அலுவலக நண்பர்களுடன் வருடத்துக்கு ஒரு முறை இரண்டு நாட்கள் எங்காவது டூர் செல்வது வழக்கம். 2௦11-இல் கொடைக்கானலுக்கும் 2௦12-இல் ஆலப்புழைக்கும் சென்ற அனுபவங்கள் மறக்க முடியாதது. மூணாறு செல்லவேண்டுமென்று கடந்த வருடம் திட்டமிட்டு எதிர்பாராத / தவிர்க்க முடியாத சில காரணங்களால் மூன்று முறை ஒத்திவைக்கப்பட்டது. அதிலும் மூன்றாம் முறை மிகவும் கொடுமை - ரயில் டிக்கட்களையும் ஹோட்டல் புக்கிங்கையும்  கடைசி நேரத்தில் கேன்சல் செய்தோம். இதனால் ஆறாயிரம் ரூபாய்க்கு மேல் நஷ்டம். ஆறு பேர் என்பதால் தலைக்கு ஆயிரம் ரூபாய் தான். அதனால் நான்காம் முறை பேருந்தில் பயணம் செய்வதென்று முடிவாயிற்று. நாங்கள் புறப்படுவதற்கு முந்தைய தினம் தான் பேருந்துக்கும், கார்  மற்றும் தங்குவதற்கு ஹோட்டல் என முன்பதிவு செய்தோம்.


பிப்ரவரி மாதத்தின் அந்த வெள்ளிக்கிழமை - ஒரு நண்பருக்கு உடல்நிலை சரியில்லாமல் போக, நான்காம் முறையும் கேன்சல் செய்ய விருப்பம் இல்லாததால் நாங்கள் ஐந்து பேர் மட்டும் செல்வதென்று முடிவாயிற்று. இந்த முறை பேருந்தில் ஏறி அமர்ந்ததும் மூணாறு செல்வதாக முகநூலில் நிலைத்தகவல் ஒன்றை எழுதினேன். சற்று நேரத்தில் உள்டப்பியில் வந்த நண்பர் வருண் பிரகாஷ் தனக்கு சொந்த ஊர் மூணாறு என்றும் ஏதும் உதவி தேவைப்பட்டால் தனக்கு அழைக்குமாறும் கூறி தனது தொலைபேசி எண்ணைக் கொடுத்திருந்தார். ஆனால் அவரிடம் உதவி கேட்கும் நிலை எங்களுக்கு வரவில்லை.

சென்னையிலிருந்து தேனி வரை தனியார் பேருந்து. அங்கிருந்து மூணாறு வரை கார். மூணாறில் ஹோட்டல் ஹில்வியூ-வில் தங்குகிறோம். அதே  காரையே ஊர் சுற்றுவதற்கும் மூணாறிலிருந்து தேனிக்கு திரும்புவதற்கும் பயன்படுத்தப்போகிறோம். தேனியிலிருந்து சென்னை திரும்புவதற்கு மீண்டும் ஒரு தனியார் பேருந்து. நாங்கள் திட்டமிட்டிருந்தது இவ்வளவே. சென்னையிலிருந்து இரவு ஒன்பது மணிக்கு புறப்பட்ட பேருந்து காலை ஐந்து மணிக்கே தேனி வந்தடைந்தது. ஆனால் நாங்கள் காருக்கு ஆறு மணிக்குத்தான் சொல்லியிருந்தோம். எனவே, மீண்டும் டிரைவரை அழைத்து நாங்கள் வந்துவிட்டதாகத் தெரிவித்துவிட்டு மூட்டை முடிச்சுகளுடன் அருகில் இருந்த டீக்கடை நோக்கிச் சென்றோம்.

அந்த அதிகாலை நேரத்திலேயே தேனி நகரம் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. சைக்கிள், மாட்டுவண்டி, பால், தினசரி பேப்பர் என அனைவரும் தத்தம் வேலைகளைத் தொடங்கியிருந்தனர். காபி குடித்து பத்து நிமிடங்களிலேயே கார் வந்துவிட காரில் ஏறிப் புறப்பட்டோம். டிரைவர் சின்னப் பையன் தான். இருபத்தைந்து வயதுக்குள் இருக்கும். ஆறு வருடங்களாக கார் ஓட்டுகிறானாம். தேனியிலிருந்து மூணாறு வரை பயணப்பட  சுமார் மூன்று மணி நேரம் ஆகும். போடிமெட்டு என்ற இடம்தான் தமிழ்நாடு கேரளா எல்லை. இங்கே ஒரு செக்போஸ்ட் இருக்கிறது. தேனியிலிருந்து கொஞ்ச தூரம் சென்றதுமே தமிழக எல்லை செக்போஸ்ட் நம்மை வரவேற்கிறது. இதன் தடுப்பு மூடப்பட்டிருக்க, ஒரு போலீஸ்காரர் வந்து எங்களிடம் "சார், காடு ரொம்ப வறண்டு போயிருக்கு, யாரும் சிகரெட் பிடிச்சு கீழே போடாதீங்க" என்றார். சரிதான், தீப்பிடிக்கும் அபாயம் உள்ளதுபோலும்.

சொன்னதுபோலவே சாலையின் இருபுறங்களிலும் மரங்களும் செடிகளும் காய்ந்துபோய் சாகும் தருவாயில் இருந்தன. அடுத்தடுத்து கொண்டைஊசி வளைவுகள் வயிற்றைப் பிறட்ட ஆரம்பித்திருந்தது. தூரம் செல்லச்செல்ல நாங்கள் கடல்மட்டத்திலிருந்து கொஞ்சம் மேல்நோக்கிச் செல்வதை உணர ஆரம்பித்திருந்தோம். தேனி நகரம் சிறிது சிறிதாக சுருங்கி புள்ளியாய் மறைந்திருந்தது. போடிமெட்டு அருகே வந்ததும் சூழல் நல்ல பசுமையாக இருந்தது. இங்கே கேரளா எல்லை செக்போஸ்ட். இந்த எல்லையைக் கடந்து சிறிது தூரம் சென்றதும் பனிமூட்டம் எங்களை வரவேற்றது. விடிய ஆரம்பித்திருந்த அந்தக் காலை வேளையிலும் காரின் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றுகொண்டிருந்தோம்.

போகும் வழியில்


சிறு சிறு கிராமங்கள் கடந்து செல்ல, சாலையின் இருபுறமும் மின்வேலி அமைத்திருந்தார்கள். பயிர்களை காட்டு விலங்குகள் அழித்துவிடாமல் இருப்பதற்காகவாம். இன்னும் கொஞ்ச தூரம் கடந்ததும் தேயிலைத் தோட்டங்கள் எங்களை வரவேற்கத் தொடங்கின.



அந்தக் குளிரில் எங்களுக்கு மூச்சா முட்ட, காரை ஓரமாக நிறுத்தச் சொன்னோம். செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சிவிட்டு இயற்கை அழகாய் ரசிக்க ஆரம்பித்தோம். ஒரு பத்து நிமிடங்கள் மட்டுமே. நாங்கள் செல்லவேண்டிய ஹோட்டல் ஹில்வியூ மூணாறு KSTRC பஸ் நிலையம் அருகே இருக்கிறது. சரி, அவர்களுக்கு போன் செய்து நாங்கள் வருவதை அவர்களுக்குத் தெரிவித்துவிடலாம் என்று எண்ணி ஹோட்டலுக்கு போன் செய்தோம். "சார், ரூம் செக் இன் பன்னிரண்டு மணிக்குத்தான், அதனால் நீங்கள் பன்னிரண்டு மணிக்கு வந்தால் போதும்" என்று குண்டைத் தூக்கிப் போட்டார் ஹோட்டல் பணியாளர். நாங்கள் அதிகபட்சம் ஒன்பது மணிக்குள் சென்றுவிடுவோம் என்பதால் ஒன்பது மணிக்கு ரூம் தருமாறு கேட்டோம். அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. பணம் வேண்டுமென்றாலும் அதிகம் கொடுக்கத் தயாராக இருக்கிறோம், எங்களுக்கு ரூம் கண்டிப்பாக வேண்டும் என்று சொல்லியும் அவர்கள் ரூம் எதுவும் காலி இல்லை, பதினோரு மணிக்கு மேல்தான் காலியாகும் என்று சொன்னார்கள்.

நாங்கள் சென்ற வண்டி அருகே நண்பர் இளங்கோவன்


அடடா, குளிக்காமல், பல் தேய்க்காமல் கூட இருந்துவிடலாம். ஆனால் முக்கியமான விஷயம் ஒன்று இருக்கிறதே, அதற்குப் போகாமல் எப்படி இருக்கமுடியும். வேறு ஏதாவது ஹோட்டலில் அறை எடுக்கலாம் என்றால் இந்த ஹோட்டலில் அட்வான்ஸ் கொடுத்தாகிவிட்டது. சரி, நேராக ஹோட்டலுக்கே சென்று விடுவோம். அவர்கள் தங்கும் அறை கொடுக்கும் வரை அங்கேயே காத்திருக்கலாம் என்று முடிவு செய்தோம். ஹோட்டல் சென்றடைந்ததும் ரிசப்ஷனில் இருந்த பணியாள், "சார், பன்னிரண்டு மணிக்குத்தான் உங்களுக்கு ரூம் கொடுப்போம்னு சொல்லியிருந்தோமே, அதுக்குள்ளே ஏன் வந்தீங்க?" என்றார்.




தொடரும்.....