அலுவலக நண்பரின் மகளுக்கு உடல்நிலை சரியில்லை. நான்கு வயது தான் ஆகிறது. பிறக்கும்போதே தலையின் பின்புறம் துருத்திக்கொண்டும் முன்புறம் வலது கண் அருகில் லேசாக அமுங்கியும் இருந்தது. இது பின்னாளில் பிரச்சனை ஏற்படக்கூடும் என்றும் அறுவை சிகிச்சை செய்தால் தான் சரியாகும் என்றும் மருத்துவர்கள் ஏற்கனவே கூறியிருந்தார்கள். ஆனால் அந்தக் குழந்தை கால்கள் சற்று வளைந்து பிறந்திருந்ததால் அப்போதைக்கு அதை சரியாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்கள்.


சில நாட்களுக்கு முன் அந்தக் குழந்தைக்கு ஒரு கண் மட்டும் மங்கலாகத் தெரிய ஆரம்பித்திருக்கிறது. எதிர்பார்த்த பிரச்சனைதான் என்பதால் மருத்துவரை நாடினார்கள். கண்டிப்பாக அறுவை சிகிச்சை செய்தாக வேண்டும் என்று கூறிவிட்டார்கள். ஸ்கேன், எக்ஸ்-ரே, அந்த மருத்துவர் பரிந்துரைத்த வேறு மருத்துவர், இவருக்குத் தெரிந்த வேறு ஒரு மருத்துவர், நாங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் மருத்துவர் என்று பலரையும் பார்த்தாயிற்று. அனைவருமே கண்டிப்பாக அறுவை சிகிச்சை செய்தாகவேண்டும் என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார்கள்.

எங்கள் நிறுவனத்தில் மெடிகிளைம் உண்டு. இதற்காகவே வருடத்துக்கு என்று ஒரு தொகை இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு கொடுக்கிறார்கள். இதன்மூலம் நண்பருக்கு ஒரு லட்சம் வரையிலான செலவை இன்சூரன்ஸ் நிறுவனமே ஏற்றுக்கொள்ளும். இதில் என்ன ஒரு பிரச்சனை என்றால் இது குழந்தை பிறந்ததிலேயே இருக்கும் பிரச்சனை என்பதால் இதற்கு இன்சூரன்ஸ் கிடையாது என்று கூறிவிட்டார்கள். நண்பரோ நிறுவனத்தின் கடைநிலை ஊழியர். சில பெரிய மருத்துவமனைகளில் விசாரித்தபோது அவருடைய இரண்டு வருட சம்பளத்தை எடுத்துவைக்கச் சொன்னார்கள். தலை சுற்றி கீழே விழுந்துவிடுவோமோ என்ற நிலையில் இருந்த அவருக்கு நுங்கம்பாக்கம் சைல்ட் டிரஸ்ட் மருத்துவமனையை யாரோ பரிந்துரைத்திருகிறார்கள். அங்கு விசாரித்ததில் அதிகபட்சமாக இரண்டு லட்சம் வரை செலவாகுமென்று தெரிவிக்க, நண்பர் ஆசுவாசமானார்.

ஆனாலும் இரண்டு லட்சமாயிற்றே. கையிருப்பு போக நகைகளை அடமானம் வைத்தார். தந்தையிடமிருந்து கொஞ்சம் பணம் கிடைத்தது. நெருங்கிய நண்பர் ஒருவர் தனது நகைகளை அடமானம் வைத்து ஐம்பதாயிரம் கொடுத்தார். கடனாகத்தான். மீதி பணத்துக்கு என்ன செய்வது? நாங்கள் - அவருக்கு நெருங்கிய நண்பர்கள் - மட்டும் ஆயிரம் ரூபாய் முதல் அவரவர் சக்திக்கு ஏற்ற தொகையைக் கொடுத்தோம். எங்களைப் பார்த்த மற்ற அலுவலக ஊழியர்களும் கொஞ்சம் பணம் கொடுத்தார்கள். ஊர்கூடி தேர் இழுத்தால் என்ற பழமொழிக்கு ஏற்ப அவருக்குத் தேவையான பணம் கிடைத்துவிட்டது. அறுவை சிகிச்சையும் வெற்றிகரமாக முடிந்தது.

தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து பொது வார்டுக்கு மாற்றிய அன்று நான் குழந்தையைப் பார்க்கச் சென்றிருந்தேன். என்னைப் பார்த்ததும் நண்பருக்கு கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. தான் வெளியே இருப்பதாகக் கூறி என்னை மட்டும் உள்ளே சென்று பார்க்கச்சொன்னார். உள்ளே சென்றேன். கபாலத்தைத் திறந்து அறுவை சிகிச்சை செய்திருப்பதால் முகம் மட்டும் தெரியும்படி தலை முழுவதும் கட்டு போட்டிருப்பார்கள் என்று நினைத்திருந்தேன். ஆனால் கட்டு போடவில்லை. மொட்டை போட்டிருந்தார்கள். தலைப்பகுதி அகலவாக்கில் வீங்கியிருந்தது. தாடைப் பகுதி மேற்புறம் ஏறியிருந்தது.  பற்கள் வெளியே துருத்திக்கொண்டு தெரிந்தன. ஒரு கையில் சலைன் ஏறிக்கொண்டிருந்தது. கண்கள் இரண்டையும் தைத்திருந்தார்கள். தொற்று வந்துவிடுமாம். பார்ப்பதற்கே விகாரமாக இருந்தது அந்தக் குழந்தை.

எனக்கு கண்களில் நீர் முட்டிக்கொண்டு வந்தது. இதை நண்பரின் மனைவி கவனித்திருக்க வேண்டும். எங்களுக்கு அழுது அழுது நீரே வத்திப்போச்சு என்றார். பார்ப்பதற்கும் ஆளில்லை. நண்பரின் அம்மாவும் அப்பாவும் வந்திருந்தார்கள். அறுவை சிகிச்சை முடிந்தபின் அப்பா குழந்தையைப் பார்த்ததும் மயங்கி விழுந்துவிட்டார். வயதான அவரை வைத்துக்கொண்டு குழந்தையையும் பார்க்க முடியாது என்பதால் அவரை ஊருக்கே அனுப்பிவைத்துவிட்டார். கொஞ்ச நேரத்தில் கிளம்பி வந்துவிட்டேன்.

நண்பர் ஒருவர் தனக்குத் தெரிந்த மடத்தின் மூலம் காஞ்சிபுரத்திலுள்ள மருத்துவமனையின் தலைமை பொறுப்பிலுள்ள ஒரு முக்கிய நபரிடம் செலவுகளைக் குறைத்துத் தரும்படி கோரிக்கை வைத்தார். வீண் போகவில்லை. நண்பர் கட்டியிருந்த இரண்டு லட்சத்து இருபதாயிரத்தில் ஐம்பதாயிரத்தை திருப்பிக் கொடுத்துவிட்டார்கள். வேறு நண்பர் ஒருவர் தனக்குத் தெரிந்த டிரஸ்ட் மூலம் ஐந்தாயிரம் ரூபாய் வாங்கிக் கொடுத்தார். கடைசியாக நண்பரின் மேலாளர் அலுவலக தலைமையிடத்தில் பேசி ஒரு லட்சம் ரூபாய் வாங்கிக் கொடுத்துவிட்டார். இதை வைத்து கடனாக வாங்கிய பணம் அனைத்தையும் திருப்பிக் கொடுத்துவிட்டார். ஒவ்வொரு வாரமும் மருத்துவமனைக்குச் செல்கிறார். தலையில் வீக்கம் குறைந்தபின் தாடை, பற்களுக்கான சிகிச்சையை மேற்கொள்ளவேண்டும்.

நண்பரும் அவரது மனைவியும் இப்போதெல்லாம் மாறிமாறித்தான் தூங்குகிறார்கள். தலையிலிருந்து இன்னும் தையல் முழுதாய் உதிரவில்லை. அதற்குள் குழந்தை தலையைச் சொறிந்து கொள்ளாமல் இருக்க இருவரும் உறங்காமல் மாறி மாறி கவனித்துக்கொள்கிறார்கள். இவ்வளவு விஷயங்களையும் நான் நேற்று என் மனைவியிடம் தெரிவித்தபோது அவளுக்கு அழுகையே வந்துவிட்டது. ஒரு மாதம் முன்பு மகள் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது என்னால் அலுவலகத்தில் வேலைகளை சரிவர கவனிக்க முடியவில்லை. ஆனால் இவருக்கோ நிலைமை இவ்வாறிருக்க எப்படித்தான் அடுத்து வரும் நாட்களை, வாரங்களை, மாதங்களைக் கடத்தப் போகிறாரோ என்ற கவலை எனக்குள் வந்து ஒட்டிக்கொள்கிறது.

பெரியவர்களுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் சமாளித்துக்கொள்ளலாம், சிறு குழந்தைகளை மட்டும் சோதிக்காதே இறைவா!