ஒரு கார்பரேட் நிறுவனம் குளிர்பான தொழிற்சாலை தொடங்கி தன்னூத்து கிராமத்தில் இருக்கும் நீர் ஆதாரங்களை அபகரிக்க நினைக்கிறது. தன்னூத்து கிராமத்தை சுற்றியிருக்கும் மற்ற கிராமங்கள் அந்த நிறுவனத்துக்கு தங்களது நிலத்தை நல்ல விலைக்கு விற்றுவிட, இவர்கள் மட்டும் விற்க மறுக்கிறார்கள். 


இவர்களுக்கு ஆதரவாக ஜீவானந்தம் (விஜய்) போராடுகிறார். ஒரு கட்டத்தில் ஜீவானந்தத்தை ஒரு கும்பல் சுட்டுத்தள்ள, கொல்கத்தா சிறையிலிருந்து தப்பித்து சென்னை வந்திருக்கும் கதிரேசன் (மற்றொரு விஜய்) ஜீவாவைக் காப்பாற்றி அவருடைய இடத்தில் தான் நுழைந்துகொள்கிறார். கார்பரேட் நிறுவனத்திடமிருந்து தன்னூத்து கிராமத்தை அடிதடி மற்றும் அஹிம்சை போராட்டங்களுடன் மீட்கிறார். இவ்வளவு தான் கதை.



இயக்குநர் முருகதாஸ் எடுத்துக்கொண்ட கதைக்களமும் மக்களுக்கு சொல்லக்கூடிய விஷயமும் அருமை. ஆனால் அதை படமாக்கிய விதத்தில் சில இடங்களில் சறுக்கியிருக்கிறார். முதல் காட்சியில் சிறையிலிருந்து தப்பி ஓடிய ஒரு கைதியை பல முறை தப்பிக்க முயற்சி செய்த விஜய்யை வைத்து போலீஸ் பிடித்ததாகக் காட்டியிருப்பது அபத்தத்தின் உச்சம். ஒரு முறை தப்பிக்க முயற்சி செய்தாலே அந்தக் கைதியை அதிக கண்காணிப்பில் வைக்க மாட்டார்களா? மேலும் ஆள் மாறாட்டம் நடந்திருக்கிறது என்பது தெரிந்தும் ஒரிஜினல் ஆளைப் பிடிக்க கொல்கத்தா சிறைத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிற ஆளை வைத்தே அட்ஜஸ்ட் செய்துகொள்வது கதைக்கு ஒவ்வாததாக இருக்கிறது. 

மக்களுக்காக குரல் கொடுக்கும் வேடத்தில் விஜய் நன்றாகவே செட் ஆகிறார். தலைவா படத்தில் ஹீரோ வர்ஷிப் அதிகமாக இருந்தது. ஆனால் இதில் விஜய் கொஞ்சம் அடக்கி வாசித்திருக்கிறார். புள்ளி விபரக் கணக்கு சொல்லும்போதெல்லாம் விஜயகாந்த் ஞாபகத்துக்கு வந்தாலும் கதையின் அப்போதைய வீரியம் விஜயகாந்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு படத்துடன் ஒன்றவிடுகிறது. சிறையின் ப்ளூ பிரிண்டை எல்லாரும் டாப் ஆங்கிளில் பார்க்கும்போது விஜய் பார்க்கும் வித்தியாசமான கோணம் அப்ளாசை அள்ளுகிறது. இரண்டாம் முறையாக இதேபோன்று சென்னை நகரின் ப்ளூ பிரிண்டைப் பார்க்கும்போது இரண்டு மடங்கு கை தட்டல்களை அள்ளிச் செல்கிறார்.

படத்தின் மிக முக்கியமான பலம் வசனங்கள். 2G விவகாரத்தையும் பீர் கம்பெனி அதிபரின் கடன் நிலவரத்தையும் மீத்தேன் வாயுத் திட்டத்தின்  விளைவுகளையும் தைரியமாகச் சொன்னதற்கு பாராட்டுக்கள். சில்லறை சண்டையும் அதைப் படமாக்கிய விதமும் அருமை. பாடல்களைப் பொறுத்தவரையில் செல்பி புள்ள மட்டும் எனக்குப் பிடித்திருந்தது. மற்றவை மற்றவர்களுக்கு எப்படியோ? நான் ஏற்கனவே சொன்னது போல பாடல்கள் அனைத்தும் 3 மற்றும் எதிர்நீச்சல் படங்களை ஞாபகப்படுத்துகிறது. அதிக இரைச்சல். தீம் மியூசிக்கில் ஆடுகளம் படத்தின் பின்னணி இசையின் சாயல் தெரிகிறது. ஆனால் பின்னணி இசையில் அதிகம் அதிர்வு இல்லை.

சமந்தா தொட்டுக்க ஊறுகாய் மட்டுமே. நான் ஈ படத்தில் பார்த்த சமந்தாவா இது? சதீஷ் - நல்ல நடிகர். இவருக்கு இன்னும் கொஞ்சம் காட்சிகள் கொடுத்திருக்கலாம். மக்களும் மீடியாவும் ஒரு பிரச்சனையை எந்த விதத்தில் எதிர்கொள்கிறார்கள், அவர்களின் கவனத்தை ஈர்க்க என்ன செய்யலாம் என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொல்லியிருக்கிறார்கள். அதற்காக ஜஸ்ட் லைக் தட் யார் வேண்டுமானாலும் தண்ணீர் குழாய்க்குள் போய் உட்கார்ந்து கொள்ளலாமா? அங்கு பாதுகாப்பு என்பது இல்லவே இல்லையா? அல்லது அந்த இடம் பூட்டு போடப்பட்டிருக்காதா?

டீசரில் விஜய் சில வயது முதிர்ந்தவர்களுடன் தண்ணீர் குழாய்க்குள் அமர்ந்திருப்பது போல காட்சி வெளியிட்டிருந்ததும் அதை சமூக வலைத்தளங்களில் கிண்டலடித்ததும் தெரிந்ததே. ஆனால் படத்திலேயே அதிக அளவில் கைதட்டல் வாங்கிய காட்சிகளில் அதுவும் ஒன்று.  இவ்வளவு சீரியசான காட்சியையா நம் மக்கள் கழுவி ஊற்றினார்கள் என்று எண்ணத்தோன்றுகிறது.

மொத்தத்தில் சிலபல லாஜிக் மீறல்களைப் புறந்தள்ளிவிட்டுப் பார்ப்போமேயானால் கத்தி ஒரு தரமான படைப்பு. ஆனால் பத்து துப்பாக்கி என்றெல்லாம் சொல்வதற்கில்லை, பாதி துப்பாக்கி தான்.