"ப்பா.. ஒரு கத சொல்லுப்பா..."  ரக்ஷித் என்னிடம் கேட்டுவிடக் கூடாது என்று பயப்படும் கேள்விகளில் இதுவும் ஒன்று. காரணம் அவன் விரும்பிய கதையை, அவன் எதிர்பார்த்த ஒரு கதையை இதுவரையிலும் என்னால் சொல்ல முடிந்ததில்லை. சொல்லத் தெரியவில்லை என்றும் சொல்லலாம். என்ன அப்படிச் சொல்வதில் கொஞ்சம் மானபிரச்ச்னை எனக்கு!  


மின்சாரம் துண்டிக்கப்படும் வரையிலும் நல்லபிள்ளையாகத் தான் டிவி பார்த்துக் கொண்டிருந்தான், எப்போது மின்சாரம் கட்டானதோ அப்போதே என்னருகில் வந்துவிட்டான். இந்நேரம் வீட்டில் கரண்ட் இருந்திருந்தால் போகோவோ சுட்டி டிவியோ பார்த்துக் கொண்டிருப்பான், நானும் நிம்மதியாக ஒரு பதிவைத் தேத்தியிருப்பேன். அந்தோ பரிதாபம்! இனி கதை சொல்லியே ஆகவேண்டிய கட்டாயம்.   

'ஒரு கத சொல்றதுல என்னங்க பிரச்சன.. பெரிய பிரச்சனைன்னு  கேட்கிறீங்களா, கத சொல்றது தாங்க பிரச்சனையே.        

ரக்ஷித்திற்கு கதை சொல்வது என்பது ஆல்-இன்-ஆல் அழகுராஜா படத்தை  இரண்டாம் முறை இஷ்டப்பட்டு பார்ப்பது போன்ற கஷ்டமான காரியம். அவனுக்கான ஒரு கதையை  பலமுறை பலநாள் யோசித்துவிட்டேன், எழுத முடிந்ததில்லை. அவன் விரும்பபடியான கதை என்பது இன்றையவரையிலும் எழுதப்படாமலேயே தான் இருக்கிறது. 

நான் குழந்தையாக இருந்த நாட்களில் எப்போதுமே பாட்டி உடன் இருப்பாள், என்னை அவள் மடியில் உட்கார வைத்துக் கொண்டு நிலாச்சோறு ஊட்டிக் கொண்டே பாட்டி வடை சுட்டக் கதையையும், பாட்டி சுட்ட வடையை சுட்ட நரியின் கதையையும் கூறுவாள். இன்றைக்கு பாட்டியும் இல்லை பாட்டி வடை சுட்ட கதையும் இல்லை. 

"ப்பா.. ஒரு கத சொல்லுப்பா..." மீண்டும் கேட்கத் தொடங்கினான், நானும் அவனுக்கான கதையைத் தான் தேடிக் கொண்டுள்ளேன்.

"ரக்ஷித்... அப்பா உனக்கு நிறைய கதை சொல்லி இருக்கேன்ல இன்னிக்கு ஒருநாள் நீ எனக்கொரு கத சொல்லேன்.."

"நீ எப்பப்பா கத சொன்ன, எப்போதும் நான் தான உனக்கு டோராபுஜ்ஜி கதையும், நிஞ்சா கதையும் சொல்லுவேன்.. ", அவனை மடக்க நினைத்த என்னை அசால்ட்டாக அவன் வீழ்த்திவிட்டான்.   

"சரி சரி.. அப்போ நானே எழுதின ஒரு கதைய சொல்லட்டுமா..." 

"சரி சொல்லு ... ஆனா ஒன்னு... இந்த ரத்தம் பார்க்கின் கதைய மட்டும் சொல்லாத, பத்து தடவைக்கு மேலயும் அத சொல்லி கடுபேத்ற "

"ஓகே உனக்கு ஒரு சுட்டி பையன் கத சொல்றேன் கேக்றியா"

"ம்ம்ம் சொல்லு"

"ஒரு ஊர்ல பீம்னு ஒரு குட்டி பையன் இருந்தானாம்"

"ப்பா பீம் ஸ்டோரி உன்ன விட எனக்கு நல்லாவே தெரியும்பா, வேற ஏதாது புதுசா ட்ரை பண்ணு பாப்போம்", இதை விட கடுமையாக நான் பெத்த மகன் என்னை அசிங்கப்படுத்த முடியாது என்று தான் நினைக்கிறன். வேறு என்ன செய்வது இல்லை என்ன தான் செய்து விட முடியும், வழக்காமான என் அப்பாவி முகத்தை இன்னும் அப்பாவியாய் வைத்துக் கொண்டே "அப்பாக்கு வேற கத தெரியாது டா.. என்ன விட்ரு டா " என்று கெஞ்சாத குறையாக அவன் காதில் மிக ரகசியாமாக கூறினேன். 

"என்னது கத சொல்ல மாட்டியா.. ம்ம்மா பாரும்மா அப்பாக்கு கதையே தெரியாதாம்" என்று கத்தி கூப்பாடு போட்டுவிட்டான். 

"டேய்... உங்கப்பா எங்கிட்டானா நல்ல கத வுடுவாரு டா... அவர விட்றாத..." எங்கே ரக்ஷித் தன்னிடம் கதை கேட்டு விடக் கூடாதே என்ற அவசரத்தில் மீண்டும் என்னிடமே கோர்துவிட்டாள் என் சகதர்மிணி.
          
'நான் மட்டும் என்ன வச்சிகிட்டா வஞ்சகம் பண்றேன், முன்பு எல்லாம் அம்புலிமாமா, தெனாலிராமன், பீர்பால் கதை என்று பலவகையான சிறுவர் புத்தகங்கள் கிடைக்கும்' இப்போதோ அவையெல்லாம் வழக்கொழிந்தே போய்விட்டன. சிறுவர்மலரில் கூட சுவாரசியமான கதைகள் வருவதில்லை. அதன்பலனாகத் தானோ என்னவோ  நவீனகால சிறார்களும் ஜெட்டிக்ஸில் தவமிருகிறார்கள்... டோராவுக்கும், பீமுக்கும் அடிமையாகிவிட்டார்கள். டிவி இல்லையேல் இருக்கவே இருக்கிறது கம்ப்யுட்டர் கேம்ஸ். நமக்கும் வேலை வேலை வேலை  அதைவிட்டால் இணையம். இப்போது இவனுக்குப் பிடித்த ஒரு கதைக்கு நான் எங்கே செல்வேன்.

"ஒகே அப்பா உனக்கொரு பேய் கத சொல்றேன் கேக்குறியா..."

"எது...? அன்னிக்கு ஒரு பேய் கத சொன்னியே அத மாதிரியா , ப்பா அது பேய் கதயே இல்லப்பா... உன் கதையில மட்டும் தான் பேய் காமெடி எல்லாம் பண்ணுது..." என்று கூறி என்னை அசிங்கபடுத்திக் கொண்டே அவன் தங்கை ஸ்ரீயை அழைத்தான் "ஸ்ரீ அப்பா பேய் கத சொல்ல போறாராம்.. ஒரே காமெடி இல்ல" என்று அவன் சொல்ல ஸ்ரீயோ என்னவென்று புரியாமல் சிரித்துக் கொண்டே தன் தலையில் அடித்துக் கொண்டாள். "டேய் சரவணா உனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்டா" என்று நொந்து கொள்வதைத் தவிர என்னால் அப்போதைக்கு வேறு எதுவும் செய்ய முடியவில்லை. 



சட்டென என் முகம் பிரகாசமானது "ரக்ஷித் அப்பா உனக்கு ஒரு இன்ட்ரெஸ்டிங் ஸ்டோரி சொல்றேன் கேக்ரியா ".

இதைக் கேட்டதும் அவனும் உற்சாகமானான் "ம்ம்ம் சொல்லுப்பா.. என்ன கத சொல்லப் போற"

"அப்பாக்கும் அம்மாக்கும் எப்படி கல்யாணம் நடந்ததுன்னு சொல்றேன் ஓகேவா...?" 

"அய்ய அது ரொம்ப போர் ஸ்டோரிப்பா.. அம்மா ஏற்கனவே என்கிட்டே சொல்லிட்டாங்க..." என்றான் அப்பாவியாய்.

உலகத்திலேயே சுவாரசியாமான நிகழ்வாக நான் கருதும் என் திருமணத்தை நொடிபொழுதில் சுவரசியமற்றதாக்கி விட்டான் ரக்ஷித். இதற்கு மேலும் அவனை எப்படி சமாளிப்பது என்று தெரியவில்லை. 

அவனுக்கு என்ன கதை சொல்வதென்றபடி விட்டத்தையே பார்த்துக் கொண்டிருந்த என் முகத்தில் தன பிஞ்சு விரல்களால் கோடு போட்டான்.. கோடு போட்டுக்கொண்டே "ப்பா.. ஒரு கத சொல்லுப்பா..." என்றான்.  
அரைத் தூக்கத்தில் இருக்கும் மாணவனை எழுப்பி, 'ஆர்கிமிடிஸ் தத்துவத்தைக் கூறு?' என்று அவனது அறிவியல் டீச்சர் மிரட்டினால் எப்படி முழிப்பானோ அப்படித்தான் முழித்துக் கொண்டிருந்தேன் ரக்ஷித்தின் முன்னால். 

ரக்ஷித்தோ என் முகத்தையே பாவமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தான், அந்தப் பாவப் பார்வையில் கொஞ்சம் நக்கலும் கலந்திருந்தது என்பதும் நிஜம் தான். அவன் ரசிக்கும்படியாய் கூறுவதற்கு என்னிடம் எந்தவொரு கதையும் இல்லை. ரத்தம் பார்க்கின் பிடிக்கவில்லை, என் கல்யாண கதையில் சுவாரசியம் இல்லை என்கிறான். ராமாயணம் மகாபாரதம் எனக்கே தெரியாது, பேய்கதை என்றால் டாம் அண்ட் ஜெர்ரியை விட அதிகமாய் சிரிக்கிறான். நிஞ்சா வேண்டாம், டோரா வேண்டாம், பால்ஹனுமான் தெரியும், சோட்டா பீம் மனபாடம் என்று எல்லாவற்றையும்  வைத்திருக்கும் இவனிடம் இவனுக்குத் தெரியாத எந்த கதையை கூறி இவனைச் சமாளிப்பது? 

உலகில் இருக்கும் அத்தனை கதையும் தீர்ந்து விட்டது போன்ற பிரமை என்னைச் சூழ்ந்து கொண்டது. 

முதன்முதலில் என் பாட்டி என்னிடம் என்ன கதை கூறியிருப்பாள் என்று யோசித்துப் பார்த்தேன், வழக்கமான பாட்டி வடை சுட்ட கதையும், ஒரு காட்டுல ஒரு நரி இருந்துச்சாம் கதையும் தான் நியாபகத்தில் வந்து நின்றன, அல்டிமேட் கதைகளைக் கூறினாலே அடவடியாய்க் கலாய்க்கிறான். போதாக்குறைக்கு அவனது தங்கை ஸ்ரீயையும் உடன் அழைத்துக் கொள்கிறான். அரதப்பழசான இந்தக் கதைகளைக் கூறினால் அவ்வள்ளவு தான். பின் என் நிலமை என்னவாகும் என்பது எனக்கே தெரியவில்லை. 

இருந்தும் என்னுள் கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு மெல்ல ரக்ஷித்தைப் பார்த்தேன் "ஒழுங்கா கத சொல்லிரு இல்ல அம்மாட்ட சொல்லிருவேன்" என்பது போல் பயமுறுத்திக் கொண்டிருந்தான். 

எனக்கும் வேறு வழி தெரியவில்லை, மெல்ல தைரியத்தை வரவழைத்துக் கொண்டு

"ஒரு ஊர்ல ஒரு பெரிய காடு இருந்துச்சாம்... அந்த காட்டுல ஒரு நரி இருந்துச்சாம், அந்த காட்டுலயே அதுதான் ரொம்ப புத்திசாலி நரியாம்..." என்று சொல்லிவிட்டு அவன் முகத்தையே பார்த்தேன், ஏதோ ஒரு வித்தியாசமான மாறுதல் அவன் முகத்தில் தெரிந்தது, ரைட்டு இன்னிக்கு பொண்டாட்டிகிட்ட அடி கன்பார்ம் தான் என்றபடியே அவனைப் பார்த்தேன்.

சட்டென வாயைத் திறந்து கத்தினான்       

"ஸ்ரீ... ஸ்ரீ.. இங்க வாயேன்.. அப்பா சொல்ற கத சூப்பரா இருக்கு.. ப்பா நீ சொல்லுப்பா, கத நல்லா இருக்குப்பா..."