நண்பர் சீனுவின் இந்தப் பதிவைப் படித்ததும் என்னுடைய அனுபவத்தையும் கண்டிப்பாக எழுதியே ஆகவேண்டும் என்று எனக்குத் தோன்றியது.

ஓ பாசிடிவ்! ஓ நெகடிவ்?



கிட்டத்தட்ட இதே போன்ற அனுபவம் தான் எனக்கும். அது 1997ஆம் ஆண்டு. நான் டிப்ளோமா மூன்றாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தேன். வகுப்பு நடந்துகொண்டிருந்த வேளையில் திடீரென்று உள்ளே நுழைந்தார் பிரின்சிபால். "ஒரு முக்கிய அறிவிப்பு" என்று தொடங்கிய அவர், மதுரையைச் சேர்ந்த தனியார் ரத்த வங்கி ஒன்று எங்களது கல்லூரிக்கு வருவதாகவும் ரத்த தானம் செய்ய விரும்புபவர்கள் செய்யலாம் என்றும் அறிவித்தார். பதினாறு வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும், ஐம்பது கிலோ எடை இருக்கவேண்டும் என்கிற கண்டிஷன்களையும் கூறினார்.


அடுத்ததாக வகுப்புக்கு வந்த எங்கள் தலைமை ஆசிரியர் யார் யாரெல்லாம் ரத்த தானம் செய்ய விரும்புகிறீர்கள் என்று கேட்டார். எங்கள் வகுப்பில் மொத்தம் ஆண்கள் பதிமூன்று பேர், பெண்கள் இருபத்தோரு பேர். ஓரிருவர் தவிர்த்து அனைவரும் கைகளை உயர்த்த, தலைமை ஆசிரியருக்கு மிகுந்த மகிழ்ச்சி. "நீங்க மட்டும் விருப்பப்பட்டா போதாது, உங்க அம்மா அப்பா கிட்ட permission வாங்குங்க, முக்கியமா லேடீஸ். நாலு நாள் கழிச்சு சொல்லுங்க போதும்" என்றார்.


நான்கு நாட்கள் கழித்து மீண்டும் இதே கேள்வி. அன்று கை உயர்த்திய முப்பது பேரில் பலரும் தங்கள் முடிவை மாற்றியிருந்தனர். எஞ்சியது பதினைந்து பேர் மட்டுமே. அவர்களில் பலரும் அவர்களது வீட்டில் அனுமதி வாங்கியிருக்கவில்லை, என்னையும் சேர்த்து. அதில் பலரும் ஒரு வேகத்தில் முடிவெடுத்திருந்தனர். "டேய், என்னை விட சின்னப் பையன்டா அவன், அவன் ரத்தம் கொடுக்கும்போது நான் கொடுக்க முடியாதா?" என்றும் "இத்துணூண்டு இருந்துக்கிட்டு அவனே ரத்தம் குடுக்கான், எனக்கென்ன கொள்ளையா?" என்றும் ஓரிரு ஈகோவாலும் முடிவு செய்திருந்தனர். இருந்தாலும் இறுதியான பட்டியலை ரத்த தானம் செய்யும் தேதிக்கு நான்கு நாட்களுக்கு முன்னர் முடிவு செய்வதாக தலைமை ஆசிரியர் அறிவித்திருந்தார்.


அந்த நாளும் வந்தது. பதினைந்து பேர் இப்போது எட்டு பேராகக் குறைந்திருந்தனர். இரண்டு பெண்களும் ஆறு ஆண்களும் மட்டுமே எஞ்சியிருந்தோம். இறுதிப் பட்டியலாக எங்கள் பெயர்களை எழுதிக்கொண்டு சென்றுவிட்டார். நான் அதுவரை அம்மா அப்பாவிடம் விஷயத்தை சொல்லியிருக்கவில்லை. சொன்னால் கண்டிப்பாக விடமாட்டார்கள் என்பது எனக்குத் தெரியும். பின்னர் சொல்லிக்கோள்ளலாம் என்று விட்டுவிட்டேன். 


அந்த நாள் - எங்கள் வகுப்பிலிருந்து நானும் இன்னொரு நண்பனும் (அவன் பெயரும் சரவணன் தான்) கல்லூரிக்குச் சென்றோம். அங்கு சென்றபிறகு தான் தெரிந்தது - ஒட்டுமொத்த கல்லூரியும் சேர்த்து மொத்தம் இருபது பேர் மட்டுமே அங்கு வந்திருந்தார்கள். எங்கள் பிரிவில் நாங்கள் இருவர் மட்டுமே. ஒரு வகுப்பறையை இதற்கென ஒதுக்கியிருந்தார்கள். நான்கு படுக்கைகள். முதலில் ஒருவர் ரத்தம் கொடுக்கையில் அடுத்து கொடுக்க வேண்டியவர் அவர் அருகில் அமர்ந்திருக்க வேண்டும். எனக்கு முன்னால் மெக்கானிக்கல் பிரிவில் படிக்கும் மாணவர் ஒருவர் ரத்தம் கொடுத்துக்கொண்டிருந்தார்.


அவரது கையில் ஊசி ஒன்று குத்தியிருக்க, சின்னதாக ஒரு பேண்டேஜ் மட்டும் ஒட்டியிருந்தார்கள். அந்த ஊசியின் வழியாக சின்ன டியூப் மூலம் பயணம் செய்துகொண்டிருந்த ரத்தம் கீழே வைக்கப்பட்டிருந்த பாட்டிலில் சொட்டு சொட்டாக இறங்கிக்கொண்டிருந்தது. அவருடன் பேச்சு கொடுத்துக்கொண்டே அவ்வப்போது அதையும் கவனித்துக்கொண்டிருந்தேன். நேரம் ஆக ஆக பாட்டிலில் சேரும் ரத்தத்தின் அளவு கூடிக்கொண்டே செல்ல, எனக்கு லேசாக தலை சுற்ற ஆரம்பித்தது. கொஞ்ச நேரத்தில் உடம்பெல்லாம் குளிர்ந்து வியர்த்து அங்கேயே மயங்கி விழுந்தேன்.


உடனடியாக என்னை வெளியே தூக்கிவந்து அமரவைத்து ஜூஸ், பிஸ்கட் கொடுத்து ஆசுவாசப்படுத்தினார்கள். அங்கிருந்த செவிலியர் ஒருவர், "தம்பி நீ ரத்தம் கொடுக்கவேண்டாம்பா, வீட்டுக்கு கிளம்பு" என்றார். "இல்ல, இல்ல, நான் கொடுப்பேன். கொஞ்ச நேரம் கழிச்சு கொடுக்கிறேன்" என்றேன். வந்திருந்த அனைவரும் ரத்தம் கொடுத்து முடித்ததும் கடைசியாக என்னை வரச்சொன்னார்கள். வந்திருந்த மொத்த கூட்டமும் என்னையே குறுகுறுவென்று பார்க்க, நான் எல்லோரையும் பார்த்து சிரித்துக்கொண்டே ரத்தத்தை கொடுத்து முடித்தேன். நல்ல கருஞ்சிவப்பு நிறத்தில் பாட்டிலில் அடைக்கப்பட்ட எனது ரத்தம் எடுத்துச்செல்லப்பட்டது. இம்முறை எனக்கு மயக்கம் ஏதும் வரவில்லை.


இதுதான் நான் முதன்முதலில் ரத்தம் கொடுத்த அனுபவம். அதற்கப்புறம் வீட்டுக்குச்சென்று அம்மாவிடம் விஷயத்தைக் கூறி, அம்மா அழுததும் அதற்குப் பின்னான நாட்களில் நல்ல புஷ்டியான ஆகாரங்களை செய்து கொடுத்ததும் தனிக்கதை. ரத்தம் கொடுத்ததற்கு ஆதாரமாக சான்றிதழ் கொடுப்பார்களே, அதில் எனக்கும் நண்பர் சரவணனுக்கும் ரத்த வகை B+ என்று கொடுத்திருந்தார்கள். அது என்ன மாதிரியான வகை என ஆராய்ச்சி எதுவும் செய்துகொள்ளவில்லை.



சில நாட்கள் கழித்து திருநெல்வேலியில் இருக்கும் அந்த பெரிய நிறுவனத்தில் எனக்கு வேலை கிடைத்தது. படிப்பு சான்றிதழ் உட்பட பலதையும் கேட்டிருந்தார்கள். அதில் ஒன்று ரத்த வகைக்கான சான்றிதழ். வேலைக்குச் சேர்ந்த நாள் அன்று இந்த சான்றிதழை மறந்துவிட்டேன். கண்டிப்பாக ரத்த வகை என்னவென்று தெரியவேண்டுமென்று கூறி அருகிலிருந்த லேப் ஒன்றுக்கு என்னை அனுப்பிவைத்தார்கள்.


லேப்பில் - "பிளட் குரூப் மட்டும் தெரியணும்" என்றேன். அங்கிருந்த ஒரு பெண் சின்ன ஊசியால் நடுவிரலை நறுக்கென்று குத்தி வந்த ரத்தத்தை அங்கு வைத்திருந்த கண்ணாடித் துண்டுகளில் ஒற்றி எடுத்தாள். சிறிது நேரம் கழித்து வந்த அவள், "சார், உங்க குரூப் ஓ நெகடிவ், ரொம்ப ரேர் குரூப்" என்றாள். "இல்லையே, நான் பி பாசிடிவ், ஏற்கனவே ரத்தம் கொடுத்திருக்கேன், சர்டிபிகேட் கூட வாங்கியிருக்கேன்" என்றேன். சிறிது நேரம் யோசித்த அவள், "சரி சார், இன்னொரு தடவை செக் பண்ணிரலாம்" என்று ஊசியை எடுத்தாள். இதென்னடா சோதனை, மறுபடியும் குத்துவாளே, இதுக்குப் பேசாம சரின்னு சொல்லியிருக்கலாமே என்று நினைத்துக்கொண்டே விரலை நீட்டினேன்.


மீண்டும் டெஸ்ட். மீண்டும் அதே ஓ நெகடிவ். "சார், நீங்க ஓ நெகட்டிவ் தான், உங்க பழைய சர்டிபிகேட் தப்பு" என்றாள். பின் வந்த நாட்களில் இது அரிய வகை என்றும் இதே வகை ரத்தம் உள்ளவர்கள் மட்டுமே ரத்தம் கொடுக்க முடியும் என அறிந்துகொண்டேன். அதன் பின்னர் பல வருடங்களாக ரத்தமே கொடுக்கவில்லை.




சென்னைக்கு வந்த புதிதில் எங்கள் உடன் பணிபுரியும் ஒருவருக்கு கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சைக்கு ஓ நெகடிவ் ரத்தம் தேவைப்பட்டதால் ஒரு முறை கொடுத்தேன். அதன் பின் மூன்று முறை ரத்த வங்கிகளுக்கு கொடுத்திருக்கிறேன். கடைசியாக ரத்தம் கொடுத்து இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிறது. அவ்வப்போது முகநூலில் ஓ நெகடிவ் ரத்தம் தேவை என பல நிலைத்தகவல்களைக் காண்பதுண்டு. ஆனால் நான் சென்று கொடுப்பதற்கான வாய்ப்புகள் அமைவதில்லை. இன்னும் பத்து நாட்களுக்குள் கண்டிப்பாக ரத்தம் கொடுக்கவேண்டும் என்றிருக்கிறேன். ஓ நெகடிவ் வகை ரத்தம் தேவைப்படுவோர் என்னை அழைக்கலாம்.