அலுவலகம் முடிந்து வெளியே வந்தபோது மணி பத்தைக் கடந்திருந்தது. நான் எப்போதெல்லாம் ஊருக்குப் போகவேண்டும் என்று திட்டமிடுகிறேனோ அப்போதெல்லாம் ஏதாவது முக்கியமான வேலையில் மாட்டிக்கொள்கிறேன். நல்லவேளையாக மனைவி கேட்டபோது கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு வரவேண்டாம் என்று சொல்லியிருந்தேன். அவள் வந்திருந்தால் அனாவசிய அலைச்சல், டென்ஷன். இனி கடலூர் செல்வதென்றால் காலையில்தான் புறப்படவேண்டும். இப்போதே போகலாம்தான். ஆனால் நடுராத்திரியில் ஊர் ஊராக அலைவதில் எனக்கு விருப்பமில்லை. காலை ஐந்து மணிக்கு கிளம்பினால் பத்து மணிக்குள் சென்றுவிடலாம்.


பைக்கை ஸ்டார்ட் செய்தேன். அம்மாவுக்கு பணம் கொடுக்கவேண்டும். சில நாட்களாகவே அவளுக்கு உடல்நிலை சரியில்லை. பாதத்தில் அடிபட்டு புண் வந்துவிட்டது. சர்க்கரை வியாதி இருப்பதால் ஆற மறுக்கிறது. சென்னைக்கு வந்து சிகிச்சை எடுத்துக்கொள்ளச் சொன்னால் வர மறுக்கிறாள். அவளுக்கு அப்பாவையும் அக்காள் மகள்களையும் பிரிந்து வர மனம் வரவில்லை. போகும் வழியில் பஸ்ஸ்டாப்பை ஒட்டிய அந்த ஏ.டி.எம்.மில் இருபதாயிரம் ரூபாய் எடுத்துக்கொண்டேன்.

வண்டியில் அமர்ந்து ஸ்டார்ட் செய்ய முற்படுகையில் பஸ் ஸ்டாப்பிலிருந்து அவள் ஓட்டமும் நடையுமாக வந்தாள். என்னை நோக்கித்தான். இறுக்கமான ஜீன்ஸ் பேன்ட்டும் டி-ஷர்ட்டும் அணிந்திருந்தாள். கண்களில் ஒரு மிரட்சி. ஏதோ ஆபத்தில் இருக்கிறாள் போலும். "சார், டக்குனு பாக்காதீங்க, அந்த பஸ் ஸ்டாப்ல ரெண்டு பசங்க என்னை ஒரு மாதிரியா பாக்கிறாங்க, பயமா இருக்கு" என்றாள். நானும் வேறு எங்கோ பார்ப்பதுபோல் அவர்களை கவனித்தேன். இரண்டுபேர் எங்களையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். எனக்கே பயமாகத்தான் இருந்தது.

"சார், நீங்க எங்க போறீங்க?"

"அடையார்"

"ஹப்பாடா, போற வழியில என்னை திருவான்மியூர்ல டிராப் பண்ண முடியுமா?"

எனக்கும் அதுதான் சரியென்று பட்டது. "ஏறிக்கோ" என்றேன். சற்றும் தாமதிக்காமல் என் பின்னால் ஏறி அமர்ந்து வலது கையால் என் தோளைப் பற்றிக்கொண்டால். வண்டியை விரட்டினேன். "ஏம்மா, ஊர் கெட்டுக்கிடக்கு, ராத்திரி நேரத்துல ஏன் தனியா வர்றே?" என்றேன். "வேற வழியில்லாம வரவேண்டியதாப் போச்சு, ரொம்ப நேரமாகியும் பஸ் வேற வரலை" என்றாள்.

இரண்டு கிலோமீட்டர் கடந்திருப்போம், அவள்தான் ஆரம்பித்தாள். "என் பேரு ஆர்த்தி, உங்க பேரு?"

"அருண்"

"கல்யாணம் ஆயிடுச்சா? இல்ல, தனியாத்தான் தங்கியிருக்கீங்களா?"

"ஆயிடுச்சு"

"பசங்க?"

"இல்லை"

"எனக்கு இப்பத்தான் மாப்பிள்ளை பாக்கறாங்க. நல்ல ஹேண்ட்சம்மா எதிர்பாக்கறேன். ஆனா யாரும் அப்படி அமையல"

"ம்"

"எனக்குன்னு ஒருத்தன் இனிமே பொறக்கவா போறான்?"

" '"

"என்ன ஒண்ணுமே பேசாம வரீங்க?"

"வண்டி ஓட்டும்போது பேசமாட்டேன்"

"இப்போ பேசறீங்களே, ஹா ஹா"

கொஞ்ச நேரம் முன்புதான் தான் கற்பழிக்கப்பட்டுவிடுவோமோ என்கிற பயத்தை அவளது கண்களில் பார்த்திருந்தேன். பத்தே நிமிடத்தில் அவளது செய்கைகள் முற்றிலும் மாறிவிட்டன. சென்னைவாழ் பெண்கள் இம்மாதிரியான சூழலில் சிக்கியும் தப்பியும் வாழப் பழகிக்கொண்டுள்ளார்கள். இந்த நிலை என்று மாறுமோ!



வண்டியை சீராக செலுத்திக்கொண்டிருந்தேன். ஏதேதோ பேசிக்கொண்டே வந்தாள். எதுவுமே உப்புப் பெறாத விஷயங்கள். எனக்கும் பொழுது போகவேண்டுமே. கேட்டுக்கொண்டே வந்தேன். ஒரு ஸ்பீட் பிரேக்கரில் ஏறிஇறங்கியபோது எனக்கு மிக நெருக்கமாக அமர்ந்துகொண்டாள். ஜீன்ஸ் அணிந்திருந்த அவளது கால்கள். என் கால்களுடன் ஒட்டி உரசிக்கொண்டிருந்தது. நான் இதை சட்டை செய்யவில்லை, என் மனம் முழுவதும் ஊர் நினைவாகவே இருந்தது. எப்படியாவது வரும்போது அம்மாவை அழைத்துக்கொள்ள வேண்டும்.

கவனமாகத்தான் சென்றுகொண்டிருந்தேன். திடீரென்று முன்னால் சென்ற கார் பிரேக் அடிக்க, பட்டென்று நானும். பிரேக்கை அழுத்தினேன் என்பதைவிட ஏறி மிதித்தேன் என்றே சொல்லவேண்டும். 'கிரீச்' என்ற சப்தத்துடன் என் வண்டி காருக்கு ஒரு இன்ச் பின்னால் நின்றது. மூன்று எருமைகள் தேமே என்று சாலையைக் கடந்துகொண்டிருந்தன. மனம் திக்திக் என்று அடிக்க சுய நினைவுக்கு வந்தேன். அப்போதுதான் உணர்ந்தேன். அவள் என்னை இறுக்கி அணைத்திருந்தாள். அவளது நெஞ்சில் அடித்த திக்திக் என் முதுகு வழியாக ஊடுருவிப் பாய்ந்து என் மூளையை அடைந்தது.

"சாரி" என்றேன், "இட்ஸ் ஓகே" என்றாள். அந்த இட்ஸ் ஓகே-யில் எந்த உணர்ச்சியைக் கொடுத்தாள் என்று என்னால் உணரமுடியவில்லை. சரியாக அமர்ந்துகொண்டாள். அவள் என்னை இறுக்கமாக அணைத்திருந்ததை என் தலை முதல் கால் வரை இன்னும் உணர்ந்துகொண்டிருந்தேன்.

இதோ, திருவான்மியூர் வந்தாயிற்று. "எங்கே இறங்கனும்?" என்றேன். "அந்த சிக்னல்ல நிறுத்துங்க" என்றாள். அவள் இறங்கவேண்டிய இடம் இன்னும் கொஞ்ச தூரத்தில் இருக்கக்கூடாதா என்று மனம் ஒரு நொடி ஏங்கியது. "வீடு எங்கே?" 

"இங்க பக்கத்துலதான், ரெண்டாவது தெருவில், வாங்களேன்"

"தாராளமா, வீட்டு முன்னாடியே டிராப் பண்ணிடறேன்"

"ம்ஹூம், வீட்டுக்கு வந்து ஒரு காபி சாப்பிடறதா இருந்தா வீட்ல டிராப் பண்ணுங்க"

"வேண்டாமே, உங்க அம்மா அப்பா ஏதும் தப்பா நினைச்சிப்பாங்க"

"நீங்க டிராப் பண்றதுக்கு ஏதும் சொல்ல மாட்டாங்க, ஆனா நடந்த பிரச்சனையை சொன்னா என்னோட சுதந்திரம் பறிபோகும். அது ஒண்ணுதான்"

எனக்கு கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தாலும் அவள் சொல்வது சரியென்றே பட்டது. "அப்போ, நான் எப்ப காபி சாப்பிட வரட்டும்?" என்றேன் குறும்பாக. "அம்மா அப்பா இல்லாத நேரம் நானே போன் பண்றேன், வாங்க" என்றாள். அவள் உணர்த்திய குறியீடுகள் என் மனதில் பளிச்சென்று மின்னலடித்தது.

"ஓகே, நான் வரேன். ஸீ யூ" 

"அருண், உங்க போன் நம்பர் சொல்லுங்க"

சொன்னேன். "உன் நம்பர்?" என்றேன். "நீங்க வீட்டுக்குப் போறதுக்குள்ள நான் missed call கொடுக்கறேன். save பண்ணிக்கோங்க" என்றாள். சிரித்தாள், கிளம்பிவிட்டாள். அவள் போவதையே பார்த்துக்கொண்டிருந்தேன். என்ன பெண் இவள்! பாலச்சந்தர் படத்தில் வரும் ஹீரோயின் போல புரியாத புதிராக இருப்பாள் போலிருக்கிறதே.

என் வண்டி அடையாறு நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. அவள் இறங்கிவிட்டிருந்ததை என் உள்மனம் இன்னும் நம்பவில்லை. அவள் என்னை இறுக்கமாக அனைத்திருந்ததை என் தலை முதல் கால் வரை இன்னும் உணர்ந்துகொண்டிருந்தேன். என் அலைபேசி கிர் கிர் என்றது. அவள்தான். அவளாகத்தான் இருக்கும். நான் மிதந்துகொண்டிருந்தேன்.

வீட்டுக்குச் சென்றதும் பேன்ட் சட்டையைக் கழற்றிவிட்டு லுங்கிக்கு மாறினேன். சட்டையில் இன்னும் அவளது வாசம் வருவதாகவே உணர்ந்தேன். டிவியை ஆன் செய்துவிட்டு என்னுடைய மொபைலை எடுத்துப் பார்த்தேன். ஒரே ஒரு மிஸ்டு கால் இருந்தது. யாரென்று பார்த்தேன், மனைவி. ஹூம். "எதுக்கு போன் பண்ணினே" இங்கிருந்தே கத்தினேன். "நீங்க கிளம்பிட்டீங்களா இல்லையான்னு தெரிஞ்சிக்கத்தான்" என்றாள். ஆர்த்தி என்னை இறுக்கமாக அணைத்திருந்ததை என் தலை முதல் கால் வரை இன்னும் உணர்ந்துகொண்டிருந்தேன்.

"ஏங்க, அம்மாவுக்கு பணம் கொடுக்கணுமே, எடுத்தீங்களா? பேன்ட் பாக்கெட்ல பர்சையே காணோமே!"

அவள் என்னை இறுக்கமாக அணைத்திருந்ததை என் தலை முதல் கால் வரை இன்னும் உணர்ந்துகொண்டிருந்தேன்.