முந்தைய பகுதிகளைப் படித்திராதவர்கள் படித்துவிட்டு வரவும்





டாப் ஸ்டேஷனிலிருந்து கீழே இறங்கியதும் முதலில் வரும் இடம் குண்டலா டேம். பிரதான சாலையிலிருந்து திரும்பி சுமார் அரை கிலோமீட்டர் உட்புறம் செல்லவேண்டும். உள்ளே நுழைவதற்கு காருக்கும் பார்க்கிங் கட்டணம் செலுத்தவேண்டும். உள்ளே சென்றதும் நம்மை வரவேற்கக் காத்திருக்கிறது பெரும் கூட்டம்.





போட்டிங் செல்வதற்கு டிக்கட் வாங்கலாம் என்றால் அங்கே டிக்கட் கவுண்டரில் டிக்கட் கொடுக்க மறுக்கிறார்கள். ஏன் என்று கேட்டால் போய்ப் பாருங்க எவ்வளவு கூட்டம் நிக்குது என்கிறார்கள்.

காத்திருக்கும் கூட்டம்

நாங்கள் போட்டிங் செல்வதென்றால் குறைந்தது இரண்டு மணி நேரமாவது காத்திருக்க வேண்டும். இரண்டு மணி நேரத்தை சும்மா நின்று வீணடிக்க விரும்பவில்லை. எனவே, கொஞ்ச நேரம் சிலுசிலுவென்ற காற்றுடன் இயற்கை அழகை ரசித்துவிட்டு  கிளம்பினோம்.






கீழே இறங்கும் வழியில் Echo Point என்ற இடம் இருப்பதாக டிரைவர் சொல்ல, இறங்கிப் பார்த்துவிடுவோம் என்றோம். வழியெங்கும் தேயிலைத் தோட்டங்கள், தேயிலைத் தோட்டங்கள், தேயிலைத் தோட்டங்கள் மட்டுமே. சாலையின் இருபுறமும் பச்சைப் பசேலென்று கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கின்றன. "தோட்டத்துக்கு உள்ள போய்ப் பாக்கலாம்" என்று நண்பர் ஒருவர் சொல்ல, காரை ஓரமாக நிறுத்திவிட்டு இறங்கினோம். 




ஆங்காங்கே கல் தூண்கள் அமைத்து இரும்பினால் வேலி அமைத்திருந்தார்கள். வேலி பிரிக்கப்பட்ட ஒரு இடத்தின் வழியாக தோட்டத்தின் மேல் ஏறினோம். செடிகளுக்கு நடுவே ஒரே ஒரு கால் மட்டும் நுழையும் அளவுக்கே இடம் இருந்தது. மேலிருந்து பார்க்கையில் இடைவெளியே இல்லாதது போலத் தோற்றமளித்தது தோட்டம். ஆனால் உள்ளே செடியின் அடிப்பகுதி தடிமானாக அதே சமயம் குறுகலாக இருந்ததால் அடிப்பகுதியில் நிறைய இடம் இருந்தது. பாம்பு எதுவும் நம்மைப் பதம் பார்த்துவிடுமோ என்ற அச்சத்திலேயே காலெடுத்து வைத்தோம். 



Echo Point என்ற இடம் கடைகளால் சூழப்பட்டிருந்தது. அங்கு ஏலக்காய் டீ, ஹோம் மேட் சாக்லேட்கள், மூலிகைகள், அலங்காரப் பொருட்கள் என விற்பனை கன ஜோராக நடந்துகொண்டிருந்தது. பெரிய ஏரி ஒன்றில் சிறு சிறு படகுகளில் சுற்றிவந்துகொண்டிருந்தார்கள். கூட்டமும் அதிகமாக இருந்தது. 






அடுத்து நாங்கள் சென்றது மலர்த்தோட்டம். சொல்வதற்கு அதிகம் எதுவும் இல்லையென்றாலும் படங்கள் உங்களுக்காக.







விடுதிக்குத் திரும்பியபோது மாலை ஐந்து மணி ஆகியிருந்தது. காலை சரவண பவன் ஹோட்டலில் சாப்பிட்டது மட்டுமே. இடையிடையே காபி டீ ஸ்நாக்ஸ் மட்டுமே சாப்பிடிருந்ததால் பசி வயிற்றைக் கிள்ளியது. ஏதாவது சாப்பிட்டு வரலாம் என்று முடிவு செய்து புறப்பட்டோம்.

தொடரும்.