வேளச்சேரியிலிருக்கும் அந்த ஹோட்டலுக்குள் நுழைந்தபோது மணி இரண்டைக் கடந்திருந்தது. அனிச்சைச் செயலாய் சல்யூட் அடித்து கதவைத் திறந்துவிட்டார் காவலாளி. உள்ளே நுழைந்ததும் முகத்திலறைந்த காற்று வெயிலில் வண்டி ஓட்டி வந்த களைப்பிற்கு இதமாக இருந்தது. வெளிர் நீல நிற சபாரி அணிந்திருந்த ஒருவர் என்னையும் என் மனைவி குழந்தைகளையும் பார்த்துவிட்டு எத்தனை பேர் சார்? என்றார். ரெண்டே முக்கால் என்று சொல்ல வாயெடுத்தவன் கடைசி நேரத்தில் முடிவை மாற்றிக்கொண்டு நாங்க மட்டும்தான் என்றேன். அந்த லாஸ்ட்ல போயிருங்க சார் என்றார்.


மகளைத் தூக்கிக்கொண்டு நடக்கத் தொடங்கினேன். இளையராஜாவின் பழைய பாடல் ஒன்று வீணையில் ஒலித்துக்கொண்டிருந்தது. மனதுக்கு இதமாக இருந்தாலும் இந்த ஹோட்டலில் எப்போதும் ஒரே சிடியை ஒலிக்க விடுகிறார்களே என்ற வருத்தம் கொஞ்சூண்டு இருந்தது. கருஞ்சிவப்பு நிறத்துக்கும் பிரவுன் நிறத்துக்கும் இடைப்பட்ட ஒரு நிறத்தில் திரை கொண்டு எல்லா ஜன்னல்களையும் மூடியிருந்தார்கள். இவற்றைத் திறந்து வைத்திருந்தாலே ஹோட்டல் முழுவதும் அதிகப்படியான வெளிச்சம் இருந்திருக்கும். மொத்தமும் இருட்டாக இருக்க ஆங்காங்கே ஓரிரு விளக்குகள் மட்டும் ஒளிர்ந்துகொண்டிருக்க ஒவ்வொரு மேசைக்கும் மேலே தொங்கவிடப்பட்டிருந்த சிறு விளக்குகள் காய்ச்சல் வந்தவன் போல முனகிக்கொண்டிருந்தன.

இரண்டு பேர் மற்றும் நான்கு பேர் மட்டும் அமர்ந்து சாப்பிடும் வகையில் மேசைகள் அமைக்கப்பட்டிருக்க மூலையில் இருக்கும் மேசைகள் மட்டும் ஆறு மற்றும் எட்டு பேர் அமரும் வகையில் வடிவமைத்திருந்தனர். கிட்டத்தட்ட அனைத்து இடங்களும் நிரம்பியிருக்க ஒவ்வொருவராய் நோட்டம் விட்டுக்கொண்டே எங்களுக்கான இடத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தேன்.


இருபத்து மூன்று அல்லது இருபத்து நான்கு வயது மதிக்கத்தக்க ஒரு பையன் அமர்ந்திருந்தான். எதிரில் அவனை ஒத்த வயதில் ஒரு பெண். திருமணமானதற்கான எந்த அறிகுறியும் இல்லை, ஒரே அலுவலகமாக இருக்கலாம். அவன் சிரித்து சிரித்துப் பேசிக்கொண்டிருந்தான். அவள் தன் கையிலிருந்த ஆண்டிராயிடில் கேண்டி கிரஷ் சோடாவோ சாகாவோ விளையாடிக்கொண்டிருந்தாள்.

அடுத்த மேசையில் இரண்டு பையன்கள். இருவருமே தங்களுக்கான உணவு வருவதற்காகக் காத்துக்கொண்டிருந்தார்கள். அதில் ஒருவன் வாட்ஸப்பில் கடலை வறுத்துக்கொண்டிருந்தான். நான் அவனைக் கடக்கையில் eppo tharuve என்று எதிர்முனையில் இருப்பவளிடம் கேட்டுக்கொண்டிருந்தான். அவனுக்கு எதிரே அமர்ந்திருந்தவன் யாரோடோ போனில் பேசிக்கொண்டிருந்தான்.

பக்கத்திலேயே ஒரு பெரிய குடும்பம். கிட்டத்தட்ட எட்டுபேர் தத்தம் தலைகளை இடித்துக்கொண்டு ஒரே இடத்தைப் பார்த்து செல்பி-க்காக சிரித்துக்கொண்டிருந்தார்கள். அடுத்த மேசையில் கணவனை மனைவி தனது கைபேசியில் படம் எடுத்து அதை புரோபைல் படமாக்கும் வைபவம் நடந்துகொண்டிருந்தது.

இதற்கு அடுத்த டேபிளில் தான் நாங்கள் அமரவேண்டும். மகளை இறக்கிவிட்டு அமர்ந்தேன். எதிரே என் மனைவியும் மகளும் அமர, என் மகன் என் அருகில் அமர்ந்துகொண்டான். அருகிலிருந்த மேசையில் ஒரு குடும்பம். என் மகன் வயதில் ஒரு பையன் ஒரு பெண் குழந்தை. இருவர் கையிலுமே மிகப்பெரிய டேப்லட்கள். நன்றாக கவனித்ததில் அவை ஆப்பிள் ஐபேட் என்று தெரிந்தது. அந்தப் பையன் பாட்டு கேட்டுக்கொண்டிருந்தான், அந்த சிறுமி ஏதோ படம் பார்த்துக்கொண்டிருந்தாள். அவர்களுடைய அப்பாவும் அம்மாவும் பேசிக்கொண்டிருந்தார்கள். பேஸ்புக் மாதிரியே ஏதோ tsu-ன்னு ஒண்ணு வந்திருக்காமே, அது பத்தி தெரியுமா உங்களுக்கு?

என் மனைவி என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள். என்ன? என்றேன். ஹோட்டலுக்கு வர்றதே ஜாலியா சிரிச்சுப் பேசிட்டுப் போறதுக்குத்தான். இங்க வந்துமா பேஸ்புக், மொபைல் கேம்ஸ். இவர்களைக் கடந்து செல்கையில் இல்லாத கோபம் இப்போது எனக்கு வந்தது. Nonsense Fellows – குடும்பம், நண்பர்கள் என்கிற உறவுகளை விட மேலானதா எலக்ட்ரானிக் உபகரணங்கள்? ஹோட்டலில் சாப்பிடுவது தான் எவ்வளவு அலாதியானது? சாப்பிடும்போது பழைய நினைவுகள் வரும், அவற்றை உடனிருப்பவர்களுடன் பகிர்ந்துகொண்டு சிரித்து, மகிழ்ந்து, அட அட. சில உணவுகளை குழந்தைகளுக்குக் கொடுப்பதற்கு முன் காரம் அதிகமாக இருக்குமோ என்று சுவைத்துப் பார்ப்பதும், இந்த ஹோட்டலில் குறிப்பிட்ட உணவு சுவையாக இருக்கும் என்றும் இன்றைய தினத்துக்கு இதுதான் ஸ்பெஷல் உணவு என்றும் நமக்கும் நம் உடன் வந்திருப்பவர்களுக்கும் பிடித்தமான உணவுகளை வரவழைத்து சாப்பிடுவதும் எவ்வளவு ஆனந்தம்.

என் கண்களில் கோபம் தெரிந்ததை என் மனைவி கவனித்திருந்தாள். விடுங்க விடுங்க இதெல்லாம் ஒண்ணும் பண்ண முடியாது. நம்ம ஜாலியா சாப்பிட்டுப் போலாம் என்றாள். இல்லை, இதுக்கு ஒரு முடிவு கட்டாம விடமாட்டேன் என்றேன். என்ன செய்யப்போறீங்க?

சட்டைப் பையிலிருந்த என் ஆண்டிராய்டு மொபைலை எடுத்தேன். இந்தப் பதிவை தட்டச்சு செய்யத் தொடங்கினேன்.