தமிழ் வலைப்பதிவர் குழுவின் சார்பாக கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னையில் நடைபெற்ற பதிவர் திருவிழா இந்த வருடம் மதுரையில் நடைபெறும் என்று தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்த சந்திப்பு குறித்து ஆலோசனை செய்வதற்காக மே மாதத்தில் மதுரையைச் சேர்ந்த பதிவர்களுக்கும் திண்டுக்கல் தனபாலன், உணவு உலகம் சங்கரலிங்கம், சிவகாசிக்காரன் ராம்குமார் ஆகியோருக்கும் மின்னஞ்சல் அனுப்பப்பட்டது. பின்னர் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் சீனா ஐயா, பிரகாஷ், ரமணி ஐயா மற்றும் திண்டுக்கல் தனபாலன் ஆகியோர் கண்டிப்பாக மதுரையில் நடத்திவிடலாம் என்று நம்பிக்கை கொண்டிருந்தனர்.





மண்டப ஏற்பாடு:

பின்னாட்களில் இது குறித்த பேச்சு வார்த்தை எதுவும் நடத்தப்படவில்லை. லண்டனிலிருந்து சீனா ஐயா பிரகாஷிடம் தேதி முடிவு செய்யச்சொல்லி மெயில் அனுப்பினார். அக்டோபர் மாத இறுதியில் தீபாவளிக்கு அடுத்த ஞாயிற்றுக்கிழமையில் சந்திப்பு நடத்தினால் பலரும் வரக்கூடும் என்பதால் இருபத்தாறாம் தேதி என முடிவு செய்யப்பட்டது. எனினும் மண்டபம் கிடைத்தபிறகே பதிவுலகில் அறிவிக்கமுடியும் வேண்டும் என்பதால் மதுரை சரவணனும் பிரகாஷும் தீவிரமாக மண்டபம் தேடி அலைந்தனர். ஆனால் வாடகை மிக அதிகமாக இருந்தது. அதனால் அடுத்த நாள் பிரகாஷ் இணையத்தில் தேடி பல மண்டபங்களில் விசாரித்தார். வாடகை, அரங்க வடிவமைப்பு, கேமரா, ஆடியோ போன்றவைக்கும் QUOTATION வாங்கி சீனா ஐயா மற்றும் திண்டுக்கல் தனபாலன் ஆகியோருக்கு மின்னஞ்சல் அனுப்பினார். பின்னர் அவற்றில் பதினைந்தாயிரம் ரூபாய்க்கு ஒரு மண்டபத்தை ஏற்பாடு செய்துவிடலாம் என்று முடிவும் செய்யப்பட்டது.

அடுத்த இரண்டு நாட்களிலேயே திண்டுக்கல் தனபாலன் அவருக்குத் தெரிந்த மண்டபம் ஒன்று குறைந்த வாடகைக்குக் கிடைக்கும் என்று கூறியிருந்தார். அடுத்த நாளில் எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் அவர்களுடைய மகள் திருமணத்துக்குச் சென்ற கோவை ஆவி மற்றும் பால கணேஷ் ஆகியோருடன் தனபாலன் மற்றும் பிரகாஷ் சென்று மண்டபத்தை நேரில் பார்வையிட்டு மிகவும் பிடித்துப்போக, அந்த மண்டபத்தையே முடிவு செய்து பதிவும் வெளியிடப்பட்டது.




வருகைப் பதிவேடு:

கடந்த வருடம் பதிவர்களின் வருகையைப் பதிவுசெய்ய குறிப்பிட்ட சில பதிவர்களுக்கு மின்னஞ்சல் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் இந்த வருடம் பிரகாஷின் தளத்திலேயே வருகை செய்யும் பதிவர்கள் தாங்களாகவே பூர்த்தி செய்யும் விதத்தில் படிவம் ஒன்று உருவாக்க வேண்டுமென்று பிரகாஷ் விரும்பினார். கற்போம் பிரபு கிருஷ்ணா வடிவமைத்திருந்த வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்பதற்கான படிவத்தில் சிற்சில மாற்றங்கள் செய்து வருகைப்பதிவு செய்வதற்காகன படிவமாகப் பயன்படுத்தப்பட்டது.  இனி வரும் பதிவர் சந்திப்புகளில் வருகைப்பதிவுக்கு இதே நடைமுறையைப் பின்பற்றினால் மிக எளிதாக இருக்கும் - காரணம், பதிவர்கள் தாங்களே தங்களது விவரங்களை உள்ளீடு செய்வதால் தவறு நிகழ வாய்ப்பில்லை.

டிசைன்கள்:

அழைப்பிதழும் அடையாள அட்டைக்கான டிசைனும் வீடு சுரேஷ் அவர்களால் வடிவமைக்கப்பட்டது. நிகழ்ச்சி நிரல் பாலகணேஷ் அவர்களால் வடிவமைக்கப்பட்டது. அரங்க வடிவமைப்பு Villgrow Eventz எனும் நிறுவனத்தால் செய்யப்பட்டது.



நன்கொடை வசூல்:

ஆலோசனைக் குழு கூட்டத்தில் கடந்த வருடங்களைப் போலவே பணம் வசூலிக்கலாம் என்று தீர்மானித்திருந்தாலும் சீனா ஐயாவின் மனைவி முதலில் பணம் வசூலிக்க வேண்டுமா என்று தயங்கினார். எல்லா செலவுகளையும் தாமே ஏற்றுக்கொள்ளலாம் என்று அவர் கூற, நடைமுறையில் இது சாத்தியம் இல்லை என்பதால் பணம் வசூலிப்பதாகத் தீர்மானிக்கப்பட்டது. இதற்காக புதிதாக ஒரு வங்கிக்கணக்கு ஒன்றைத் தொடங்கவேண்டும் என சீனா ஐயா வலியுறுத்த, சென்னையில் வசூலிக்கப்பட்டதை முன்னுதாரணம் காட்டி யாரேனும் ஒருவருடைய வங்கிக் கணக்கையே பயன்படுத்திக்கொள்ளலாம் என்று தீர்மானிக்கப்பட்டது. சீனா ஐயா மற்றும் திண்டுக்கல் தனபாலன் ஆகியோர் பிரகாஷின் வங்கிக்கணக்கையே பயன்படுத்தலாம் என்று பரிந்துரைத்ததால் பணம் அனுப்புவதற்கு பிரகாஷின் வங்கிக்கணக்கு எண் பதிவில் குறிப்பிடப்பட்டது.  வருகைப்பதிவேடு வேகமாக நிறைந்துகொண்டிருந்தாலும் பணம் விஷயத்தில் முதல் வாரத்தில் ஐயாயிரம் மட்டுமே வசூலானது. 

உணவு ஏற்பாடு:

பதிவர் சந்திப்பு நடைபெற்ற மண்டபத்துக்கு அடிக்கடி உணவு ஏற்பாடு செய்து வழங்கும் ஆட்களிடமே ஒப்படைக்கப்பட்டது. அசைவம் இல்லையென்றாலும் அருமையான சௌராஷ்டிர சாப்பாடு வழங்கினார்கள்.



நிகழ்ச்சித் தொகுப்பு:

மதுரைப் பதிவர்களில் சிறந்த பேச்சாளரான திரு.மகேந்திரன் பன்னீர்செல்வம் பதிவர் சந்திப்பின்போது மதுரை வரவிருந்ததால் அவரையே நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கச் செய்யலாம் என்று பிரகாஷ் விரும்பியதால் சீனா ஐயாவின் ஒப்புதலுடன் அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காலை முதல் மாலை வரை ஒருவரே முழு நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குதல் என்பது கடினம் என்பதால் பதிவர் திருமதி.தீபா நாகராணியையும் நிகழ்ச்சித் தொகுப்பில் இணையச் செய்தார். இவர்களுக்கு உதவியாக பதிவர் திரு."தமிழன்" கோவிந்தராஜ் உறுதுணையாக இருந்தார். நிகழ்ச்சி நிரல் முடிவு செய்தபின் இவர்கள் தங்களுக்குள் அலைபேசி மூலம் தொடர்புகொண்டு என்னென்ன விதங்களில் தொகுப்புரை வழங்கலாம் என்று ஆலோசித்துக்கொண்டனர். இந்த ஆலோசனையில் இவர்களுக்கு முழு சுதந்திரம் வழங்கினர் விழா குழுவினர். 

தொழில்நுட்பப் பதிவர்களுக்கான விருது:

அனைவரும் வலைப்பதிவர்களாக இருந்தாலும் வலைப்பதிவுகள் தொடங்குவது, திரட்டிகளில் இணைப்பது உள்ளிட்ட பல தொழில்நுட்ப விஷயங்களைத் தங்களது தளத்தில் பகிர்ந்தும் பதிவர்கள் பலருக்கு நேரடியாகவும் உதவி செய்துள்ள பதிவர்களுக்கு விருது கொடுப்பதற்காக பதிவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பிளாக்கர் நண்பன் அப்துல் பாசித், கற்போம் பிரபு கிருஷ்ணா, வந்தே மாதரம் சசிக்குமார், தமிழ்வாசி பிரகாஷ், திண்டுக்கல் தனபாலன், டி.என்.முரளிதரன் ஆகியோருக்கு விருது வழங்கும்படியான நிகழ்வு ஏற்பட்டது.   இவர்களில் தமிழ்வாசி பிரகாஷ் மற்றும் திண்டுக்கல் தனபாலன் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டு குழுவில் இருந்ததால் தங்களுக்குத் தாங்களே விருது கொடுத்துக்கொள்கிறோமோ என்கிற தயக்கம் இருந்தது. ஆலோசனைக்குழுவில் வேறு யாரும் ஆட்சேபம் தெரிவிக்காததாலும் அவர்களுடைய முழு ஒத்துழைப்பு இருந்ததாலும் தயக்கம் விட்டுச்சென்றது. அன்றைய தினம் பிரபு கிருஷ்ணாவால் அதிக நேரம் இருக்க முடியாது என்பதால் மதியத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருது வழங்கும் நிகழ்ச்சி காலைக்கு மாற்றப்பட்டது. அதற்கேற்றபடி நிகழ்ச்சி நிரல் மாற்றி அமைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் விருது வாங்கிய பதிவர்களின் பதிவுகளை வைத்து ஒரு Powerpoint  கோப்பு ஒன்றும் தயாரிக்கப்பட்டது.


சில துளிகள்:

தேதி, மண்டபம் உள்ளிட்ட பல விஷயங்கள் முடிவு செய்யப்பட்டும் பிரகாஷ், திண்டுக்கல் தனபாலன் தவிர்த்து மற்றவர்கள் பதிவர் சந்திப்பு குறித்து பதிவு எதுவும் எழுதாதது வருத்தமே. அதிலும் சென்னை பதிவர்களில் மிகச்சிலரே இதைப் பகிர்ந்திருந்தார்கள்.

தினந்தோறும் தனபாலன் மற்றும் பிரகாஷ் பதிவர் சந்திப்புக்கான ஏற்பாடுகள் குறித்து அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை அலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்கள்.


பதிவர் கோவிந்தராஜ் ஏற்பாட்டுக்குழுவில் கலந்துகொண்டதும் முழுக்க முழுக்க சந்திப்புக்கான வேளைகளில் தீவிரமாக இறங்கினார். தன்னுடைய வேலைகளுக்கு மத்தியில் பிரகாஷ்-உடன் இணைந்து பல இடங்களுக்கு அலைந்ததிலும் வேலை செய்ததிலும் இவருடைய பங்கு அளப்பரியது.

பிரகாஷைப் பொறுத்தவரையில் பகல் வேலை, இரவு வேலை என மாறி மாறி வந்ததால் பல நாட்களுக்கு தூக்கத்தைத் தொலைக்கவேண்டியிருந்தது. பதிவர் சந்திப்புக்கு முந்தைய இரண்டு நாட்களில் வெறும் மூன்று மணி நேரம் மட்டுமே தூங்கினார் என்பது கூடுதல் தகவல்.




ஜெயலலிதா திடீர் கைது செய்யப்பட்டதும் மழையும் பதிவர் சந்திப்புக்கான ஏற்பாடுகளை கவனிப்பதில் பெரும் முட்டுக்கட்டையாக இருந்தது.

ஒவ்வொரு வேலைக்கும் - ஒரு முறை கொடுப்பதற்கும் - ஒரு முறை வாங்குவதற்கும் - சமயங்களில் திருத்தங்கள் செய்வதற்கும் - இரண்டு மூன்று நாட்கள் அலைய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

பதிவர்களுக்கான விருதுகள் மற்றும் நினைவுப் பரிசுகளுக்கான டிசைன் தயாரிப்பதற்கு  மட்டும் ஒரு நாள் தேவைப்பட்டது. மேலும் பதிவர்களின் படங்களை வெட்டி ஒட்டி இணைப்பதற்கு மேலும் ஒரு நாள் தேவைப்பட்டது. இதை செய்து கொடுத்த இடத்தில் பிரகாஷ் மற்றும் கோவிந்தராஜ் ஆகியோர் நாள் முழுவதும் அமர்ந்து மேற்பார்வையிட்டனர்.

காலண்டர் மற்றும் சிறப்புப் பரிசுகள் ஒரு நல்ல ஸ்பான்சரைக் கொண்டு கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்ததால் ஸ்பான்சர் பிடிப்பதற்கு வெகுவாக அலையவேண்டியிருந்தது. மேலும் சில பரிசுப்பொருட்கள் வழங்கலாம் என்று தீர்மானித்திருந்தாலும் ஸ்பான்சர் கிடைக்காததால் கைவிட வேண்டியதாயிற்று.



ஆடியோ வீடியோ, நேரடி ஒளிபரப்பு போன்றவை Villgrow Eventz நிறுவனத்தின் தலைவர் திரு.சுப்பு ரமணி மற்றும் அவரது குழுவினருக்கு ஒப்படைக்கப்பட்டது.

பணம் பற்றாக்குறை வந்தால் அது முழுவதும் தானே ஏற்றுக்கொள்வதாக சீன ஐயா தெரிவித்தார். இது பணம் பற்றிய கவலை ஏதுமின்றி ஏற்பாடுகளில் ஈடுபட குழுவினருக்கு உற்சாகமாக இருந்தது.

வெளியூர் பதிவர்கள் தங்குவதற்காக ஸ்ரீ ராஜேஸ்வரி லாட்ஜில் அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. முந்தைய நாளே அறைக்கு வந்திருந்த நண்பர்களை கவனிக்க முடியவில்லை என ஏற்பாட்டுக் குழுவில் இருந்த நண்பர்கள் தெரிவித்தனர்.

நிகழ்ச்சி நடைபெற்ற அன்று வந்திருந்தவர்களிடம் அதிகம் பேசவோ புகைப்படம் எடுத்துக்கொள்ளவோ முடியவில்லை என்று தமிழ்வாசி பிரகாஷ் மற்றும் திண்டுக்கல் தனபாலன் வருத்தம் தெரிவித்தனர்.

நிகழ்ச்சிக்கு பல புதிய பதிவர்கள் வந்திருந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாகவும் அதே நேரத்தில் வருவதாக உறுதியளித்திருந்த பல பிரபல பதிவர்கள் வரவில்லை என்பது வருத்தமாகவும் இருந்ததாக விழாக்குழுவினர் தெரிவித்தனர்.

மொத்தத்தில் மதுரை பதிவர் திருவிழாவை வெற்றிகரமாக நடத்தி முடித்ததில் விழாக்குழுவினர் வெற்றியடைந்தனர் என்பதே உண்மை.