நடைப்பயிற்சிக்குச் செல்வதென்றால், எனக்குப் பல வழிகள் உண்டு. முதலாவது, உள்ளகரம், மடிப்பாக்கம் செல்லும் மார்க்கம். இரண்டாவது, வேளச்சேரி செல்லும் பெரிய சாலை. மூன்றாவது, அதற்கு எதிர்த்திசையான கிண்டி செல்லும் பெரிய சாலை. நான்காவது, நங்கநல்லூர் வீதிகள். இவற்றில் வேளச்சேரி, கிண்டி செல்லும் சாலைகள் விசாலமானவையாக இருந்தாலும், வண்டிகளின் இரைச்சலும், இருசக்கர வாகன ஓட்டிகளின் வேகமும் அமைதியாக நடக்க விடுவதில்லை. மடிப்பாக்கம் செல்லும் சாலையில், சாலை விரிவாக்கப் பணிகள் நடந்துகொண்டு இருப்பதாலும், சமீபத்திய மழையால் சாலையில் ஏற்பட்டுள்ள மேடு, பள்ளங்களாலும் சீரான நடை பயில்வது என்பது கடினமான காரியமான ஒன்றாக இருக்கிறது.


நங்கநல்லூர் நகர வீதிகள் அப்படி இல்லை. தெருக்கள் விசாலமானவையாகவும், சாலைகள் தூய்மையாகவும், குறிப்பாக பெரும்பாலான தெருக்களில் நடந்து செல்வோருக்கான பாதை இருப்பதாலும், நடப்பது மிகவும் எளிதாகவும், மனதுக்கு இதம் தரக்கூடியதாகவும் இருக்கிறது. கடைவீதிகளைக் கடக்கையில், காய்கறிகளின் விலையைப் பார்த்து வைத்துக்கொள்ள முடிகிறது. காலையிலேயே பொறியியல் கல்லூரிக்குப் புறப்பட்டு, பேருந்துக்காகக் காத்திருக்கும் மாணவ, மாணவியரைக் காண முடிகிறது. அன்றைய தின வேண்டுதலை இறைவனிடம் வைத்துவிட்டு வெளியேறும் மக்களிடம்  மனபாரம் இறங்கிய ஆசுவாசத்தை ரசிக்க முடிகிறது. ஜி ஆர் டி நகைக்கடையைக் காண்கையில், ‘இந்தக் கடையினுள் நுழையும் தகுதி என்றைக்கு வாய்க்கப்போகிறதோ’ என்ற எண்ணமும் தோன்றுகிறது.

தெரு நாய்கள் அதிகம் இல்லாதிருப்பது பெரும் ஆறுதல். பயமெல்லாம் இல்லை. சில நாய்கள் ஆட்கள் வருவதைக் கண்டு ஓரமாக ஒதுங்கிவிடும். அல்லது சாலையைக் கடந்து சென்றுவிடும். ஒரு சில நாய்களுக்கும், எருமை மாடுகளுக்கும் இடையே வித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லை. ‘நீ எங்கே வேண்டுமானாலும் செல், நான் இருக்கும் இடத்தை விட்டு எழுந்துகொள்ள மாட்டேன்’ என்ற மனநிலையில் நின்றுகொண்டோ படுத்துக்கொண்டோ வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும். இதுபோன்ற தொல்லைகள் அதிகம் அனுபவிக்கப் பெறாத சாலைகள், நங்கநல்லூர் நகர வீதிகள்.

நான் நாள்தோறும் நடைப்பயிற்சிக்கு வருவதைப் பார்க்கும் அந்த வங்கியின் காவலாளி, இப்போதெல்லாம் அன்பாகப் புன்னகைக்கிறார். செய்தித்தாளை மடித்துக்கொண்டிருக்கும் கடைக்காரர், ‘பேப்பர் வேண்டுமா’ என்பதுபோலப் பார்த்துவிட்டு, அமைதியாகத் தன் பணிகளைத் தொடர்கிறார். அந்தக் குண்டுப் பெண்மணி இந்தக் குளிர் நேரத்திலும் வியர்க்க, விறுவிறுக்க ‘உஸ், உஸ்’ என்று மூச்சு வாங்கிக்கொண்டு நடக்கையில், இனி வரும் நாட்களில் தனக்கு சர்க்கரையோ, இரத்தக் கொதிப்போ வந்துவிடக் கூடாது என்ற என்ற மேனக்கடல் இருப்பதாகவே எனக்குத் தெரிகிறது. தேநீர்க் கடையிலிருந்து வெளியேறும் இதமான தேநீர் வாசம், ‘என்னை சுவைத்துப் பாரேன்’ என்று அழைப்பதாகத் தெரிந்தாலும், நடைப்பயிற்சியின் நோக்கம் கெட்டுவிடக் கூடாதென்பதில் உறுதியாக இருப்பதால், கடையைக் கடக்கும்போது கிடைக்கும் ஓரிரு விநாடி வாசனையை மட்டும் நுகர்ந்து அனுபவித்துவிட்டுச் செல்கிறேன்.

நங்கநல்லூரின் பல இடங்கள் தாழ்வான பகுதியாக அமைந்திருப்பதால், சில வீடுகள் நிரந்தரமாகப் பூட்டப்பட்டும், சில வீடுகளில் தண்ணீர் தேங்கி நிற்பதையும் காணமுடியும். முதல் மெயின் சாலையில் ஒரு உணவகம் உண்டு. ஆரிய பவனோ, ஆரிய நிவாஸோ ஞாபகமில்லை. கடந்த ஆண்டில் ஒரு நாள் வடைக்கும், காப்பிக்கும் ஆசைப்பட்டு, அங்கு சென்று மழையில் சிக்கிக்கொண்டோம். சாலையில்கூட அவ்வளவு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடவில்லை. உணவகத்தின் உள்ளே முழங்கால் அளவு தண்ணீர் பெருகிவிட்டது. கடைக்காரர்கள் தங்களது பொருட்களைப் பாதுகாத்துக்கொள்ளும் நோக்கில் கீழிருக்கும் பொருட்களை மேசை மீது வைக்கும் பணியில் இறங்கியிருந்தனர். இதுபோன்ற அனுபவங்களும் இந்த நகரத்தில் கிடைக்கும்.

வீட்டின் அருகே சொல்லிக்கொள்ளும்படியாக பெரிய பூங்கா எதுவும் இல்லை. ஆனால், நங்கநல்லூரில் திரும்பும் இடமெங்கும் பூங்காக்கள். சிறிதும், பெரிதுமாக ஆங்காங்கே கண்களில் தென்படும். பெரும்பாலான பூங்காக்களில் ஊஞ்சல் உள்ளிட்டவை இருந்து, குழந்தைகளுக்குப் பிடித்தமான இடமாக அமைந்திருக்கும். நங்கநல்லூரின் எந்தக் கோடிப் பகுதியாக இருந்தாலும், அதிகபட்சம் ஒரு கிலோமீட்டர் தொலைவுக்குள் ஒரு பூங்கா காணக் கிடைக்கும். இன்றைக்கு சுதந்திர தினப் பூங்காவுக்குள் நுழைந்தேன். சிறியதும் இல்ல்லாமல், பெரியதும் இல்லாமல் ஒரு நடுத்தர அளவிலான பூங்கா. உள்ளேயே சிறு சிறு விளையாட்டுத் திடல்கள். அங்கு சில இளைஞர்கள் ஷட்டில் விளையாடிக் கொண்டிருந்தனர். ஓரளவுக்கு விசாலமான நடைபாதை. ஒரு இடத்தில் மட்டும் சிமெண்ட் தரையில் கூழாங்கற்கள் சீரான இடைவெளியில் பதிக்கப்பட்டிருந்தன. அவற்றில் ஒருவர் வெறும் காலால் அழுத்திக்கொண்டிருந்தார். அக்குபஞ்சராக இருக்கக்கூடும். ஊர்க்கதைகளைப் பேசிக்கொண்டு நடக்கும் குண்டான ஆசாமியும், அதைக் கேட்டுக்கொண்டும், ஆமோதிப்பதாகத் தலையாட்டிக்கொண்டும், உம் கொட்டியபடியும் உடன் நடந்து செல்லும் ஒல்லி ஆசாமி. நண்பர்கள் போலத் தெரிந்தது. ஒரு தம்பதி வீட்டுப் பிரச்சினையைப் பேசிக்கொண்டே நடந்து கொண்டிருந்தனர். அநேகமாக, பூங்காவை இரண்டு சுற்று சுற்றி வருவதற்குள் அவர்களுக்குள் ஊடல் வந்துவிடும். அவர்களது உரையாடல் அப்படித்தான் இருந்தது. தனியாக வந்திருந்த ஒருவர் மட்டும் யாரைப் பற்றியும் கவலைப்படாமல், செடிகளைச் சுற்றிலும் அமைக்கப்பட்டிருக்கும் கம்பியைப் பிடித்துக்கொண்டு அமர்வதும், எழுவதுமாக இருந்தார். இன்னும், இன்னும் எவ்வளவோ பார்த்திருந்தாலும், மனதில் நின்றவை இவ்வளவே.

நடைப்பயிற்சி நன்றாக இருக்கிறது. குறிப்பாக பூங்காவில் செய்யப்படும் நடைப்பயிற்சி. சிலர் இரண்டு, மூன்று பேராக நடைபாதையை அடைத்துக்கொண்டு செல்வார்கள். அவ்வளவு பெரிய மெரீனா கடற்கரையிலேயே பத்துப் பதினைந்து பேராக சாலையை அடைத்துக்கொண்டு செல்லும் படித்த மேதாவிகளைப் பார்க்கமுடியும் எனும்போது, இவர்களைக் குறை கூற முடியாது. அவர்களை இன்முகத்துடன் கடந்துசெல்ல வேண்டும், அவ்வளவுதான்.


இன்றைய நடை ஐம்பத்து மூன்று நிமிடங்களில் ஐயாயிரத்து அறுநூறு தப்படிகள் (Steps).