இருபத்தைந்து வயது இளைஞர் அவர். பெரும் பணக்காரர். எல்லாம் அப்பா சொத்து. அப்பாவுக்கு ஏகப்பட்ட தொழில். அதனால் மகனுக்கு ஒரே வேலை – செலவ செய்வது. ஊதாரித்தனமாக என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையையும் செய்வார்.


சென்னையிலுள்ள மிகப்பெரிய கேளிக்கை விடுதியில் உறுப்பினர் அவர். ஒரு நாள் சக உறுப்பினரான நண்பர் ஒருவர் தனக்குத் தன் தந்தை பரிசாக அளித்த BMW கார் ஒன்றைக் காட்ட  இவருக்கும் அதன் மீது ஆசை வந்துவிட்டது. தான் அதைவிட விலை உயர்ந்த அதே நிறுவன கார் ஒன்றை வாங்குவதாக மனதுக்குள் சபதம் எடுத்துக்கொள்கிறார். வீட்டுக்கு வந்து தன் தந்தையிடம் தனக்குப் புதிதாக BMW கார் வேண்டுமென்று கேட்கிறார். தந்தையோ ‘உன்னிடம் இருக்கும் ‘ஆடி’ காருக்கு என்ன குறைச்சல்?’ என்று கேட்க, மகனும் தன்னுடைய நண்பர் வைத்திருக்கும் காரை விட விலை உயர்ந்ததாய் ஒன்றை வாங்குவதற்கு ஆசைப்படுவதாகச் சொல்கிறார்.

இப்போதிருக்கும் ஆடி கார் இவருடைய பிறந்த நாளுக்கு இவருடைய தந்தை பரிசாகத் தந்தது. வாங்கி ஆறு மாதங்களே ஆகியுள்ள நிலையில் எதற்காக மேலும் செலவு செய்யவேண்டும்? முடியாது என்கிறார் தந்தை. அதற்கு மகனோ, தனக்கு அடுத்த பிறந்த நாள் வருவதற்குள் தனக்கு வேண்டும் என்று கறாராகச் சொல்லிவிடுகிறார்.

சரி, ஒரே பிள்ளை. கேட்டதை வாங்கிக் கொடுத்துவிடுவோம் என்று புதிய காருக்கு ஏற்பாடு செய்கிறார். இங்கே முக்கியமான விஷயம் ஒன்றை கவனிக்க வேண்டும். மகனார் தற்போது ஓட்டிக்கொண்டிருக்கும் ஆடி கார் தந்தையார் உயர் பதவி வகிக்கும் நிறுவனத்துக்குச் சொந்தமானது. ஆக, அந்த நிறுவனத்தின் மேனேஜருக்கு ஆடி காரை விற்கவும் BMW காரை வாங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. மேனேஜரும் தனக்குத் தெரிந்தவர்களிடம் மூலமும் செய்தித்தாள் விளம்பரங்கள் மூலமும் ஏற்பாடு செய்கிறார்.

திருப்பூரில் பனியன் தொழிற்சாலை ஒன்றை நடத்தி வரும் ஒருவருக்கு சொந்தமாக ஆடி கார் வாங்கவேண்டும் என்பது நீண்ட நாள் அவா. ஆறு மாதங்களே ஆகியிருக்கும் அந்தக் காரை பேரம் பேசி நாற்பத்தைந்து லட்சம் கொடுத்து வாங்கிவிடுகிறார். அந்தக் கார் வாங்கப்படும்போது அதன் விலை எழுபது லட்சங்கள். இந்த நாற்பத்தைந்து லட்சத்திலும் முப்பத்தைந்தை காசோலையாகவும் பத்து லட்சத்தை (கணக்கில் வராத பணம்) காசாகவும் கொடுத்துவிடுகிறார். ஆக, அந்த நிறுவனத்துக்கு கார் விற்ற வகையில் நஷ்டம் எவ்வளவு?

காரின் விலை – ரூ.7௦,௦௦,௦௦௦ தேய்மானம் சுமார் – 3,௦௦,௦௦௦ போக விலை ரூ.67,௦௦,௦௦௦ என்று வைத்துக்கொள்வோம். விற்ற விலை ரூ. 35,00,000. இதில் விற்பனை வரி ரூ.1,67,௦௦௦/- போக காரின் விலை ரூ. 33,30,000. அந்த ஆடி காரை விற்றதில் நிறுவனத்துக்கு நட்டம் சுமார் ரூ.33,70,௦௦௦/-. அங்கு வேலை செய்யும் பலரும் பலவகையில் செலவுகளைக் குறைத்து – நிர்வாகிகளால் குறைக்கவைக்கப்பட்டு – நிறுவனத்துக்குத் தன்னால் ஒரு ரூபாய் லாபம் கிடைத்தாலும் புளகாங்கிதப்பட்டு ஒவ்வொரு செயலையும் செய்யும்போது ஊதாரித்தனமாக ஊர்சுற்றும் இவரால் முப்பத்து மூன்று லட்சங்கள் நட்டம்.

இவருடைய தந்தை மிகப்பெரிய பக்திமான். தன்னுடைய சொந்த ஊரிலுள்ள ஒரு கோவில் கும்பாபிஷேகத்துக்கு ஐந்து லட்சத்தைக் கொடுக்கிறார். அதற்காக கோவிலின் கல்வெட்டில் இவருடைய பெயர் முதன்மையாகப் பொறிக்கப்படுகிறது. பூசாரிகளுக்கும் தட்டில் ஐந்தாயிரத்து ஒன்று வைக்கிறார். அவர்களும் இவருக்கு மாலையிட்டு மரியாதை செய்து வாயார வாழ்த்துகிறார்கள்.

#blackmoney