நான் கடந்த பிப்ரவரி மாதம் முதல் மெட்ரோவில் பயணித்து வருகிறேன். நங்கநல்லூர் சாலை இருப்பூர்தி நிலையத்திலிருந்து ஆயிரம் விளக்கு நிலையம் வரை கடந்த ஜூன் வரை பயணித்திருக்கிறேன். அதற்குப் பிறகு, என் அலுவலகம் நந்தனத்திற்கு மாறிவிட்டதால் தற்போது வரை நந்தனம் வரை பயணித்துக்கொண்டு இருக்கிறேன்.
மெட்ரோ பயண அட்டையில் இரண்டு வகை உள்ளது. ஒன்று டிராவல் அட்டை, மற்றொன்று டிரிப் அட்டை. நான் இரண்டு அட்டைகளையும் வைத்திருக்கிறேன். இவற்றில் டிராவல் அட்டை என்பது சென்னை மெட்ரோவில் எங்கிருந்தும் எங்கு வரையிலும் பயணிக்கக்கூடியது. டிரிப் அட்டை என்பது குறிப்பிட்ட ஓரிடத்திலிருந்து இன்னோர் இடம் வரை மட்டுமே பயணிக்கக்கூடிய அளவிலான அட்டை. (முந்தைய நிலையங்களிலும் இறங்கிக்கொள்ளலாம்) டிரிப் அட்டைக்கு 20 சதவீதம் தள்ளுபடியும், டிராவல் அட்டைக்கு 10 சதவீதம் தள்ளுபடியும் கிடைக்கும். உதாரணமாக, நங்கநல்லூர் சாலை இருப்பூர்தி நிலையத்திலிருந்து ஆயிரம் விளக்கு நிலையம் வரை பயணக் கட்டணம் ரூ.40. எந்த அட்டையும் இல்லாத ஒருவர் 40 ரூபாய் செலுத்த வேண்டும். ஆனால், டிராவல் அட்டை வைத்திருக்கும் ஒருவர் 36 ரூபாய் செலுத்தினால் போதுமானது. டிரிப் அட்டை வைத்திருக்கும் ஒருவர் 32 ரூபாய் செலுத்தினால் போதுமானது.
பணம் செலுத்தும் முறை: பணத்தை ரொக்கமாகவோ, கிரெடிட் அல்லது டெபிட் அட்டை மூலமாகவோ செலுத்தலாம். டிராவல் அட்டைக்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலுத்தலாம். ஆனால், டிரிப் அட்டைக்கு நாம் எத்தனை டிரிப் என்று கணக்கிட்டு அந்தத் தொகையைத்தான் செலுத்த வேண்டும். உதாரணமாக, என் டிரிப் அட்டையில் வாரம் 320 ரூபாய் (10 டிரிப்) செலுத்துவேன். (காலை அலுவலகம் செல்வதற்கு ஒன்றும், மாலை திரும்ப வருவதற்கு ஒன்றும் ஆக மொத்தம் வாரத்திற்கு 10 டிரிப்). 500 ரூபாயைக் கொடுத்துவிட்டு, டிரிப் அட்டைக்கு 320 போக மீதம் உள்ள 180 ரூபாயை டிராவல் அட்டைக்கு செலுத்திவிடுவேன்.
பணம் கழிவது எப்படி? நுழைவாயிலில் எந்திரத்தாலான தடுப்பு போடப்பட்டிருக்கும். அந்த எந்திரத்தில் அட்டையை வைப்பதற்கான இடம் ஒன்றும் இருக்கும். அந்த இடத்தில் நமது அட்டையை வைத்தால், நாம் உள்ளே செல்வது உறுதி செய்யப்பட்டு, தடுப்பு திறக்கும். டிராவல் அட்டை என்றால், எவ்வளவு தொகை இருக்கிறது என்பதையும், டிரிப் அட்டை என்றால், எத்தனை டிரிப் மீதம் இருக்கிறது என்பதையும் அங்கிருக்கும் திரை காட்டும். நாம் சென்று சேர வேண்டிய நிலையம் வந்து அடைந்ததும், வெளியேறும் வழியில் மீண்டும் நாம் அட்டையை வைக்க வேண்டும். அப்போது அங்கிருக்கும் திரையில் பணம் கழிந்ததைக் காட்டும். டிராவல் அட்டையாக இருந்தால் 36 ரூபாய் கழிந்து மீதம் உள்ள தொகையைக் காட்டும். அதே நேரத்தில், தடுப்புக் கதவும் திறந்துவிடும். டிரிப் அட்டையாக இருப்பின், மீதம் உள்ள டிரிப் எண்ணிக்கையைக் காட்டும். நான் எதற்காக 180 ரூபாயை டிராவல் அட்டைக்கு செலுத்துகிறேன் என்ற கேள்வி எழலாம். முன்பெல்லாம் வண்டி நிறுத்துவதற்குப் பணம் வாங்கிக்கொண்டிருந்தார்கள். எனக்கு 15 ரூபாய் வரும். இப்போது பணம் வாங்குவதை நிறுத்திவிட்டு, அதற்கு பதிலாக டிராவல் அட்டையை வாங்கத் தொடங்கிவிட்டார்கள். அங்குள்ள பணியாளர்களிடம் கிரெடிக் கார்டு தேய்க்கும் எந்திரம் போன்ற எந்திரம் ஒன்று இருக்கும். காலையில் உள்ளே நுழையும்போது அட்டையை அதில் வைத்துவிட, அது நேரத்தைக் குறித்துக்கொள்ளும். மாலையில் வண்டியை எடுத்துவிட்டு வெளியேறும்போது மீண்டும் அட்டையை வைத்தால் அதில் பணம் கழிந்துவிடும்.
இப்போது இன்னொரு வசதியைக் கொண்டு வந்திருக்கிறார்கள். ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களில் டிராவல் அட்டைக்குப் பாதித் தொகை மட்டுமே வசூலிக்கிறார்கள். அதுபோன்ற நாட்களில் எனக்கு டிராவல் அட்டையில் பயணம் செய்வது லாபகரமாக இருக்கிறது.
கோராவில் கேட்கப்பட்ட "சென்னை மெட்ரோ பயண அட்டையை எப்படிப் பயன்படுத்துவது?" என்ற கேள்விக்கு என் பதில்.