ஹரிதாஸ் -‍ சினிமா விமர்சனம்





இந்தியாவில் எண்பத்தெட்டுக்கு ஒன்று என்ற விகிதத்தில் ஆட்டிசம் என்ற குறைபாட்டுடன் குழந்தை பிறக்கிறதென்று ஒரு மனதை உறைய வைக்கும் புள்ளிவிபரத்தை படத்தின் இறுதியில் சொல்கிறார்கள்.  இந்தக் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு தாம் என்ன செய்கிறோம் என்று அவர்களுக்கே தெரியாது, ஒருவர் கொடுக்கும் கட்டளைகளை அவர்களது மூளை ஏற்றுக்கொள்வதில்லை, அப்படியே ஏற்றுக்கொண்டாலும் மூளை பதில் கட்டளை கொடுப்பதில்லை என்பதையும் காட்சிகளின் மூலம் நமக்கு விளங்க வைக்கிறார்கள்.  நம்ம ஸ்கூல் பையன் படிக்கும் பள்ளியிலும் நானும் நிறைய குழந்தைகளைப் பார்த்திருக்கிறேன்.  நான் அவர்களைப் பார்க்கும்போது அப்போதைக்கு ஒரு உச் மட்டும் கொட்டிவிட்டு அடுத்த வேலையைப் பார்ப்பதற்கு நடையைக் கட்டுவது வழக்கம்.  ஆனால் இந்தப் படத்தைப் பார்த்தபிறகு அவர்களுக்குள் ஒளிந்திருக்கும் அவர்களுடைய உலகத்தைப் பார்க்கவேண்டும் என்ற ஆர்வம் வருகிறது.







கிஷோர் ஒரு என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்.  கமிஷனரின் உத்தரவுக்கு இணங்க தனக்குக் கீழ் நான்கைந்து போலீஸ்காரர்களை வைத்து என்கவுண்டர் செய்கிறார்.  இவரது மனைவி ஆட்டிசம் குறைபாட்டுடன் ஒரு ஆண் குழந்தையை (ஹரி) பெற்றெடுத்துவிட்டு இறந்துபோக அந்தக் குழந்தையை ஊரில் உள்ள தனது தாயிடம் விட்டுவிட்டு சென்னையில் என்கவுண்டர் வேலையைத் தொடருகிறார்.  ஹரிக்கு பத்து வயதே நிரம்பியுள்ள நிலையில் திடீரென்று ஒருநாள் கிஷோரின் தாய் இறந்துவிட, அவனை தானே எடுத்து வளர்க்க வேண்டிய சூழ்நிலைக்கு கிஷோர் தள்ளப்படுகிறார்.  ஒரு பக்கம் கடமை இன்னொரு பக்கம் மூளை வளர்ச்சியில்லாத மகன்.  லீவ் எடுத்துக்கொண்டு மகனைப் படிக்க வைக்கிறார்.  டீச்சராக சினேகா.  அவரும் அவனை நன்கு கவனித்துக் கொள்கிறார்.







இந்நிலையில் திடீரென்று ஹரி காணாமல் போக அவனுக்கு குதிரையைக் கண்டால் குதூகலமாவதும் தொடர்ந்து ஓடுவதுமாக இருப்பதை கிஷோர் கண்டுபிடித்து விடுகிறார்.  அவனுடைய குறைபாட்டைக் களைய ஹரியை ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொண்டு ஜெயிக்கவைக்க முயற்சி செய்கிறார். இறுதியில் ஜெயித்தாரா என்பதை கொஞ்சம் என்கவுன்டர், கொஞ்சம் சென்டிமென்ட் என்று கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குநர் குமாரவேலன்.







கொஞ்சம் இந்தப்பக்கம் விலகியிருந்தால் டாகுமென்டரி படமாகியிருக்கும்.  கொஞ்சம் அந்தப்பக்கம் விலகியிருந்தால் ஒரு போலீஸ் படமாகியிருக்கும்.  ஆனால் இரண்டையும் ஒருசேரக் கொடுத்த விதத்தில் இயக்குநர் ஜெயித்திருக்கிறார் என்றே கூறலாம்.  படம் என்கவுன்டரில் தொடங்கி இது ஒரு ஆக்சன் படமாக இருக்குகோ என்று நினைக்க வைத்தாலும் அடுத்த காட்சியில் ஹரியின் அறிமுகம் நம்மை உருக வைக்கிறது.  அதிலும் கொட்டும் மழையில் நனைந்தபடியே உணர்ச்சியே இல்லாமல் ஹரி சுவரைப் பார்த்தபடி நிற்பதும், கிஷோர் வந்து என்ன சொல்வதென்று தெரியாமல் அழுவதும் நம்மை உணர்ச்சிவசப்பட வைக்கிறது.







படத்தின் முதல் ஹீரோ இயக்குநர் குமாரவேலன் தான்.  உண்மையில் நடந்த ஒரு சம்பவத்தை கொஞ்சம் கற்பனை கலந்து ஆக்சன், சென்டிமென்ட் என்று சரிவிகிதத்தில் கொடுத்ததற்கு பாராட்டுக்கள்.  ஒரே ஒரு குத்துப்பாட்டு திருஷ்டிப்பொட்டு.  அடுத்த ஹீரோ சந்தேகமேயில்லாமல் ஹரியாக நடித்திருக்கும் பிரித்விராஜ் தாஸ் தான்.  குழந்தைகளையும் சிறுவர்களையும் நடிக்கவைப்பது மிகவும் கடினம்.  அதிலும் இந்தமாதிரியான உணர்ச்சிகளைக் காட்டி நடிப்பது என்பது மிக மிகக் கடினம்.  இதில் நடித்த இந்தப்பையனைப் பாராட்டுவதா அல்லது செவ்வனே வேலை வாங்கிய இயக்குநரைப் பாராட்டுவதா என்று தெரியவில்லை.







கிஷோர் முறுக்கு மீசையுடன் இறுக்கமாக இருக்கிறார்.  அவருடைய கண்களாகட்டும் உடல் மொழியாகட்டும், போலீஸாக கோபத்தையும் அதே சமயத்தில் தன் மகனை சாதிக்கவைக்க வேண்டும் என்று உருகும்போது பரிதாபத்தையும் காட்டுகின்றன.  ஆனால் அவரது குரல் உச்சரிப்பு ஏதோ ஒரு மாதிரியாக கஷ்டப்பட்டு தமிழ் பேசுகிறார்.  கொஞ்சம் திருத்திக்கொண்டால் தேவலாம்.  தன் மகனுடன் தானும் வகுப்பறையில் அமர்ந்துகொள்வதும் சக மாணவர்கள் கிண்டல் செய்வதும் பாடம் நடத்தும்போது சினேகா வெட்கப்படுவதை அறிந்ததும் அவர் காட்டும் ரியாக்ஷன் செம.







ரொம்ப நாளைக்குப் பிறகு சினேகா. தன் பங்குக்கு இயல்பாகவும் நேர்த்தியாகவும் செய்திருக்கிறார்.  ஹரி காணாமல் போனதும் பதட்டப்படும் காட்சியிலேயே கலக்கிவிடுகிறார்.  அவரது அம்மாவாக வருபவர், தங்கை, பள்ளியின் ஹெச் எம் மாக வரும் அந்தப் பெண், பள்ளியில் உடன் படிக்கும் பையன்கள், டாக்டராக வரும் யூகி சேது, கோச்சாக வரும் இயக்குநர் ராஜ்கபூர், கிஷோரின் உறவினராக வருபவர்கள் என்று ஒவ்வொருவரும் நல்லவிதமாகச் செய்திருக்கிறார்கள்.







இசை விஜய் ஆண்டனி.  "வாழ்க்கையே உந்தன் கையில்" ம‌ற்றும் "அன்னையின் கருவில்" பாடல்கள் அருமை.  பின்னணி இசை உறுத்தவில்லை.  ஒளிப்பதிவு, படத்தொகுப்பு பற்றி எனக்கு எதுவும் சொல்லத் தெரியவில்லை.  இந்த மாதிரியான குறைபாடுள்ள குழந்தைகளின் பெற்றோருக்கு தன்னம்பிக்கை ஊட்டும் படமாக இருப்பது மகிழ்ச்சி.  எப்படிப்பட்ட கல் நெஞ்சக்காரனாக இருந்தாலும் கிளைமாக்ஸ் காட்சியில் அழுவது உறுதி.  மொத்ததில் ஒரு ஆக்சன் சென்டிமென்ட் படம் பார்த்த திருப்தி.



நன்றி...