நான் அப்பா ஆகப்போகிறேன் என்ற செய்தி வந்தபோது எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. என்ன குழந்தையாக இருந்தாலும் பரவாயில்லை. அது கடவுள் தந்த வரம் என நினைத்திருந்தேன். இருந்தாலும் மனதில் ஒரு ஓரமாக ஆண் குழந்தையாகத்தான் இருக்கும் என்கிற ஒரு சின்ன நம்பிக்கை இருந்தது. காரணம், என் பரம்பரையில் முதலில் ஆண்களே பிறக்கிறார்கள். என் தந்தை வழியில் அவர் தான் முதல், அம்மா வழியில் அம்மாவின் அண்ணன், மேலும் எனக்குத் தெரிந்த முன்னோர் வரை ஆண்கள் தான் முதலில் பிறந்திருக்கிறார்கள். என் எதிர்பார்ப்பை பொய்ப்பிக்காமல் ரக்ஷித் அவதரித்தான்.






அவன் பிறந்து ஐந்து வருடங்கள் கழித்து மீண்டும் என் மனைவி கருவுற்றபோது என்னுள் ஒளிந்துகொண்டிருந்த சுயநலவாதி லேசாக எட்டிப்பார்க்கத் தொடங்கினான். பொம்பளைப் பிள்ளையா இருந்தா நல்லாருக்குமே என்றிருந்தது என் எண்ணம். முதல் பிரசவம் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் - என் மாமனார் காரணத்துடன் தான் அங்கே சேர்த்திருந்தார். அந்த மருத்துவமனையில் வேறு வழியே இல்லாத பட்சத்தில் மட்டுமே கத்தியைத் தூக்குவார்கள். மற்றபடி எப்படிப்பட்ட பிரசவமாக இருந்தாலும் நார்மல் தான்.


இந்த முறை மாமனாரும் மாமியாரும் சொந்த ஊருக்குப் போய்விட்டார்கள். இரண்டாவது என்பதால் சென்னையிலேயே ஏதேனும் ஒரு மருத்துவமனையில் சேர்த்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்து மூன்று நாட்களாக அலைந்தேன். ஐந்து மருத்துவமனைகள் ஏறி இறங்கியாயிற்று. என் மனைவியின் பழைய மெடிக்கல் ரிப்போர்ட்களைப் பார்த்த மருத்துவர்கள், "ஒண்ணும் பிரச்சனையில்லை, இங்கேயே பாத்துக்கலாம். டெலிவரி நெருங்கிற நேரத்துல ஒரு நல்ல நாள் சொன்னீங்கன்னா அன்னிக்கே சிசேரியன் வச்சுக்கலாம்" என்றார்கள். டாக்டர் இராதாகிருஷ்ணன் சாலையிலுள்ள அந்த கிறிஸ்துவ மருத்துவமனை பெண் மருத்துவர் ஒருவர், "ஜிப்மர்ல ரொம்ப ரிஸ்க் எடுத்திருக்கீங்க, நார்மல் டெலிவரி ஆகவே ஆகாது, பிழைச்சு வந்ததே பெரிய விஷயம்" என்றெல்லாம் கூறினார். 


இவர்களின் பேச்சைக் கேட்டு வெறுத்துத்தான் போனேன். ஆரம்பத்திலேயே ஆபரேஷன்னு பயமுறுத்தினால் என்ன செய்வது? சொந்த ஊரிலேயே மாதாந்திர பரிசோதனைகளையும் பிரசவத்தையும் வைத்துக்கொள்ளலாம் என முடிவு செய்தேன். மாதா மாதம் ரயிலில் ஊருக்குச் சென்று அங்கேயே பரிசோதனைகளையும் முடித்துவந்தோம்.


ஐந்து மாதங்கள் கடந்தபோதே உள்ளிருக்கும் குழந்தைக்கு என்னைத் தெரிய ஆரம்பித்துவிட்டது. என்னுடைய குரல் கேட்டாலோ நான் பேசுவது தெரிந்தாலோ கால்களால் வயிற்றில் உதைப்பாள். வயிற்றில் கைவைத்து, "யார் பாப்பா இது" என்றால் துள்ளிக்குதிப்பாள். உள்ளே இருப்பது பெண்குழந்தை தான் என நம்பிக்கொண்டிருந்த காலம்.


அந்த நாள். வாழ்க்கையில் என்றுமே மறக்க முடியாத நாள். இரண்டு தினங்களுக்கு முன்பே அலுவலகத்துக்கு விடுப்பு எடுத்துக்கொண்டு ஊருக்குச் சென்றேன். பிரசவ வார்டில்  மனைவி அனுமதிக்கப்பட்டபோது சினிமாக்களில் காட்டப்படும் பதட்டத்தை உணர்ந்தேன். ஊரிலுள்ள அத்தனை தெய்வங்களையும் அம்மா வேண்டிக்கொண்டிருக்க, என்னுள் இருந்த சுயநலவாதி பெண் குழந்தையே பிறக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டிருந்தான்.

பிரசவ அறையிலிருந்து வெளிப்பட்ட நர்ஸ், "பிரபா?" எனக் கேட்க, வெளியே காத்திருந்த அனைவரும் எழுந்து நின்றோம். பொண்ணு பிறந்திருக்கு என்று சலனமில்லாமல் சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட்டாள். பொண்ணு பிறந்திருக்கு என்பதை ஜீரணிக்க சில நொடிகள் தேவைப்பட்டது எனக்கு. அருகில் நின்றிருந்த அம்மாவை பட்டென்று கட்டிக்கொண்டு "அம்மா, பொம்பளைப் பிள்ளையாம்மா" என்று அழ ஆரம்பித்தேன். அம்மாவுக்கும் சந்தோஷத்தில் கண்ணீர் பெருக்கெடுக்கத் தொடங்கியது.




இன்று....

"அப்பா, என்ன செய்யித?" ஸ்ரீ கேட்டாள்.

"பேஸ்புக் பாக்கறேண்டா?"

"சும்மா, எப்பப் பாடு பேஸ் புக்கு?"

"....."

"பாப்பாவுக்கு ஹேப்பி போடே தானபா?"

"ஆமாடா"

"அப்பதீனா பாப்பாவ போட்டோ எதுத்து பேஸ்புக்ல போடுப்பா"

"............."

"சொல்லுடேன் காது கேக்கிலியா?"

"இதோ, போடுறேண்டா"