சென்னையில் பல இடங்களில் ஒரு அண்டா நிறைய பிரியாணி வைத்து கையிலிருக்கும் சிறு தட்டு கொண்டு டங் டங் என்று தட்டிக்கொண்டே வியாபாரம் செய்யும் பல கடைகளைப் பார்த்திருக்கிறேன். ஆனால் அவற்றிலேயே தரமான, சுவையான பிரியாணி தருவதில் எனக்குத் தெரிந்து முதலிடம் "மயிலை பிரியாணி" மட்டுமே.




மிகச்சிறிய இடம். மொத்தம் பத்து பேர் மட்டுமே அமரக்கூடிய அளவு மட்டுமே. டேபிள், சேர் எதுவும் கிடையாது.  சுவரை ஒட்டிய இரும்பினாலான ஸ்டூல், அமர்வதற்கு பிளாஸ்டிக் ஸ்டூல் ஆகியவை மட்டுமே.

அலுவலக நண்பர் ஒருவருடன் நேற்று முன் தினம் இங்கே சென்றேன். ஏற்கனவே தெரிந்த கடையாதலால் போனவுடன் ஆளுக்கு ஒரு பிளேட் பிரியாணி ஆர்டர் செய்தோம்.  பல கடைகளில் சிக்கன் தனியாகவும் சாதம் தனியாகவும் வேகவைத்து பரிமாறும்போது சேர்த்துப் பரிமாறுவார்கள்.  ஆனால் இங்கே சிக்கனை சாதத்துடன் வேகவைத்திருப்பதால் சாதத்தில் சிக்கன் சுவையும் கலந்து இருக்கிறது.  மிகவும் நீளமான அரிசி எண்ணெய் இல்லாமல் மிகவும் மிருதுவாக இருக்கிறது.


"சிக்கன் பசி" அடங்க முதலில் ஒரு பிரியாணி, பின் மீண்டும் ஒரு பிரியாணி பின் சாதத்துக்காக ஒரு குஸ்கா ஆர்டர் செய்து சாப்பிட்டோம்.  ஒரு பிரியாணி 70 ரூபாய், குஸ்கா 50 ரூபாய்.  ஆளுக்கு 190 ரூபாய் மட்டுமே.  வயிறையும் காசையும் பதம் பார்க்காத சுவையான சாப்பாடு.




சிக்கன் பக்கோடா, ஆம்லேட் போன்றவை மாலை நேரங்களில் மட்டுமே கிடைக்கிறது.  இருந்தாலும் இங்கு வருபவர்கள் நம்மைப்போல் இரண்டு மூன்று பிரியாணி சாப்பிடுபவர்களே.  மதியம் ஒரு அண்டா, மாலையில் ஒரு அண்டா பிரியாணி மட்டுமே விற்கிறார்கள்.  


நான் அவ்வப்போது அலுவலக நண்பர்களுடன் போவதுண்டு.  மீண்டும் மீண்டும் ருசிக்கத் தூண்டும் பிரியாணி.