வித்தியாசமான கதைக்களம், எதிர்பார்க்க வைக்கும் டிரைலர், பாடல்களுக்கு ஒருவர், பின்னணி இசைக்கு ஒருவர் என இரண்டு இசை அமைப்பாளர்கள், உலகெங்கும் தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் சேர்த்து 1200 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியீடு என எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்திருக்கும் படம்.






பூமியில் நடப்பது போன்று ஒரு கதையும் வேற்று கிரகத்தில் நடப்பது போன்று ஒரு கதையும் தனித்தனியே காட்டி இடைவேளைக்குப் பின்னர் இணைத்துக் கொண்டுபோயிருக்கிறார் இயக்குநர். இரண்டு கதைகளிலும் அனுஷ்காவும் ஆர்யாவும் மட்டுமே நிறைந்திருக்கிறார்கள்.

சமூக சேவகரான ஆர்யாவை டாக்டரான அனுஷ்கா ஒருதலையாகக் காதலிக்கிறார். முதலில் ஏற்க மறுக்கும் ஆர்யா பின்னர் அனுஷ்கா மீது காதல் கொள்கிறார். அவர் காதலை சொல்லப்போகும் நேரத்தில் அனுஷ்கா அதை நிராகரிக்கிறார், வேறு இடத்தில் திருமணம் நிச்சயம் ஆகிவிட்டதாம்.  பின்னாலேயே அலைந்து அனுஷ்காவின் அன்பைப் பெறுகிறார்.  நிற்க, இந்த இடத்தில் யாராவது ஒருவர் இறந்தாக வேண்டுமே, ஆமாம், அனுஷ்கா இறக்கிறார்.


வேற்று கிரகத்தில் அனுஷ்கா ஒரு அனாதைப் பெண். அங்கே காதல் என்பதே இல்லை. பெண்களை போகப்பொருளாகவே பாவிக்கிறார்கள். அவர்களுக்கு என்று ஒரு தெய்வம், அவர்களுக்கு என்று சில எதிரிகள் என்று அந்த உலகம் இயங்குகிறது. அந்த உலகத்தில் ஆர்யாவுக்கும் அனுஷ்காவுக்கும் இடையே நடக்கும் சில சம்பவங்களும் இரண்டாம் உலகத்தில் நடக்கும் கதை.





படத்தின் முற்பாதியில் இரண்டு உலகங்களிலும் நடக்கின்ற கதைகளை பத்து நிமிடத்துக்கு ஒன்று என்று மாறி மாறி காட்டி சுவாரஸ்யமாகக் கொண்டுசெல்கிறார் இயக்குனர்.  இரண்டாம் பாதியில் பூமியில் இருக்கும் ஆர்யாவை வேற்று கிரகத்துக்கு அழைத்துச் சென்று அங்கே வேடிக்கை பார்க்க வைக்கிறார். கதை முழுவதும் அனுஷ்காவையே சுற்றி வருகிறது.


சிங்கத்துடன் ஒரு சண்டை, வேற்று கிரகத்தை வெளிநாட்டில் படமெடுத்துக் காட்டியது, ஒளிப்பதிவு, பாடல்கள் என அனைத்தும் களைகட்டுகிறது. முற்பாதியில் காணப்படும் சுவாரசியம் இடைவேளைக்குப் பின் காணவில்லை. அருகில் இருப்பவர்கள், "டேய், என்னடா சொல்ல வர்ற?" என்று நெளிகிறார்கள்.


படத்தில் முதல் பாராட்டு ஒளிப்பதிவாளருக்கே. இரண்டாம் உலகத்தைக் காட்சிப்படுத்திய விதம் அருமை. அதற்கடுத்தாற்போல் பின்னணி இசை. பறப்பது போன்ற உணர்வெல்லாம் இல்லை என்றாலும் உறுத்தாமல் கதையுடன் ஒன்றிச் செல்கிறது.


வழக்கம்போல் திரைக்கதையில் கோட்டை விட்டிருக்கிறார் இயக்குனர். இடைவேளைக்குப் பின் வரும் காட்சிகளில் தொய்வு. இருந்தாலும் தமிழ்ப் படத்தை ஹாலிவுட் தரத்துக்கு உயர்த்தியதற்காக தாராளமாகப் பாராட்டலாம். 


இரண்டாம் உலகம் டிரைலர் பார்க்க: