இயக்குநர் கேபிள் சங்கருடைய தொட்டால் தொடரும் திரைப்படம் வரும் வெள்ளியன்று வெளியாகவுள்ளது. அவர் சில நாட்களுக்கு முன் ஒரு குறும்படப் போட்டி ஒன்றை அறிவித்திருந்தார். அதாவது, "தொட்டால் தொடரும்" என்ற தலைப்புக்கு ஏற்றவாறு ஒரு நிமிடத்தில் ஒரு நல்ல கருத்துள்ள குறும்படம் எடுக்கும்படி கேட்டுக்கொண்டிருந்தார். இதையொட்டி என் மனதில் தோன்றிய ஐடியா ஒன்றை நண்பர் ஒருவரிடம் தெரிவிக்க, அவருக்கும் இது பிடித்துப் போனது. உடனே அவர் நீயே எடு என்று கூறி தனது கேமராவையும் கொடுத்து உதவினார்.


இந்தப் படத்தில் நடித்திருப்பவர்கள் இரண்டே பேர். ஒன்று நான், மற்றொருவர் பதிவர் ரூபக் ராம். முதலில் இதில் நடிப்பதற்காக நான் அணுகியது மெட்ராஸ் பவன் சிவக்குமார் தான்.  அவர்தான் பொருத்தமாக இருப்பார் என்று நினைத்திருந்த எனக்கு இந்தப் பாத்திரத்தில் நடிப்பதற்கு ரூபக் தான் சரியான ஆளாக இருப்பார் என்று அடையாளம் காட்டினார். நான் ரூபக்கிடம் விஷயத்தை சொல்ல, அவரும்  சம்மதித்தார்.

ஆனால் ஒரு பிரச்சனை இருந்தது. ரூபக் வேலை செய்வது ஒரு ஐ.டி. நிறுவனத்தில். அவருக்கு வார நாளில் தான் விடுமுறை கிடைக்கும். ஆனால் எனக்கோ ஞாயிற்றுக்கிழமை மட்டுமே விடுமுறை. வேறு வழியின்றி ஒரு நாள் மட்டும் அலுவலகத்துக்கு விடுப்பு எடுத்துக்கொண்டேன். 

கேமரா தந்து உதவிய நண்பரே தெரிந்த ஒருவருடைய அலுவலகம் ஒன்றையும் டாஸ்மாக் கடையில் படம் எடுப்பதற்காக அனுமதியும் வாங்கிக் கொடுத்தார். நான் இதுவரை புரொபெஷனல் கேமராவை பயன்படுத்தியதேயில்லை. இதை எப்படி பிடிப்பது என்று கூடத் தெரியாது. ஒவ்வொன்றாக அவரிடமே கேட்டுத் தெரிந்துகொண்டேன். 

படத்துக்கென்று எந்த செலவும் செய்யவில்லை. எல்லாமே உதவியாகவே கிடைத்துவிட, ஒரே நாளில் படப்பிடிப்பை முடித்துக்கொண்டோம். ரூபக் மட்டும் நடிக்கும் காட்சிகளில் நானும் நான் மட்டும் நடிக்கும் காட்சிகளில் ரூபக்கும் கேமராவைக் கையாண்டோம். இருவரும் சேர்ந்து நடிக்கும் காட்சிகளில் கேமராவுக்கான ஸ்டாண்ட் வைத்து எடுத்தோம். ஓரிரு இடங்களில் மட்டும் அங்கிருக்கும் நண்பர்களின் உதவியை நாடினோம்.


எடிட்டிங் போன்ற டெக்னிக்கல் விஷயங்கள் தெரியாது. இதற்கான மென்பொருட்களை இணையத்தில் தேடி கணினியில் நிறுவிக்கொண்டேன். ஒவ்வொன்றாகப் பார்த்து பார்த்து கற்றுக்கொண்டு எடிட் செய்தேன். வசனம் இல்லாததால் ஒலிக்கோப்புகளை இணையத்தில் எடுத்து சேர்த்துவிட்டேன். கொஞ்சம் அமெச்சூர்தனமாகத்தான் இருக்கும். பொறுத்துக்கொள்ளுங்கள். ஒரு நிமிடம், நாற்பது நொடிகள் மட்டுமே ஓடும் இந்தக் குறும்படத்தைப் பாருங்கள், உங்கள் கருத்துக்களைக் கூறுங்கள் – எப்படிப்பட்டதாயினும்.