அவள் பெயர் நான்சி. அவளுடன் வாக்கிங் வருபவர் அப்படித்தான் அழைப்பார். தினமும் காலை ஆறு மணிக்கெல்லாம் அவருடைய குரலைக் கேட்கமுடியும். நான்சி எங்காவது நின்றுவிட்டால் "நான்சி கமான்" என்பார். சாலையில் கிடக்கும் தேவையில்லாத வஸ்துக்களை அவள் முகர்ந்தால், "நான்சி டோன்ட்" என்பார். அவளும் அவருடைய சொல்பேச்சைத் தட்டமாட்டாள். அவர்கள் வீடு இருக்கும் தெருவிலிருந்து இரண்டு தெருக்கள் தாண்டித்தான் நான் வசிக்கிறேன். என் இருப்பிடத்தைக் கடந்துசென்று தெருமுனையிலிருக்கும் கடையில் அவர் தினமும் தேநீர் குடிப்பார். நான்சிக்கு பிஸ்கட்.



நான்சி மிகவும் அழகானவள். அழகை விட அழகு அவளுடைய நிறம். பால், நிலா என்று வெள்ளைக்கு என்னவெல்லாம் உதாரணம் சொல்லமுடியுமோ அத்தனையும் அவளுக்குப் பொருந்தும். தினமும் நடைபயிற்சி, நல்ல சாப்பாடு, வாரம் ஒருமுறை குளியல், மாதம் ஒருமுறை மருத்துவப் பரிசோதனை என ஆரோக்கியமான வாழ்வு. தவிர அவள் உயர்ஜாதியில் பிறந்தவள். என் போல அவளுக்கு சுதந்திரம் இல்லையென்றாலும் அவளுக்கு வேண்டியதெல்லாம் கிடைத்துக்கொண்டுதான் இருக்கிறது.  என் சக மாக்கள் பலருக்கும் அவள்மீது ஒரு கண். எப்படியாவது அவளை அடைந்தே தீரவேண்டும் என்று வாசனை பிடித்துக்கொண்டு அவள் பின்னால் அலைந்திருக்கிறார்கள். ஆனால் அவள் யாரையும் தொட அனுமதித்ததில்லை. எனக்கும் அவள்மீது ஒரு இனம்புரியா ஈர்ப்பு இருந்ததுண்டு. ஆனால் என்ன காரணமோ அவளை நான் நெருங்கியதில்லை.


எனக்கும் அவளுக்குமிடையே நல்லதொரு நட்பு தொடங்கியிருந்தது. எப்படி? ஒருநாள் காலை நல்ல பசியுடன் தெருவில் அலைந்துகொண்டிருந்தேன். அந்த டீக்கடையை நெருங்கியபோதுதான் கவனித்தேன். அங்கே அவளும் அவரும். என்ன ஆனாலும் பரவாயில்லை என்று அவளை நெருங்கினேன். பசியால் வாடியிருந்த என் முகத்தைப் பார்த்த அவள் தனக்குக் கொடுக்கப்பட்டிருந்த இரண்டு பிஸ்கட்களில் ஒன்றை எனக்குத் தந்தாள். நன்றியை வெளிக்காட்டக்கூட அவகாசமின்றி முழுவதும் தின்று முடித்தேன். "என்னடா, பசிக்குதா?" என்று கேட்ட அவளுடைய எஜமானர் மேலும் இரண்டு பிஸ்கட்களை வாங்கி ஒன்றை எனக்கும் மற்றொன்றை அவளுக்குமாய் பகிர்ந்து கொடுத்தார். என் நன்றி விசுவாசத்தைக் காட்டும் விதமாய் அவர்களுடன் வீடுவரை போனேன்.


இப்படித் தொடங்கிய எங்கள் நட்பு தினமும் கடைக்கு வருவதும், பிஸ்கட் சாப்பிடுவதும் வீட்டுக்குச் செல்வதுமாய் இப்படியே தொடர்ந்தது. எனக்கு வாசல் வரை மட்டுமே அனுமதி. வீட்டுக்குள் இல்லை. காரணம் என்னவென்று சில நாட்கள் கழித்துத்தான் தெரிந்தது. நான்சி எஜமானிக்கு அதாவது எஜமானரின் மனைவிக்கு என்னைப் பிடிக்காதாம். நான்சியையும் பிடிக்காதாம். இவ்வளவு ஏன், எஜமானரையே பிடிக்காதாம். அவர்களுக்குள் அப்படி என்ன சண்டை என்று எனக்குத் தெரியாது. ஆனால் நான்சி வந்ததிலிருந்தே அவர்களுக்குள் சண்டை தானாம். வேலை விஷயமாகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ அவர் வெளியூர் செல்ல நேர்ந்தால் நான்சி பாடு திண்டாட்டம்தான். அவளுக்கு சாப்பாடு வைக்கமாட்டார்களாம். அவர் ஊரிலிருந்து வரும்வரை பட்டினியாகவே இருப்பாளாம். இதற்காகவும் பலமுறை அவர் சண்டை போட்டிருக்கிறாராம்.


ஒரு நாள் வழக்கம்போல் அதே கடையில் காலை நேரத்தில் காத்திருந்தேன். அவர்கள் வரவில்லை. ஒருவேளை அவர் வெளியூர் சென்றிருக்கக்கூடுமோ என்ற சந்தேகத்தில் அவருடைய வீட்டுக்குச் சென்றேன். வாசலில் பெருங்கூட்டம். வீட்டுக்கு வெளியே பந்தல் போடப்பட்டிருக்க கண்ணாடிப் பெட்டிக்குள் அவரைப் படுக்கவைத்திருந்தார்கள். சுற்றி பலர் அழுதுகொண்டிருந்தார்கள். அந்த எஜமானியும். அருகிலேயே நான்சியும் அமைதியாகப் படுத்திருந்தாள். என்னைப் பார்த்ததும் ஊவென்று அவளால் அலறத்தான் முடிந்தது. அங்கிருந்த யாரோ ஒருவர் "சனியன், சனியன். அலறுது பாரு" என்று அவளுடைய முதுகில் ஓங்கி ஒரு அறை விட, அவள் அலறிக்கொண்டு என்னை நோக்கி ஓடிவந்தாள். எனக்கு அவளிடம் எப்படி ஆறுதல் சொல்வதென்று தெரியவில்லை. மயானம் வரை அமைதியாகச் சென்றுவந்தேன்.


பத்து நாட்கள் இருக்கும். வீட்டிலிருந்த உறவினர்கள் யாரோ நான்சியை கவனித்துக்கொண்டார்கள். அவர்கள் அனைவரும் தங்களது ஊருக்குப் புறப்பட்டுச் சென்றதும் நான்சியின் பாடு திண்டாட்டமானது. சாப்பாடு இல்லை, தண்ணீர் இல்லை. அந்த எஜமானி அடித்து விரட்டிவிட்டாள். பாவம், நான்சி அதன்பிறகு என்னைத்தான் தேடி வந்தாள். நான் இருக்கும் இடத்திலேயே அவளையும் வைத்துக்கொண்டேன். அவள் என்னுடன் ஊர் சுற்றுவதும் கண்ட இடங்களில் கண்டதைத் தின்பதும் வாடிக்கையானது. நான்சிக்கு இந்த சுதந்திரம் மிகவும் பிடித்திருந்தது. அவளுடைய எஜமானர் இருந்திருந்தால் அவருக்காக இந்த சுதந்திரத்தை தியாகம் செய்திருப்பாள். அவர் இல்லாத குறையைத் தீர்க்க நான் அதிகம் அவளிடம் அன்பைப் பொழிந்தேன். விளையாடினேன். சோகத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்துகொண்டிருந்தாள். சில நாட்களாக என்னுடன் தான்தோன்றித்தனமாக திரிந்ததாலோ என்னவோ அவளுடைய நிறமும் அழகும் குறைந்திருந்தது. ஆனால் அதைப்பற்றி அவள் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.


இந்த நிலையில்தான் ஒரு நாள் அந்த டிராக்டரைக் கண்டேன். கல், மண் போன்ற பொருட்களை ஏற்றிச்செல்லும் அந்த வண்டியில் குற்றுயிரும் குலையுயிருமாய் என் சக மாக்கள். நகராட்சியிலிருந்து ஏதோ அறிக்கை விட்டிருக்கிறார்கள். யார் கண்ணிலும் படாமல் என் இருப்பிடத்துக்கு வந்து சேர்ந்தேன். அதன் பின்னர் நானும் நான்சியும் வெளியில் செல்வதென்றால் சர்வ ஜாக்கிரதையாகத்தான் செல்வோம். ஒரு நாள், நாங்கள் வெளியே சுற்றும்போது எவனோ ஒருவன், எங்கிருந்து வெளிப்பட்டான் என்று தெரியவில்லை. அவன் கையில் நீளமான கம்பு. அதன் ஒரு முனையில் மெலிதான கம்பி வட்டமாக வளைத்துக் கோர்க்கப்பட்டிருந்து. அவன் திடீரென்று அவளுக்கு நேராக அதைப் பிடிக்க, ஓடத் தொடங்கிய அவளுடைய கழுத்தில் அந்த வளையம் மாட்டிக்கொண்டு இறுகியது. நான் இதை கவனிப்பதற்குள் திடீரென்று வெளிப்பட்ட வேறு ஒருவன் தன் கையிலிருந்த இரும்புக் கம்பியால் நான்சியின் தலையில் ஓங்கி அடித்தான். வீல் வீல் என்று அலறியபடி ஓட எத்தனித்த அவளை அந்தக் கம்பி இறுகப் பிடித்ததே தவிர தப்பிக்க விடவில்லை. நான் படாரென்று அவன் மீது பாய்ந்தேன். என் பாய்ச்சலை அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. என் இரண்டு கால்களையும் அவன் தோள்மீது பற்றி அவனுடைய கழுத்தைக் கடித்தேன். அவனுடைய குரல்வளையில் எப்படியும் எட்டு ஓட்டைகளாவது விழுந்திருக்கும். ஆவென்று சரிந்தான். எப்படியாவது நான்சியைக் காப்பாற்றியாக வேண்டும். அவளை நோக்கித் திரும்பினேன். மடேர். என் தலையில் அதே இரும்புக் கம்பியால் மற்றொருவன் அடித்திருந்தான். என் கண்கள் சொருக, நான்சியை நோக்கினேன். அவள் கொஞ்சம் கொஞ்சமாக இறந்துகொண்டிருந்தாள். அவளுடன் என் குட்டிகளும்.