முந்திரிவள்ளிகள் தளிர்க்கும்போள் என்றொரு மலையாளத் திரைப்படம் பார்த்தேன். நாயகன் மோகன்லால் திருமணமாகி இரண்டு குழந்தைகள் பெற்ற மத்திம வயதைக் கடந்தவர். கீழாட்டூர் கிராம பஞ்சாயத்து செகரட்டரியாக வேலை செய்கிறார். தனது மனைவி மீனாவிடமும், மகள், மகனிடமும் பாசம் காட்டாமல் எப்போதும் எரிந்து விழுகிறவர். இந்நிலையில், தன்னை வசீகரிக்கும், தான் வசீகரிக்கப்பட்டதாகக் கூறும் ஒரு திருமணமான பெண்ணைச் சந்திக்கிறார். அந்தப் பெண் தான் அவர் மீது மிகுந்த காதல் கொண்டிருப்பதாகக் கூற, சபலத்தில் விழுந்துவிடுகிறார். அடுத்த அடி எடுத்து வைப்பதற்குள் ஒரு பிரச்சினை வந்துவிட, பின் மீண்டும் அந்த விஷயத்தை நினைக்காமல் தன் மனைவியை மட்டுமே நேசிக்கும் ஒரு நல்ல கணவனாக மாறிவிடுகிறார். சுபம்!

மோகன்லாலில் நண்பராக வரும் அனூப் மேனன் இரண்டு செல்போன்களில் நான்கு சிம் கார்டுகளை வைத்துக்கொண்டு நான்கு பேருடன் ஒரே நேரத்தில் தொடர்பில் இருக்கிறார். அவருக்கு ஒரு விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, அவரது மொபைலைக் கையாளும் மனைவிக்கு விஷயம் தெரிந்துவிடுகிறது. அனூப் மேனன் விபத்தில் இறந்துவிட்டதாகக் கூறி அந்த நான்கு 'காதலிகளையும்' அவரது மனைவி கழற்றிவிடுகிறார். தானும் உறவினர்களிடம் பேசும்போது தனது கள்ளக்காதலனுடன் பேசுவது போல் ஒரு மாயையை ஏற்படுத்தி இவரைப் பதற்றம் அடையச் செய்கிறார். பின் உண்மையைக் கூற, சுபம்!

மோகன்லாலின் மகளை ஒரு பணக்கார வீட்டுப் பையன் காதலிக்கிறார். இது தெரிந்து பதற்றம் அடையும் மோகன்லாலும் அவரது மனைவி மீனாவும் என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கிறார்கள். குழந்தைகள் வீட்டில் இருக்கும்போது கணவன், மனைவி இருவரும் படுக்கையறையைப் பூட்டிக்கொண்டு உள்ளே இருப்பது குழந்தைகளின் மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்தியிருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது. ஆனால், இறுதியில் தனது பெற்றோரை மீறி எதையும் செய்ய மாட்டேன் என்று மகள் அந்தப் பையனிடம் கூறிவிடுகிறார். சுபம்!



இவ்வளவுதான் கதை. ஆனால், சுவாரஸ்யத்திற்குப் பஞ்சமில்லை. தன்னை ஒரு பெண் காதலிப்பதாகக் கூறியதும் மோகன்லால் அடையும் சந்தோஷமாகட்டும், அதை மனைவியிடம் வெளிக்காட்டிக்கொள்ளாமல் நடிப்பதாகட்டும், அந்தப் பெண்ணின் கணவர் தொலைபேசியில் மீண்டும் மீண்டும் அழைத்தும் எடுக்காமல் அவசர அவசரமாக அலுவலகம் போவதாகட்டும், அலுவலகத்திற்கு அவர் வந்திருக்கிறார் என்று தெரிந்ததும் வீடு திரும்புவதாகட்டும், மனிதர் பின்னியிருக்கிறார். இதற்கிடையே, தன் மீது சபலம் கொண்டிருக்கும் தனது உதவியாளினியை உதாசீனம் செய்வது, பிரிவு உபசார விழாவின்போது நெகிழ்ந்து பேசுவது, மனைவி மீனாவின் பாட்டுத் திறமையைக் கண்டு வியப்பது என்று இன்னும் நடிப்பில் அசத்துகிறார்.

இந்தப் படத்தில் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம் உண்டு. அதாவது, ஒரு கட்டத்தில் தான் ஒரு பெண்ணின் மீது சபலம் கொண்டதையும், அந்தப் பெண்ணை சந்திப்பதற்கு அவரது வீட்டிற்குச் சென்றதையும் ஒளிவு மறைவின்றி மனைவியிடம் கூறிவிடுகிறார். பதிலுக்கு மீனாவோ தன் மீது சபலம் கொண்ட மூன்று பேர் யார் யாரென்று கூற, அதைக் கேட்டு வியந்துவிடுகிறார் மோகன்லால்.

மோகன்லால் விஷயத்தையும், அனூப் மேனன் விஷயத்தையும் திரைப்படத்தில் மிகவும் எளிதாகக் கையாண்டிருக்கிறார்கள். ஆனால், நடப்பில் நாளிதழ் செய்திகளைப் பார்க்கும்போது, திரைப்படத்தில் கூறப்படும் விஷயங்கள் சாத்தியமா என்றால், இல்லை என்றே சொல்லத் தோன்றுகிறது. நாள்தோறும் ஒருவராவது கொலையுண்ட செய்தி வந்துவிடுகிறது. படிக்காதவர்கள், கூலித்தொழிலாளர்கள்தான் இப்படி கொலை செய்யும் அளவுக்குப் போகிறார்கள் என்று ஒரு தர்க்கம் வரலாம். ஓரளவுக்கு உண்மைதான்.

எனக்கு ஒரு நண்பன் இருந்தான். தான்தான். ஒரு சாலை விபத்தில் இறந்துவிட்டான். ஊரில் சில நாட்களாக திருமணமான ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்திருக்கிறான். அந்தப் பெண் யாரென்று என்னிடம் சொல்லியிருக்கிறான். என்னிடம் சொல்லியிருப்பதாக அந்தப் பெண்ணிடமும் சொல்லியிருக்கிறான். திடீரென்று அவன் சாலை விபத்தில் இறந்துவிட, அந்தப் பெண் வீட்டிலேயே அமர்ந்து யாருக்கும் தெரியாமல் அழுதிருக்கிறார். இன்னொரு நண்பன் இருக்கிறான். தற்போது மதுரையில் நல்ல நிலையில், உயர்பதவியில் இருக்கிறான். அவன் சல்லாபத்தில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கும்போது அந்தப் பெண்ணின் கணவர் வந்துவிட, 'கையும், களவுமாக' சிக்கிவிட்டார்கள். ஆனால், அந்தக் கணவரோ கண்டும் காணாததுமாக வெளியே சென்றுவிட்டார். அவர் தன் மனைவியைத் திட்டவில்லை, அடிக்கவில்லை, கொல்லவில்லை. ஆனால், அந்தப் பெண் இவனிடம் இனிமேல் தன்னை சந்திக்க வரக்கூடாது என்று உறுதியாகச் சொல்லிவிட்டார். நான் இவனிடம், என்னடா ஆச்சு என்று கேட்க, கள்ளக் காதல் எல்லாம் பிடிபடும் வரைக்கும்தான் என்று சாதாரணமாகச் சொல்லிவிட்டான்.

இதே என்னுடைய வாழ்க்கையை எடுத்துப் பார்க்கிறேன். திருமணத்திற்கு முன் வந்த 'பப்பி' காதல்களை மனைவியிடம் ஒளிவு மறைவின்றிக் கூறியிருக்கிறேன். ஆனால், ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும்போது திருமணமாகாத ஒரு பெண் என்னை விரும்புவதாகக் கூற, அவருக்கு நான் பதில் சொல்லாமல் மழுப்பிவிட்டேன். இந்த விஷயத்தை நான் என் மனைவியிடம் சொல்லியிருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று நினைத்துப் பார்க்கிறேன். தினம் தினம் அலுவலகம் புறப்படும்போது சந்தேகக் கண்ணோடு பார்ப்பாரோ, வீட்டுக்கு வந்ததும் கேள்விகள் கேட்பாரோ என்றெல்லாம் எனக்குத் தோன்றி என் மனதில் ஒரு நிம்மதியற்ற நிலை ஏற்பட்டிருக்கும். ஆனால், அவர் அப்படிப்பட்டவர் இல்லை. சில நாட்களுக்குப் பிறகு இந்த விஷயத்தைச் சொன்னபோது, மேற்சொன்ன திரைப்படத்தில் வரும் மீனா கதாபாத்திரம் போல எளிதாகத்தான் எடுத்துக் கொண்டார்.

இன்னும் இருக்கிறது, சரித்திரத்தில் வரும்.