூப்பர்.



நாங்கள் முதலில் செல்லப்போகும் இடம் டாப் ஸ்டேஷன். டாப் ஸ்டேஷன் என்றால் மூணாறின் ஒரு பகுதியின் கடைக்கோடி. அது சில மலைகள் சங்கமிக்கும் இடம். அங்கிருந்து பார்த்தால் பெரும் பள்ளத்தாக்கு, அங்கே சிறு சிறு ஊர்கள். காரில் சென்றபோது அதிக உயரத்துக்குச் சென்றது தெரிந்தது. ஆனால் அங்கு டாப் ஸ்டேஷன் எதுவும் இல்லை. ஓரிரு கடைகள் மட்டுமே இருந்தன. அதோ, அந்தக் கடையின் அருகே ஒரு பாதை - ஒரே ஒருவர் மட்டுமே நுழையக்கூடிய வகையில் இருந்தது. அதன் அருகே ஒருவர் டிக்கட் கொடுத்துக்கொண்டிருந்தார். உள்ளிருந்து வந்தவர்கள் வியர்க்க விறுவிறுக்க மிகுந்த களைப்புடன் இருந்தார்கள். விசாரித்ததில் டாப் ஸ்டேஷன் என்பது சுமார் இருநூறு மீட்டர் தொலைவில் இறங்கி நடந்து செல்லவேண்டும். அங்கிருந்து அந்தப் பள்ளத்தாக்கைப் பார்க்க முடியும் என்று தெரிந்துகொண்டோம். இருநூறு மீட்டர் இறங்கிச் சென்றவர்கள் மீண்டும் ஏறி வருவதில்தான் இருக்கிறது சிக்கல். அதிக நடை பயிற்சி இல்லாதவர்கள் சிரமப்பட்டுவிடுகிறார்கள்.

இறங்கும் வழியில்


நமக்குத்தான் இந்தக் கஷ்டமே இல்லையே. டிக்கட்டை வாங்கிக்கொண்டு கிளம்பினோம். இறங்கும் வழியில் ஓரிரு கடைகள் இருந்தன. களைப்படைந்தவர்களுக்கு லெமன் சோடா, பிரெட் ஆம்லேட் என விற்பனை ஜோராக நடந்துகொண்டிருந்தது. கீழே இறங்க இறங்க பனிமூட்டம் அதிகமானது.

இறங்கியதும்

End Point


கீழே இறங்கியதும் end point எனப்படும் இடத்தில் தடுப்பு போடப்பட்டிருந்தது. ஆனால் நம்நாட்டு ஆண் சிங்கங்கள் அந்த தடுப்பையும் மீறி கீழிறங்கி அங்கிருந்து போட்டோ எடுத்தும் எடுத்துக்கொண்டும் தடுப்புக்கு முன்னால் நின்றுகொண்டிருக்கும் தங்கள் காதலி / மனைவிக்கு தங்களது வீர பிரதாபத்தை பறைசாற்றிக்கொண்டிருந்தார்கள். 


தடுப்பையும் மீறி மக்கள்

பனிமூட்டம் அதிகமாக வருவதும் பின் கலைந்து செல்வதுமாய் இருந்தது. இதனால் இயற்கையை ரசிப்பதில் கொஞ்சம் சிரமம் இருந்தது. சுமார் அரை மணி நேரம் அங்கு சுற்றிவிட்டு மேலே ஏறினோம். மேலே ஏறியதும் எல்லாருக்கும் வியர்த்துக் கொட்டியது. அங்கிருந்த கடையில் "அஞ்சு லெமன் சோடா" என்று சொல்லிவிட்டு அமர்ந்தோம்.


நாளை: போட்டிங் போகலாமா?