அவள் பெயர் சந்தியா. எனக்கு எதிர் பிளாட்டில்தான் குடியிருக்கிறாள். நான் அலுவலகம் போகும்போதோ வரும்போதோ அவளைக் காண்பதுண்டு. என்னைப் பார்த்தால் அவள், "ஹாய்" என்பாள். நானும் பதிலுக்கு ஹலோ என்ற ஒற்றை வார்த்தையை உதிர்த்துவிடுவேன் அல்லது ஒரு சிறு புன்னகையுடன் கடந்துவிடுவேன். சில நேரங்களில் நான் வீட்டுக்கு வரும்போது அம்மாவுடன் பேசிக்கொண்டிருப்பாள். பை த பை என் பெயர் அருண்.



அவள் ஒரு ஹோண்டா ஆக்டிவா வைத்திருக்கிறாள். வண்டி நிறுத்துவதற்கு நிறைய இடமிருந்தாலும் எப்போதும் என் பல்சரின் மீது சாய்த்து ஒட்டி நிறுத்துவாள். தினமும் என் வண்டியை அவளது வண்டியில் உரசாமல் லாவகமாக எடுப்பதற்கே நிறைய நேரம் செலவானது. இப்படி எடுக்கும் சில நேரங்களில் அவள் மேலிருந்து ஜன்னல் வழியாகப் பார்த்து, "என் குவாலிஸ் மேல உரசாதீங்க" என்பாள். சிறுபிள்ளைத்தனமாகத் தோன்றினாலும் நான் எதுவும் சொல்வதில்லை. சில நாட்களில் நான் அலுவலகம் புறப்படும்போது அவளும் அவளுடைய வண்டியை எடுத்துக்கொண்டு புறப்படுவாள். நான் கேட்கவில்லையென்றாலும் கோவிலுக்குப் போயிட்டு வரேன் என்றோ காலேஜ்ல ஒரு வேலை இருக்கு என்றோ சொல்லிவிட்டுப் போவாள்.

அன்றொரு நாள் - அழைப்பு மணி அழுத்தப்பட, கதவைத் திறந்தேன். புதிதாய்ப் பூத்திருந்த பூவைப்போல் அழகாக வந்திருந்தாள். ஈரம் காய்வதற்காக விரித்துவிடப்பட்டிருந்த கூந்தல் காற்றில் படபடத்தது. வெளிர் நிற சல்வார் அணிந்திருந்தாள். அதில் அழகான வேலைப்பாடுகள். நெற்றியில் சந்தனக் கீற்று. துறுதுறுக்கும் கண்களுடன் என்னைப் பார்த்து சாக்லேட் எடுத்துக்கோங்க என்று தன் கைகளிலிருந்த டப்பாவை நீட்டினாள். மேனி மோர் ஹேப்பி ரிட்டர்ன்ஸ் ஆப் தி டே என்றேன். எத்தனையாவது என்று கேட்க எத்தனித்திருந்தாலும் "பொம்பளைங்க கிட்ட வயசைக் கேக்காதே, ஆம்பளைங்க கிட்ட வருமானத்தைக் கேக்காதே" என்ற மனோரமாவின் வசனம் ஒரு முறை ஒலித்தது.

அலுவலகத்துக்குப் புறப்பட்டிருந்தேன். என்னுடைய வண்டியை எடுக்கப்போகும் நேரம் ஓடி வந்தாள் சந்தியா. கோவிலுக்குப் போயிட்டு வந்திடறேன் என்று கூறி தன் ஆக்டிவாவை வெளியே எடுத்தாள். "அது ஏன், நிறைய இடம் இருந்தாலும் என் வண்டி பக்கத்துலயே நிப்பாட்டுறே, எனக்கு வண்டி எடுக்க கஷ்டமா இருக்கு" என்றேன். "இது உங்க பல்சர், நீங்க செண்டர் ஸ்டாண்டு போட்டு சும்மா ஸ்டைலா நிக்கறீங்க. பக்கத்துல என் ஆக்டிவா, நான் உங்க தோள் மேல சாஞ்சு நிக்கறேன்" என்று கூறிவிட்டுப் பறந்துவிட்டாள்.

அட, இது காதல். என் மரமண்டைக்கு இப்போதுதான் உறைத்தது. இப்படிக்கூட காதலை வெளிப்படுத்த முடியுமா? நான் உன்னைக் காதலிக்கிறேன் என்று சொல்லாமல் சொல்லிவிட்டாளே! 

அவள் இந்நேரம் கோவிலுக்கே போயிருப்பாள். நான் மிதந்துகொண்டிருந்தேன். என்ன செய்யட்டும், எனக்கும் பிடித்திருக்கிறதே! போன் நம்பர் தெரியாது. இனி மாலை தானா? அலுவலகத்தில் வேலை ஒன்றும் ஓடவில்லை. ஒரு மணி நேரம் மட்டும் விடுப்பு எடுத்துக்கொண்டு சீக்கிரமே வீடு வந்து சேர்ந்தேன். அவள் எப்படி அவளுடைய ஆக்டிவாவை நிறுத்துவாளோ அதேபோல என்னுடைய பல்சரை அவளது ஆக்டிவாவுக்குப் பக்கத்தில் சாய்த்து ஒட்டியபடி நிறுத்தினேன். இதற்கு மேல் அவளுக்கு விளக்க வேண்டியதில்லை.


வீட்டில் – “மாமா போன் பண்ணினார்டா, எப்போ கல்யாணத்தை வச்சிக்கலாம்னு கேட்டார்” – இது அம்மா. எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. வீட்டைவிட்டு அக்கா ஓடிப்போனதும் ஊர் மக்களெல்லாம் ஒரு மாதிரியாகப் பேச, சுடுசொல் தாங்காத அப்பா தூக்கில் தொங்கிவிட்டார். ஊரில் வாழப் பிடிக்காத அம்மா என்னை அழைத்துக்கொண்டு சென்னைக்கு வந்துவிட்டாள். இருந்த பணத்தை வைத்து வீட்டை வாங்கி என்னை மேற்படிப்பும் படிக்கவைத்து விட்டாள். அப்பா இறந்த சில நாட்கள் கழித்து என் தாய்மாமாவும் அம்மாவும் என்னை அவரது மகளுக்குத் திருமணம் செய்து வைப்பதாக அப்போதே பேசி முடித்துவிட்டார்கள்.

நீ ஒரு வருஷம்னு சொல்லி ஒரு வருஷம் ஆச்சு, பொம்பளைப் பிள்ளைய ரொம்ப நாளைக்கு வச்சிக்கிட்டு இருக்க முடியாதுடாஎன்றாள். என் மனக்கண்ணில் சந்தியா ஒரு முறை வந்துபோனாள். அடுத்த வருஷம் புரமோஷன் வரும்மா, இன்னும் சம்பளம் கூடும். அப்புறம் பாக்கலாம்என்றேன்.

அடுத்த நாள் நானும் சந்தியாவும் காபி டேயில் அருகருகே அமர்ந்திருந்தோம். வெளியே எங்கள் இருவரின் வாகனங்களும் வீட்டில் நிறுத்தி வைத்திருப்பதுபோலவே நின்றுகொண்டிருந்தன. உனக்கு என்ன பிடிக்கும்?” அவளது ரசனைகளை ரசிக்கத் தொடங்கியிருந்தேன். எப்போதிலிருந்து என்னை லவ் பண்ண ஆரம்பிச்சே?” என்னை எப்படியெல்லாம் ரசித்திருக்கிறாள் என்று கேட்டுத் தெளிந்து வியந்தேன்.

மாலை வீட்டுக்கு வந்ததும் அம்மா, “மாமா போன் பண்ணார்டா, ஆறு மாசத்துக்குள்ள கல்யாணம் பண்ணனுமாம். அதுக்கப்புறம் ரெண்டு வருஷத்துக்கு கல்யாணம் பண்ணவே கூடாதாம். ஜோசியர் சொல்லியிருக்காருஎன்றாள். அம்மாவிடம் என்ன சொல்வதென்று தெரியவில்லை. நான் சந்தியாவைக் காதலிப்பது அவளுக்குத் தெரிந்தால் பின்விளைவுகள் என்னவாக இருக்கும் என்று என்னால் ஊகிக்க முடியவில்லை.

அடுத்த நாள் நாங்கள் இன்னும் நெருக்கமாகியிருந்தோம். மனம்விட்டுப் பேசத்தொடங்கியிருந்தோம். பல விஷயங்களைப் பரிமாறிக்கொண்டதில் சந்தியா எனக்கு இணையான இணையாக இருப்பாள் என்று உறுதியானது. அன்று மாலை - அம்மா, "வர்ற தை மாசம் நிறைய முகூர்த்த நாள் இருக்குதாம், பாக்கச் சொல்லவா?" என்றாள். எனக்கு கோபம் வந்தது. "ஏம்மா, நான் தான் சொல்றேன்ல, இன்னும் ஏன் ஜோசியக்காரன் சொன்னதையே நம்பிட்டு இருக்கே" கடிந்துகொண்டேன். கல்யாணம் செய்துகொள்ளும் பிரச்னையை விட நான் சந்தியாவைப் பற்றி எப்படி அம்மாவிடம் சொல்லப்போகிறேன் என்கிற பிரச்சனையே பிரதானமாக இருந்தது. 

கடற்கரை மணலில் கோலமிட்டுக்கொண்டிருந்த சந்தியா, “ஏன், ஒரு மாதிரியா இருக்கீங்க?” என்றாள். எனக்குப் பெண் பார்த்த விஷயத்தை சொன்னேன். “இதான் ரைட் டைம், நம்ம விஷயத்தை அம்மா கிட்ட சொல்லிடுங்க” என்றாள். “இல்ல, நான் சொல்லப்போய் அப்பா மாதிரியே முடிவெடுத்துட்டாங்கன்னா” இழுத்தேன். “அப்போ, நீ என்னைக் கல்யாணம் பண்ணிக்க மாட்டியா?” என்றாள். மௌனமாக அவளையே பார்த்தேன். “யோசிக்கிற, இதை அன்னிக்கே யோசிச்சிருக்க வேண்டியது தானே?” அழத்தொடங்கினாள். அவளை சமாதானப்படுத்த முயன்று தோற்றேன். “இனிமே என் மூஞ்சில முழிக்காதே” – சென்றுவிட்டாள்.

அன்றிலிருந்து அவள் என் கண்ணில் படவேயில்லை. அவளது வண்டியைக் கூட இரண்டு அடி தள்ளியே நிறுத்தியிருந்தாள். ஒரு மாதம் கூட ஆகியிருக்கவில்லை. அவளுடைய அப்பாவுக்கு வேறு ஊருக்கு மாற்றலாகிவிட்டதாம். வீட்டை காலி செய்துவிட்டுக் கிளம்பிவிட்டார்கள். கடைசியாக கடற்கரையில் சந்தித்தது. பத்து நிமிட மழை போல நான்கு நாட்கள் காதல். பெய்து ஓய்ந்துவிட்டது. வாழ்நாள் முழுவதும் மறக்கமுடியாத முதல் காதல். அவளுக்கும் அப்படித்தான் இருக்கும். நல்லவேளையாக இந்த விஷயம் அம்மாவுக்குத் தெரியாது. இன்னொரு ஜீவன் சங்கடப்படுவதிலிருந்து தப்பித்தது.

தாய்மாமன் மகளையே திருமணம் செய்துகொண்டேன். ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. குழந்தைக்கு மூன்று வயதிருக்கும்.  ஊரிலிருந்து காரில் வரும்போது எதிரே வந்த லாரி மோதி மாமனார் சம்பவ இடத்திலேயே இறந்துபோனார். மனைவிக்கு இரண்டு கால்களும் முறிந்துவிட்டன. அதிர்ஷ்டவசமாக குழந்தைக்கு எதுவும் ஆகவில்லை. நான் அவர்களுடன் இல்லை. இருந்திருந்தால் நானும் இறந்திருக்கலாம். அல்லது கை கால் முறிவு ஏற்பட்டிருக்கலாம்.

மருத்துவமனை. அம்மா குழந்தையைக் கையில் பிடித்திருந்தாள். ஒருபுறம் அண்ணன் இறந்த சோகம், மறுபுறம் மருமகளுக்கு என்ன ஆயிற்றோ என்ற வருத்தம். மருத்துவர் வெளியே வந்தார். “கொஞ்சம் சீக்கிரம் கொண்டுவந்திருக்கலாம். ரெண்டு காலையும் எடுக்க வேண்டியதாச்சு, ஸாரி” என்றார். அம்மாவுக்கு தலை சுற்றியது. “என்னடா சொல்றாரு? காலம் முழுக்க வீல்சேர் தானா?” என்னால் அவளை சமாதானப்படுத்த முடியவில்லை.

“பேசாம நீ அந்த சந்தியாவையே கல்யாணம் பண்ணியிருக்கலாம்” என்றாள்.