ஞாயிறன்றே பார்த்துவிட்டேன். பீனிக்ஸ் மாலில் ஆன்லைனில் புக் செய்யலாம் என்று போனால் முதல் வரிசை சீட்கள் மட்டுமே இருந்தன. சப்தம் அதிகமாக இருக்கும், மகள் பயப்படுவாள். மேலும் கழுத்து வலி ஏற்படும் என்பதால் ஆன்லைன் புக்கிங்கைத் தவிர்த்துவிட்டு ஆப்லைனில் ஆளைப்பிடித்து காலை 11.50 மணி காட்சி பார்த்தாயிற்று.



போன வாரம் தான் MLM பற்றிய என் அனுபவத்தை ஒரு பதிவாக எழுதியிருந்தேன். சதுரங்க வேட்டையும் இம்மாதிரியான நிறுவன அதிபர்களின் மனநிலையையும் இதில் பணம் கட்டி ஏமாறும் என் போன்ற பல இளிச்சவாயர்களின் ஏமாளித்தனத்தையும் சிம்பிளி சூப்பராகத் தொட்டுச்செல்கிறது. வீ கேன் நெட்வொர்க்கில் மீட்டிங் சென்றபோது நானும் கூட்டத்தோடு 'பணம் தான் முக்கியம்' என்று கோஷம் போட்டவன் என்பது மீண்டும் ஞாபகத்துக்கு வந்துசென்றது.

நாலு கிலோ மண்ணுளிப் பாம்பு பதினைந்து கோடிக்கு விலைபோகும் என்று கூறி நாயகன் மளிகைக்கடை செட்டியாரிடம் ஐந்து லட்சத்தை ஆட்டையைப் போடுவதிலிருந்து தொடங்குகிறது கதை. தொடர்ந்து MLM மூலம் பல கோடி சுருட்டுகிறார். இது போலி என்று தெரிந்து நிறுவனத்தை மக்கள் முற்றுகையிட பணத்துடன் எஸ்கேப் ஆகிறார். ஒரு கட்டத்தில் போலீசில் சிக்கிவிடுகிறார் நாயகன். கோர்ட்டில் ஆயிரம் பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட, பணத்தை வைத்தே வெளிவருகிறார். கோர்ட்டிலிருந்து வெளியே வரும்போது ஒரு கும்பல் அவரைக் கடத்துகிறது. அதற்குப் பிறகான கதை விறுவிறுப்பாக நகர்கிறது.



படத்தின் முக்கிய அம்சம் வசனங்கள். எல்லாமே செம ஷார்ப். "Money is always ultimate" என்பது முதல் பல வசனங்கள் நம்மையும் மீறி கைதட்ட வைக்கின்றன. "என் பொண்டாட்டி விபரம் தெரியாம விஜய்யை தாக்கிட்டா" என்று இளவரசு பேசும்போது அரங்கமே சிரிப்பொலியில் அதிர்கிறது. "இந்த தண்ணி அமெரிக்காவுல ஒரு ஏரியில இருந்து இறக்குமதி செய்யப்பட்டது, அந்த ஏரி பத்தாயிரம் கோடி ரூபாய்க்கு ஏலம் போயிருக்கு. சந்தேகம் இருந்தா நெட்ல பாத்துக்கோங்க" என்ற வசனம் எர்வாமேட்டினை நினைவுபடுத்திச் சென்றது. அடுத்ததாக பின்னணி இசை. இயக்குநர் சொல்ல வரும் விஷயத்துடன் நாம் பயணிக்க பெரும் பலமாக அமைந்திருக்கிறது. 

நகைக்கடையை கொள்ளையடிக்கப் போகிறார்கள் என்று நாம் எதிர்பார்த்திருந்தால் வேறுமாதிரியான ஏமாற்றுவித்தை அரங்கேறுகிறது. இப்படியெல்லாம் சிந்தித்து நூதனமாக கொள்ளையடிக்கும் இல்லை இல்லை, ஏமாற்றும் திறமை எப்படி வந்தது என்று ஆச்சரியப்படவைக்கும் காட்சிகள்.

நாயகன் செம நடிப்பு. முத்துக்கு முத்தாக படத்தில் நடித்திருந்தாரோ? ஞாபகம் இல்லை. தெரிந்தவர்கள் சொல்லுங்கள். நாயகி இஷாரா நாயரின் குரல் அஞ்சலியின் குரலை ஞாபகப்படுத்துகிறது. பணம் தான் வாழ்க்கை, பணமின்றி எதுவுமில்லை என்ற நாயகனின் கொள்கைக்குக் காரணமான அந்த flashback காட்சி ஐந்தே நிமிடம் வந்தாலும் நச்சென்று மனதில் தங்கிவிடுகிறது.

கர்ப்பிணி மனைவிக்கு கத்தியுடன் காவலுக்கு ஆள் இருக்க, அதற்குப் பின்னான காட்சிகள் ஒரு படபடப்புடன் இருக்க வேண்டாமா? நாயகன் செய்யும் மூளைத் தந்திரங்களில் அதை நாம் மறந்துவிடுகிறோம் என்பதே உண்மை. தொய்வான ஓரிரு காட்சிகள் இருந்தாலும் அவற்றை புறந்தள்ளி விடுகிறபடியான சுவாரஸ்யங்களை பல காட்சிகள் கொண்டிருக்கின்றன. பல புதிய யுக்திகள், ஐடியாக்கள், காட்சியமைப்புகள் மற்றும் வசனங்கள் ஆரம்பம் முதல் கடைசி வரை நம்மை படத்துடன் கட்டிப்போடுகின்றன. மொத்தத்தில் இயக்குனர் வினோத் முதல் பந்திலேயே சிக்சர் அடித்திருக்கிறார்.