இந்தக்கதையை நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் நேரம் நான் இறந்துபோயிருப்பேன். காரணம் - விரக்தி. தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு என்ன விரக்தி என்று கேட்கிறீர்களா? மேற்கொண்டு படியுங்கள்.

எனக்கு உடலில் சிறு பிரச்சனை. சிறு பிரச்சனை தான். ஆனாலும் பலரும் அதைப் பெரிய விஷயமாக பூதாகரமாக்கி இது பெரும் பிரச்சனைதானோ என்று என்னை என்னிடமே கேள்வி கேட்கவைத்துவிடுகிறார்கள்.  எனக்கு வலது காலை விட இடது கால் உயரத்திலும் பருமனிலும் கொஞ்சம் சிறியது. ஆம், போலியோ பாதித்திருக்கிறது. சில காலங்களுக்கு முன் ஊனமுற்றவன் என்றும் சம காலத்தில் மாற்றுத்தினாளி என்றும் அழைக்கப்பட்ட ஏராளமானோரில் நானும் ஒருவன்.





மற்றவர்கள் அனைவரும் சாதாரணமாக நடக்க, நான் மட்டும் இடது கையால் இடது காலைப் பிடித்துக்கொண்டு நடப்பேன். இதுபற்றி என் அம்மாவிடம் கேட்டபோது, "அதுவா, நீ சின்னப்புள்ளையா இருக்கும்போது இருளடிச்சிருச்சுடா" என்பாள். அது ஏதோ நான் தவறு செய்ததாகவும் கடவும் அதற்கான தண்டனை கொடுத்ததாகவும் நினைத்திருந்தேன்.நாட்கள் செல்லச்செல்ல இதற்கான காரணம் என்னவென்றும் தீர்வு என்னவென்றும் புத்தகங்கள் மூலமாகவும் ஆசிரியர்கள் மூலமாகவும் அறிந்துகொண்டேன். என் பெற்றோரின் அறியாமையை அறிந்து வருந்தினேன், அறியாமையும் ஒரு விதத்தில் அறியாமை தானே என்று என்னை நானே சமாதானப்படுத்திக்கொண்டேன்.

பள்ளியில் அவ்வப்போது சண்டை வருவதுண்டு. என்னுடன் சண்டையிடுபவர் என்னைக் கெட்ட வார்த்தைகளால் அர்ச்சித்தால் கூட நான் சகித்துக்கொள்வேன். ஆனால் அந்த ஒரு வார்த்தையைப் பயன்படுத்திவிட்டால் அவ்வளவுதான். எங்கெங்கிருந்தோ திரண்டுவரும் கண்ணீர் பொலபொலவெனக் கொட்டத் தொடங்கிவிடும். அந்த ஒரு வார்த்தை, "நொண்டி". என் இதயத்தை சிறு குண்டூசியால் சுருக்கென்று குத்தி எடுத்தது போன்ற ஒரு வலி ஏற்படுத்தும் வல்லமை கொண்டது அவ்வார்த்தை. என் மாமா எனக்கு சப்பாணி என்று பட்டப்பெயர் வைத்திருக்கிறார். என்னை எப்போதுமே அப்படித்தான் அழைப்பார். சப்பாணி என்பது என் சொந்தப்பெயர் என்பது போலவே நான் அவருக்கு பதிலளிப்பேன்.

எனக்கு மிகவும் பிடித்த இருசக்கர வாகனம் ஸ்கூட்டி. பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும்போதே மாமாவின் ஸ்கூட்டியை ஓட்டக் கற்றுக்கொண்டேன் - ஏகலைவனாக. மாமா எனக்கு ஓட்டக் கற்றுக்கொடுக்கவில்லையே தவிர எல்லா உதவிகளும் செய்தார். பெட்ரோல் நிரப்பித்தருவார், வண்டி ஓட்டி விழுந்து வாரிக்கொள்ளும்போது என்னுடைய மருத்துவ செலவையும் வண்டிக்கான ரிப்பேர் செலவையும் கவனித்துக்கொள்வார். இதுவரை உனக்கு வண்டி தரமாட்டேன் என்று ஒருநாளும் சொன்னதில்லை.  பதினெட்டு வயது பூர்த்தியானதும் ஓட்டுனர் உரிமம் வாங்க ஆசைப்பட்டு ஒரு பயிற்சிப் பள்ளியை நாடினேன். என்னை ஏற இறங்கப் பார்த்த அதன் உரிமையாளர், "எக்ஸ்ட்ரா ரெண்டு வீல் இருக்கிற வண்டிதான் ஓட்ட முடியும்" என்றார். எனக்கு வண்டி ஓட்டத் தெரியும், நான் என்னுடைய மாவின் ஸ்கூட்டியை ஒரு வருடமாக ஒட்டி வருகிறேன் என்று எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவர் "ரூல்ஸ்ல இடமில்லை தம்பி" என்று மறுத்துவிட்டார்.

நான் தன்னம்பிக்கை அதிகம் கொண்டவன். கொஞ்சம் தலைக்கனமும். ரயிலிலோ, பேருந்திலோ நின்றுகொண்டு வரும்போது யாரேனும் உட்கார்வதற்கு இடம் கொடுத்தால் கோபம் வரும். பரவாயில்லை என்று மறுத்துவிடுவேன். சில நேரங்களில் "நான் உன்கிட்ட கேட்டேனா" என்று எரிந்து விழுவேன். இவ்வளவு ஏன், நடிகர் விவேக் ஒரு படத்தில் காக்கா பிரியாணி சாப்பிடுவதாக ஒரு காட்சி வரும். "கால் இவ்வளவு சூம்பிப் போயிருக்கே, போலியோ அட்டாக் ஆன கோழியா?" என்று அவர் பேசும் வசனம் என் போன்றோர் மனதை எந்த அளவுக்கு பாதித்திருக்கும் என்று நான் அறிவேன். திமிரா, தலைக்கனமா, இயலாமையா, சுயபச்சாதாபமா, இன்னதென்று இனப்படுத்த முடியாத ஓர் உணர்வு வரும். என் ஊனத்தால் நான் மகிழ்ச்சியடைந்த ஒரே விஷயம் - பள்ளி கல்லூரியில் மதிப்பெண்களுக்கான சலுகையும் நான் இப்போது பார்த்துவரும் அரசு வேலையும்.

போன வாரம் தான் அம்மா எனக்குப் பெண் பார்த்திருப்பதாகச் சொன்னாள். "ஏம்மா, நீ மட்டும் பாத்தா போதுமா? நான் பாக்க வேண்டாம்? என்று கடிந்துகொண்டேன். பதிலுக்கு அவள் "நீ அவளைப் பாக்கிறது இருக்கட்டும், அவ உன்னைப் பாக்கணுமாம், நான் உன்னைப் பத்தி அவகிட்ட சொல்லி வச்சிருக்கேன்" என்றாள்.  "அவ உன்னைப் பாக்கணுமாம்" இந்த வார்த்தை என் காதுக்குள் மீண்டும் மீண்டும் ஒலித்துக்கொண்டிருந்தது. காதலா? என்னை எந்த அளவுக்கு நேசிக்கிறாள்? இரண்டு நாட்களாகத் தூங்கவில்லை. அவளை நேரில் காணப்போகும் நாளுக்காக ஏங்கிக்கொண்டிருந்தேன். அந்த நாளும் வந்தது.

மாமாவின் ஸ்கூட்டியில் அம்மாவைப் பின்னால் அமரவைத்து என் என் மனைவியாகப் போகும் அவளது வீட்டுக்குச் சென்றேன். அங்கே பத்துப் பதினைந்து பேர் குழுமியிருக்க நான் அவருவதையே அனைவரும் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அதிலும் நிறைய பெண்கள். யார் என்னவள் என்று அடையாளம் தெரியாமல் திகைத்துப் போயிருந்தேன். நீலநிறப் பட்டுப்புடவையில் வந்து தேநீர் தந்தபோது தான் அவளை நான் நன்றாகப் பார்த்தேன். மாநிறம் தான், களையாக இருந்தாள். புன்முறுவல் பூத்தேன், கற்பனையில் மிதந்துபோனேன்.

"கிளம்பலாமாடா?" என்று அம்மா அழைத்தபோது தான் சுய நினைவுக்கு வந்தேன். கற்பனையில் குடும்பம் நடத்தி குழந்தை பெற்றிருந்தேன். குடித்தது காபியா டீயா என்பது கூட மறந்து போயிருந்தது. அனைவரிடமும் விடைபெற்றுவிட்டு வெளியேறினோம். அம்மா எதுவும் பேசவில்லை. ஸ்கூட்டியின் அருகே சென்றபோதுதான் அதன் சாவியை மறந்துவிட்டது தெரிந்தது. "இருமா, சாவியை வாங்கிட்டு வரேன்" என்று சொல்லிவிட்டு வீட்டின் முகப்பு நோக்கிச் சென்றேன். அழைப்பு மணியை அழுத்தலாமா என்று யோசித்தபோது தான் உள்ளே பேச்சு சத்தம் கேட்டது, "போமா, என்னால முடியாது, அவன் ஏதோ கொஞ்சம் சாய்ச்சு சாய்ச்சு நடப்பான்னு நினைச்சிருந்தேன், இப்படி முக்கா நொண்டியா இருக்கான், நான் மாட்டேன்", "இல்ல கண்ணு, அவரு கவர்மென்ட் உத்தியோகம்", "கவர்மென்ட் உத்தியோகம்னா, நான் என்ன பண்றது? நொண்டிப் பயலுக்கு ஏத்த நொண்டிப் பொண்ணாப் பாத்து நீங்களே கட்டி வச்சிருங்க"

திடீரென்று கதவு திறக்கப்பட, வெளியே நின்றிருந்த என்னை அவள் பார்த்துவிட்டாள். உள்ளே நடந்த உரையாடல்களை நான் கேட்டிருப்பேனோ என்ற சந்தேகம் அவள் கண்ணில் தெரிந்தது, பின் உறுதியானது. "வண்டிச் சாவி" என்று இழுத்தேன். சோபாவிலிருந்த சாவியை எடுத்துக் கொடுத்து என் முகத்தைப் பார்க்கும் துணிவின்றி ஓடிவிட்டாள்.


அம்மாவிடம் வந்தேன், "என்னை அவங்களுக்குப் பிடிச்சிருக்குமா?" என்றேன். "தெரியலடா, ரெண்டு நாள் கழிச்சு சொல்றதா சொன்னாங்க, ம்ம்ம், எனக்கென்னவோ அவங்களுக்குப் பிடிக்கலன்னுதான் தோணுது, பொம்பளைப் பிள்ளையைக் கூட கரையேத்திரலாம், உன்னை மாதிரி நொண்டிப் பையனைக் கரை சேக்கறதுதான் கஷ்டம், இன்னும் எத்தனை பொண்ணு பாக்கப்போறோம்னு தெரியலையே" என்றாள்.

"நீ ஒரு ஆட்டோ புடிச்சு வீட்டுக்குப் போ, நாம் வந்துடறேன்" என்று சொல்லிவிட்டு வண்டியைக் கிளப்பினேன். எனக்குத் தனிமை வேண்டும், எங்காவது உட்கார்ந்து அழவேண்டும் போலிருந்தது. "அவளுக்கு உன்னைப் பாக்கணுமாம்" என்று அம்மா அன்று சொன்னதன் குறியீடு இப்போது புரிந்தது. வண்டியை வேகமாகச் செலுத்தினேன். சப்பாணி என்று மாமா அழைத்ததும் பள்ளி நண்பர்கள் நொண்டிப்பயலே என்று கிண்டல் செய்ததும் ஞாபகத்துக்கு வந்தது. எனக்காகப் பரிதாபப்பட்டு வேலை தந்த அரசாங்காம் மீது கோபம் வந்தது. இன்றைக்குத்தான் நேரின் சந்தித்திருந்தோம், அவள் கூட என்னை நிராகரித்துவிட்டாள். என்னைப் பெற்று இத்தனை வருடங்களாக வளர்த்த என் அம்மா கூட என்னைக் கரைசேர்ப்பது கடினம் என்று கூறிவிட்டாள்.

எனக்கே என்மீது கோபம் வந்தது. வண்டியை இன்னும் வேகமாகச் செலுத்தினேன். இப்போதே சாகவேண்டும் போலிருந்தது. இதோ,எதிரே ஒரு லாரி. அசுர வேகத்தில் வந்துகொண்டிருந்தது. நானும். என்னைக் கிண்டல் செய்த அனைவரும் ஒரு வினாடி என் கண்முன் வந்து போனார்கள். கண்களை மூடிக்கொண்டு லாரியின் முன்னால் ஸ்கூட்டியை விட்டேன். லாரியின் பின்சக்கரம் என் தலையில் ஏறிஇறங்க, என் மூளை தெறித்து விழுந்தது.