உங்களுக்குத் தெரியாத ஒரு விஷயம், அது ரகசியம் இல்லை.  ரகசியம் காக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை.  நான் எவ்வளவு நன்றாகப் பாடுவேன் என்று யாருக்கும் தெரியாது.



என் மனைவி அடிக்கடி கூறுவதுண்டு, உங்களுக்கு ஒரு மேடை கிடைத்தால் வாய்ப்பைத் தவறாமல்  பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்று.  ஒரே ஒரு முறை வாய்ப்பு கிடைத்தது, அதுவும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பாடினேன்.  அங்கிருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்  ரசித்தனர்.  ஏனோ தெரியவில்லை, நான் பாடியது தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படவில்லை.  


நண்பர்கள் உறவினர்கள் உடன் வேலைசெய்யும் சக பணியாளர்கள் என அனைவரையும் தொலைபேசியில் அழைத்து குறிப்பிட்ட அந்த நாளில் தொலைக்காட்சியைப் பார்க்கச் செய்தேன்.  எனக்கு ஏமாற்றம் மட்டுமில்லை, ஏளனப் பேச்சுக்களும் கிண்டல் கேலிகளும் சேர்ந்தே கிடைத்தன.




எதிர்வரும் செப்.1 ஆம் தேதி நடக்கும் பதிவர் திருவிழாவில் மதியம் இரண்டு மணி முதல் நான்கு மணி வரை "பதிவர்களின் தனித்திறன் காட்டும் நிகழ்சிகள்" என்ற இரண்டு மணி நேரத்தைப் பார்த்ததும் உள்ளுக்குள் ஒரு நப்பாசை.  பாடலாமா, ஒரு ஐந்து நிமிடம்.


பதிவர் திருவிழா குறித்த ஆலோசனைக் கூட்டத்துக்கு வாரந்தோறும் தவறாமல் சென்றுவரும் எனக்கு இந்த விஷயம் பற்றிய பேச்சு எதிர்ப்படும்போது கைதூக்க ஆசை, கூச்சமும் பயமும் பிடுங்கித்தின்ன கை எழாத நிலை.  நான் பாடினால் ரசிப்பார்களா என்ற அச்சம்.


மேடை ஏறினால் கை கால் உதறுமே.  சமாளித்துக் கொள்ளலாமா?  தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பாடும்போது உதறவில்லையே!  ஓ, அங்கே தார்மீக ஆதரவாக மனைவி இருந்தாளே, அதனாலா?


இதுவரை அவளிடம் இப்படி ஒரு நிகழ்ச்சி நிரல் இருப்பதை சொல்லவில்லை.  சொன்னால் கண்டிப்பாகக் கலந்துகொள்ளச் சொல்லி என்னை நச்சரிக்கக்கூடும்.  அனுமதி வாங்கிவிட்டீர்களா என்று தினம் தினம் என் வாயைக் கிளறக்கூடும்.  நித்தமும் என்னை பாடி பயிற்சி எடுக்கச் சொல்லி இம்சிக்கக்கூடும்.


மேடையில் பாடுவதற்கு இன்னும் சில வசதிகள் வேண்டுமே! ஆர்கெஸ்ட்ரா! அல்லது கரோகே கோப்புகளைப் பாடுவதற்கு அல்லது பாட வைப்பதற்கு மைக் செட்டில் வசதியிருக்குமா?  இல்லையென்றாலும் இன்னும் நாள் இருக்கிறது, ஏற்படுத்திக்கொள்ளலாம்.


வண்ணக்கோலம் படிக்கலாம் என்ற எண்ணச் சிதறல், சிதறும் ஒவ்வொரு துளியையும் தேடிப்பிடிக்க முடியவில்லை.  இரவு முழுதும் உறக்கமில்லை.  பாட வேண்டாம் என்று முடிவெடுத்துவிட்டால் இந்த இம்சை இருக்காதோ?


நீங்களே சொல்லுங்கள்.... பாடலாமா? வேண்டாமா?