படிப்பினை
Friday, November 07, 2014
Posted by கார்த்திக் சரவணன்
அவர் பெயர் பாஸ்கரன். போன வாரம் வரை எதிர் வீட்டுக்காரர். ஐம்பது லட்சத்துக்கு வீட்டை விற்றுவிட்டார். வங்கிக்கடனை அடைக்க முடியவில்லை. வீட்டை விற்று வந்த பணத்தில் வங்கியின் நிலுவைத்தொகை முழுவதும் வட்டியுடன் கட்டிவிட்டார். இப்போது மடிப்பாக்கத்தில் பதினைந்தாயிரம் ரூபாய் வாடகைக்கு வேறு வீடு பார்த்து சென்றுவிட்டார்.
கடனை அடைக்க முடியாததன் காரணம் என்ன? அவர் சொந்தமாக ஒரு டிராவல்ஸ் நிறுவனம் வைத்து நடத்திக்கொண்டிருக்கிறார். வெளியூர் வெளிநாடுகளுக்கான விமான டிக்கட் முன்பதிவு செய்துகொடுப்பது தான் வேலை. அரசாங்கத்தின் பல பெரிய அதிகாரிகள் அவரிடம் வாடிக்கையாளராக இருந்தனர். நல்ல வருமான வந்துகொண்டிருந்தது. கடந்த காங்கிரஸ் அரசின் இறுதியில் ஏதோ அரசாணை பிறப்பித்துவிட்டார்களாம். அரசு அதிகாரிகள் குறிப்பிட்ட நிறுவனத்தின் மூலம் தான் டிக்கட்கள் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும் என்று. என்னிடம் இதை அவர் சொல்லும்போது அவர் இருந்த மனநிலையில் எப்படி என்னவென்று அவரிடம் விளக்கம் கேட்க முடியவில்லை. தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் சொல்லவும்.
இதனால் பெருமளவு வாடிக்கையாளர்கள் அவரிடமிருந்து விலக, திடீரென்று வருமானம் சுத்தமாக நின்றுவிட்டது. மாதம் ஒன்று முதல் ஒன்றரை லட்சம் வரை வந்துகொண்டிருந்தது இப்போது வெறும் ஐயாயிரம் பத்தாயிரம் என்று குறைந்துவிட்டது. டிராவல்ஸ் நிறுவனத்தை மூடிவிட்டு பதினைந்தாயிரம் ரூபாய் சம்பளத்துக்கு வேலைக்குச் செல்ல ஆரம்பித்துவிட்டார். அவருக்கு மனைவி ஒரு மகன் மட்டுமே.
அவர் ஊதாரித்தனமாக செலவு செய்யக்கூடியவர். வீடு முழுவதும் ஏ.சி., நாற்பது அங்குல டிவி, தினமும் ஹோட்டல் சாப்பாடு, குடும்பத்துடன் வெளிநாடு பயணம் என செலவு செய்பவர். தன் மகன் பெரிய கார் வேண்டும் என்று கேட்டதற்காக பழைய சிறிய காரை சொற்ப விலைக்கு விற்றுவிட்டு நல்ல விலைக்கு பெரிய கார் ஒன்றை வாங்கினார். பெட்ரோலுக்கும் மின்சாரத்துக்கும் மட்டும் அவர் மாதம் பத்தாயிரம் ரூபாய் செலவு செய்வார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.
யார் எப்படி செலவு செய்தால் உனக்கென்ன? அடுத்த வீட்டுக் கதை உனக்கெதற்கு என்கிறீர்களா? இந்த நிலையில் தான் நானும் இருந்தேன். வீட்டைக் காலி செய்து சென்றபின் விட்டுப்போன பொருட்களை எடுத்துச் செல்வதற்காக ஒரு நாள் அவர் வந்திருந்தார். வெளியே இருக்கும் பெயர்ப்பலகையை ஸ்க்ரூடிரைவாரால் அகற்றும்போது அவரையும் அறியாமல் கண்ணீர்த்துளிகள் சிந்திவிட்டன. இதை நான் கவனித்துவிட்டேன். நான் கவனித்ததை கவனித்த அவர், "நாலு வருஷமா இருந்த வீட்டைவிட்டுப் போறதுக்கு மனசு கஷ்டமா இருக்கு" என்றார். அடிக்கடி வீட்டுக்கு வாங்க என்று சொல்லி அனுப்பிவைத்தேன்.
அவர் செய்த பெரிய தவறு - வருமானம் நல்லபடியாக வரும்போதே வங்கிக்கடனை அடைத்திருக்க வேண்டும். முழுவதுமாக இல்லாவிட்டாலும் தன்னால் முடிந்த அளவு பணத்தைக் கட்டியிருக்கலாம். இதனால் பின்னாளில் கட்ட வேண்டிய அசலும் வட்டியும் குறைந்திருக்கும்.
நல்ல விதத்தில் முதலீடுகள் ஏதாவது செய்திருக்க வேண்டும். தங்கம், வேறு ஏதாவது அசையா சொத்துக்கள், பத்திரங்கள், வைப்பு நிதி என எதிலாவது முதலீடு செய்திருந்தால் சொத்து மதிப்பும் கூடும், வீடு விற்கவேண்டிய சூழ்நிலை வரும்போது எதையாவது உடைத்து மீட்டிருக்கலாம்.
உங்களது முதல் செலவு சேமிப்பாக இருக்கட்டும் என்று சொல்வார்கள். வரும் வருமானத்தில் குறிப்பிட்ட அளவு செமிப்புக்கேன்று ஒதுக்க வேண்டும். நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு வருங்கால வைப்பு நிதியாக சம்பளத்தில் பன்னிரண்டு சதவீதத்தை வருங்கால வைப்பு நிதிக்காக பிடித்தம் செய்துகொள்வார்கள். உதாரணமாக ஒருவருக்கு சம்பளம் பத்தாயிரம் ரூபாய் என்றால் அதில் பன்னிரண்டு சதவீதம் - ஆயிரத்து இருநூறு ரூபாயை - மாதா மாதம் சம்பளத்திலிருந்து பிடித்துக்கொள்வார்கள். காலாண்டுக்கு ஒரு முறை அதற்கு வட்டியும் கணக்கிட்டு அதையும் நிதியிலேயே சேர்த்துக்கொள்வார்கள். இதே பன்னிரண்டு சதவீதத்தை நாம் பணிபுரியும் நிறுவனமும் நம் கணக்கில் வரவு வைக்கும். வட்டிக்கு வட்டி, நாம் சேமிக்கும் அசலுக்கும் வட்டி, நிறுவனம் தரும் தொகைக்கும் வட்டி என அது ஒரு பக்கம் வளர்ந்துகொண்டே செல்லும். பணி ஒய்வு பெறும்பொது மொத்தமாக ஒரு தொகை வந்து சேரும். இது நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு. சொந்தமாக தொழில் செய்பவர்களுக்கு என அரசு பி.பி.எப். எனப்படும் இதேபோன்ற ஒரு திட்டத்தை செயல்படுத்திவருகிறது என்பது நிறைய பேருக்குத் தெரிவதில்லை. முன்பெல்லாம் தபால் அலுவலகத்தில் இதற்கென ஒரு கணக்கு துவங்கவேண்டும். இப்போது சில வங்கிகளிலும் வந்துவிட்டது. வருடத்துக்கு ஒரு முறையாவது பணம் செலுத்தவேண்டும். அதிகபட்சமாக எவ்வளவு வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளலாம். வருங்கால வைப்பு நிதிக்கான வட்டியே இதற்கும். ஒரே பிரச்சனை - பதினைந்து வருடங்களுக்கு இதில் சேமிக்கும் பணத்தை எடுக்கமுடியாது. ஆனால் கடன் பெறலாம். இதிலாவது அவர் முதலீடு செய்திருக்கலாம்.
வருங்கால வைப்பு நிதி என்றதும் ஒன்று ஞாபகத்துக்கு வருகிறது. நிறுவனங்களில் பணி புரிபவர்கள் குறைந்த பட்சம் பன்னிரண்டு சதவீதம் இதில் கட்டாயம் முதலீடு செய்தாக வேண்டும். அதிகபட்சம் முப்பத்தாறு சதவீதம் வரை முதலீடு செய்யலாம். அதாவது கூடுதலாக இருபத்து நான்கு சதவீதம் வரை எவ்வளவு வேண்டுமானாலும் நம் விருப்பப்படி முதலீடு செய்துகொள்ளலாம். சமீபத்தில்தான் நான் இதைத் தெரிந்துகொண்டு கூடுதலாக இருபத்து நான்கு சதவீதம் பிடித்தம் செய்யும்படி மாற்றிக்கொண்டேன். இப்போது வருமானத்தில் குறைந்தாலும் பிற்காலத்தில் உதவும் தானே. அதேபோல் எல்.ஐ.சி.க்கு தனியாகத்தான் பணம் கட்டிக்கொண்டிருந்தேன். அதையும் சம்பளத்தில் பிடித்தம் செய்துகொள்ளும்படி செய்துவிட்டேன். வருமானம் இன்னும் குறையும். போகட்டும். மூன்று மாதம் ஆறு மாதத்துக்கு பெரிய தொகையாகக் கட்டுவதை விட மாதாமாதம் சிறு சிறு தொகையாகக் கட்டுவது எவ்வளவோ மேல். மேலும் இவ்வளவு தான் வருமானம் என்று நாமும் அதற்கேற்றவாறு வளைந்து செல்வோம்.
நல்லவேளையாக அவருக்கு பெரிய அளவில் மருத்துவ செலவு எதுவும் வரவில்லை. வந்திருந்தால் இன்னும் முன்னரே இந்த நிலைமை வந்திருக்கும். அவர் மெடிகிளைம் போன்றவற்றை அறிந்தவர் போலத் தெரியவில்லை.
நாம் சம்பாதிக்கும் ஒவ்வொரு ரூபாயும் முக்கியமானது தான். பார்த்து பார்த்து செலவு செய்யவேண்டும். அவரைப் பொறுத்தவரை செலவு செய்து பெற்றுக்கொண்ட படிப்பினை, எனக்கோ இது ஒரு இலவசப் பாடம். பெயர்ப் பலகையை அகற்றும்போது அனிச்சையாக அவர் சிந்திய கண்ணீர்த்துளிகள் என்னை இன்னும் சூதானமா இருந்துக்கோ சரவணா என்று சொல்கிறது.
This entry was posted by school paiyan, and is filed under
அனுபவம்
.You can leave a response, or trackback from your own site.
Subscribe to:
Post Comments (Atom)
நாம் சம்பாதிக்கும் ஒவ்வொரு ரூபாயும் முக்கியமானது தான். பார்த்து பார்த்து செலவு செய்யவேண்டும். அவரைப் பொறுத்தவரை செலவு செய்து பெற்றுக்கொண்ட படிப்பினை, எனக்கோ
ReplyDeleteஇது ஒரு இலவசப் பாடம்.////
nallaa pathivu sir.
echarikkaiya irukka sollum paadam.
முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மகேஷ்....
Deleteபடிப்பினையை கற்றுத்தரும் மிக சிறந்த பகிர்வு..பாராட்டுக்கள்
ReplyDeleteநன்றி மதுரைத்தமிழன்.....
Deleteநானும் இதுவரைக்கும் சேமிப்பு குறித்தெல்லாம் எதுவும் யோசித்ததில்லை, இப்பவே யோசிக்க வேண்டுமா என்ற ஒரு எண்ணம் தான்... ஆனால் அந்த நபருடைய வயதில் அவர் யோசிக்காமல் இருந்தது, ஆடம்பரத்திற்காக வாழ்ந்தது எல்லாம் கொஞ்சம் ஓவர் தான்...
ReplyDeleteஇதே போல் தொடர்ந்து எழுதுங்கள்
ஆடம்பரம் தான் அழிவுக்குக் கொண்டுசென்றிருக்கிறது..... குறைந்த பட்சம் இருபது சதவீதமாவது சேமிக்க வேண்டும்.... மிக்க நன்றி சீனு...
Deleteசம்பாரிப்பவன் எல்லோருமே பணக்காரன் ஆகமுடியாது
ReplyDeleteசேமிப்பவனே பணக்காரன் ஆகமுடியும்
நல்ல பதிவு நண்பரே,,,
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி....
Deleteநான் கடைப்பிடிக்கும் பொருளாதாரக் கொள்கை என்னவென்றால் வருமானத்தில் பாதியில்தான் உங்கள் குடும்ப செலவுகளைச் செய்யவேண்டும். மீதி பாதியை சேமிப்பாக வைக்கவேண்டும். இப்படி சேமித்ததில் பாதி எதிர்பாராத செலவுகளுக்குப் போய்விடும். மீதி பாதிதான், அதாவது உங்கள் வருமானத்தில் கால் பங்குதான் நிகர சேமிப்பாக நிற்கும்.
ReplyDeleteஇந்த கொள்கையை பலர் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அவர்கள் நீங்கள் குறிப்பிட்ட வீட்டுக்காரர் நிலைமையைத்தான் அடைவார்கள்.
நீங்கள் சொல்வதும் சரிதான் ஐயா... சரியான முதலீட்டை தேர்வு செய்தால் ஏதேனும் கொஞ்சமாவது மிஞ்சும்....
Deleteசின்ன விசயம்தான் ஆனால் நிறைய யோசிக்க வைக்கிறது.//வருமானம் நல்லபடியாக வரும்போதே வங்கிக்கடனை அடைத்திருக்க வேண்டும்.// இதுதான் பாடம். அருமையான விஷயம் தம்பி..
ReplyDeleteமிக்க நன்றி மணி அண்ணே...
Deleteஅனைவருமே யோசித்து நடக்க வழிநடத்தும் பதிவு
ReplyDeleteநன்றி நண்பரே
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்....
Deleteநல்லதொரு படிப்பினை தரும் பதிவு! சேமிக்கும் பழக்கம் அனைவருக்கும் வேண்டும். வருமானம் இருக்கிறதே என்று ஆடம்பரமாக செலவு செய்யக் கூடாது என்ற கருத்தை சிறப்பாக சொன்னது பாஸ்கரன் அவர்களின் கதை! நன்றி!
ReplyDeleteஉண்மை தான் அண்ணா... தங்களது வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி....
Deleteநன்றி சார்...
ReplyDeleteசேமிப்பின் அவசியத்தை அழகாகச் சொல்லி விட்டீர்கள்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி பித்தன் ஐயா...
Deleteசேமிப்பு முக்கியம் என்பதை உதாரணத்துடன் விளக்கினீர்கள்!
ReplyDeleteமிக்க நன்றி நிஜாமுதீன்...
Deleteமதுரைப் பதிவு காண்க...
ReplyDeleteபுரியலையே கில்லர்ஜி...
Deleteகட்டுப்பாடு இல்லையெனில் விட்டுப்போகும் சௌந்தர்யம்
ReplyDeleteஎன்பதை உணர்த்தும் அருமையான ஆக்கப்பூர்வமான படைப்பு
சகோதரரே...
மிக்க நன்றி மகேந்திரன் அண்ணே....
Deleteசேமிப்பு இல்லையெனில் ஆப்பு தான்...!
ReplyDeleteஹா ஹா... ஆமா டிடி....
Deleteஎமது மதுரைப்பதிவைக் காணச்சொன்னேன் நண்பா,,,
ReplyDeletehttp://killergee.blogspot.ae/2014/11/blog-post.html?showComment=1415420880776#c4879358193824623794
ஹா ஹா.. பார்த்தேன், கருத்தைப் பதிந்தேன்... நன்றி நண்பா...
Deleteஹாய் ஸ்பை
ReplyDeleteநல்ல பதிவு
அடுத்தவர்களின் வேதனை உங்களின் இதயத்தை அசைத்தால் வந்த பதிவு ...
எல்லோருமே மைண்ட்ல வைக்க வேண்டிய விசயம்
அப்புறம்
ஒட்டு போட்டுட்டேன்
ஏழு ஒருவாரத்திற்கு உங்க காட்டுல மழைதான்
ஹா ஹா... வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் தமிழ்மண வாக்குக்கும் மிக்க நன்றி கஸ்தூரிரங்கன் அண்ணா...
Deleteதனியார் நிறுவனங்களில் பணி புரிபவர்கள், சுய தொழில் செய்து லட்சக் கணக்கில் சம்பாதிப்பவர்களாக இருந்தாலும் இந்தப் படிப்பினையை மனதில் கொள்ள வேண்டும். அரசு பணியில் உள்ளோர் இது போல் ஆடம்பர வாழ்க்கை வாழ முடியாது என்றாலும் பாதுகாப்பாக வாழ முடியும் என்பதால்தான் நிறையப் பேர் அரசு பணியை விரும்புகின்றனர் யாராக இருந்தாலும் சேமிப்பை அலட்சியப் படுத்துவோர் அவதிப்படுவர் என்பதில் ஐயமில்லை
ReplyDeleteஅரசுப்பணி நிரந்தரம் என்பதால் இருக்கலாம்... நீங்கள் சொல்வது சரிதான் முரளி சார். யாராக இருந்தாலும் சேமிப்பை அலட்சியப்படுத்தினால் அவதி தான்... வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்...
Deleteபடிப்பினையை கற்றுக்கொடுத்த ஒரு பகிர்வு. வாழ்த்துக்கள்.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சம்பந்தம் சார்...
Deleteபடிப்பினை தரும் பதிவு. பலர் சேமிப்பின் முக்கியத்துவம் அறிவதில்லை. இருக்கும் போதே அனைத்தும் அனுபவிக்க வேண்டும் என நினைக்கிறார்கள். சேமிப்பும் அவசியம்.
ReplyDeleteஅரசுப் பணியாளர்கள் - அலுவலக விஷயமாக பயணம் செய்யும்போதும், LTC-ல் பயணிக்கும்போதும் அரசு நிறுவனங்களான Balmer Lawrie Travel [இந்தியாவில் பெட்ரோலிய அமைச்சகத்தின் கீழே இயங்குகிறது] அல்லது Ashoka Travels [Ashoka Hotels] மூலம் மட்டுமே விமானச் சீட்டுகள் வாங்க வேண்டும் என்று ஒரு ஆணை இருக்கிறது.
நல்ல பாடம் கற்றுத் தரும் பதிவு! வரும் முன் காப்போம் என்பது போல் சேமிப்பு என்பது மிகவும் அவசியம்! அதுவும் இந்தக் கால கட்டத்திற்கு, உதவ மாமனா, மச்சானா வந்து கை கொடுக்க?!!
ReplyDeleteஅண்ணே ! உங்களுக்கு மட்டுமில்ல . எனக்கும் இது இலவசப்பாடம் தான் . படிக்கும்போது அந்தமனிதருடையநிலைதான் என் மனதில் ஓடியது. சூதானமா இருந்துக்கோ மெக்னேஷ் என்ற நிலைக்குள் நான் வந்துவிட்டேன் . நன்றி அண்ணா !!!
ReplyDelete